யேசுதாஸ் நல்லவரா?
கறுப்புக் குல்லா, கறுப்புக் கண்ணாடி, மிகப் பெரிய புன்னகையுடன் சுவரொட்டிகளில், செய்தித் தாள்களில், தொலைக்காட்சியில் நாள்தோறும் காட்சி தரும் அந்த மனிதரின் பெயர் ஐ.பி.யேசுதாஸ். உற்சாகமாகத் தோன்றி கவர்ச்சிகரமான விளம்பரங்கள் தந்து அசத்துகிறார். அவர் நடந்து வரும்போது பெண்கள் பூ போட்டு வரவேற்கிறார்கள். வட்டியே இல்லாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன், வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்குக் கடன் என்கின்றன அந்த விளம்பரங்கள். ''அடுத்து கட்சி ஆரம்பிக்கப்போகிறார்'' என்றும் சிலர் பீதியைக் கிளப்புகிறார்கள். யார் இந்த யேசுதாஸ்?
'அப்ரோ மைக்ரோ ஃபைனான்ஸ்’ நிறுவனத்தையும் அதன் உரிமையாளரான அந்த ஏழைப் பங்காளரையும் பற்றி நமக்குக் கிடைத்த தகவல்கள் எல்லாமே முன்னுக்குப் பின் முரணாகவேஇருந்தன.
ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டோம். ''அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. எங்களுடைய ஸ்பெஷல் டீம், அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
மகளிர் சுய உதவிக்குழுப் பயனாளிகள் என்ன சொல்கிறார்கள்?
பூந்தமல்லி நாசரேத் பேட்டையில் உள்ள சாய் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடமும், வேலூர் அழகாபுரத்தைச் சேர்ந்த அன்னை தெரசா மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமும் பேசினோம். ''இதற்காக ஏஜென்ட் ஒருத்தர் இருக்கிறார். அவர் மாசத்துல ஒருநாள் மட்டும்தான் வருவார். எங்களுடைய விவரங்கள், ரேஷன் கார்டு ஜெராக்ஸ், ஒரு பிளாங்க் செக் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு எங்களுக்குக் கடன் கிடைக்க ஏற்பாடு செஞ்சார். கடன் கிடைச்சா, அதில் அஞ்சு முதல் பத்து பெர்சன்ட் வரை அவருக்கு கமிஷன். கடன் வாங்கணும்னா, அப்ரோ நிறுவனத்தில் மெம்பர் ஆகணும். அதுக்கு 2,500 ரூபா கட்டணும். வட்டி இல்லாக் கடன் எல்லாம் கிடையாதுங்க. 100 ரூபாய்க்கு 50 பைசா வட்டி வாங்குறாங்க'' என்றனர்.
அப்ரோவைப் பற்றி எங்கே யாரிடம் விசாரித்தாலும், வினோதமான தகவல்கள். அதன் நிறுவனர் ஐ.பி.யேசுதாஸைச் சந்திக்க முயற்சித்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பின் தொலைபேசியில் அவரைப் பிடித்தோம். ஆனால், 'நான் யேசுதாஸின் பி.ஏ. சதீஷ் பேசுறேன்' என் றது அந்தக் குரல். ''சார் இப்போ அவுட் ஆஃப் ஸ்டேட். அவர்கிட்ட நேரடியாப் பேச முடியாது. இப்போ பேட்டி கொடுக்கும் ஐடியாவும் இல்லே. நெக்ஸ்ட் மன்த் ட்ரை பண்ணுங்க'' என்றார். மேற்கொண்டு பேச முயன்ற நம்மிடம், ''எனக்கு நிறைய வொர்க் இருக்கு. நான் இவ்ளோ நேரம் யார்கிட்டயும் பேசியதில்லை.'' என்றவர், ''என் னோட நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?'' என்று கேட்டுவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார்.
யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!
No comments:
Post a Comment