Tuesday 26 June 2012

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?



சத்தலான அழகு, அல்ட்ரா மாடர்ன் தோற்றம், நுனி நாக்கு ஆங்கிலம் என்று படு ஸ்டைலாக இருப்பவர்கள்கூட சில சமயம் அருகில் வந்து வாய் திறந்தால், 'குப்’ என்று துர்நாற்றம் தூக்கும். தர்மசங்கடத்தில் நெளிந்து வளைந்து நாம் டான்ஸ் ஆட வேண்டி இருக்கும். ''உயிர் போற அவசரமான வேலையாக இருந்தாலும், அவரிடம் நேரில் சென்று பேச மாட்டேன். போனோட முடிச்சுக்குவேன்'' என்று ஒரு சிலர்குறித்து பயத்தோடும் முகச்சுழிப்போடும் சொல்லப்படுவதற்குக் காரணம்... வாய் துர்நாற்றம்!
ஒழுங்காகவும் முறையாகவும் பற்களை பிரஷ் பண்ணாமல் இருப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு முதல் காரணம். ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு தடவையாவது பல் துலக்குவது அவசியம். குறிப்பாக, இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்னர் பல் விளக்குவது மிகவும் அவசியம்.
சில வெளி சமாச்சாரங்களும் இருக்கின்றன. வெங்காயம், பூண்டு இதெல்லாம் சாப்பிட்டால், அந்த வாடை அதிக நேரம் வாயிலேயே சுற்றிக்கொண்டு இருக்கும். சின்ன வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிடுவது பல நன்மைகளைத் தரும். அது ஒரு கிருமிநாசினியும்கூட. ஆனால், வாயில் வெங்காய வாடை லேசில் போகாது.
பொடி போடுவது, வெற்றிலை, புகையிலை, ஜர்தா இந்த மாதிரி ஐட்டங்களைப் பயன்படுத்துவதும் 'வாசனை’ வீசச் செய்யும். புகைப் பழக்கம்பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்தனை தடவை வாய் கொப்பளித்தாலும் நிகோடின் நாற்றம் போகவே போகாது. மது நிச்சயமாகத் தன்னோட 'வாசனை’யைக் காட்டிக்கொடுத்துவிடும்.
இந்தப் பொதுக் காரணங்களைத் தவிர வேறு என்னென்ன காரணங்களால் வாயில் துர்நாற்றம் ஏற்படும் என்பது குறித்து, மருத்துவர் வி.எஸ்.நடராஜன் விவரிக்கிறார்.
''மருத்துவ மொழியில் வாய் நாற்றத்தை 'ஹாலிடோஸிஸ்’(Halitosis)  என்பார்கள். வாய் நாற்றம் ஏற்பட பாக்டீரியாக்களே முக்கியக் காரணம். வாய்க்குள்ளே அவை வளருவதற்குத் தேவையான ஈரம், வெதுவெதுப்பு, உணவு எல்லாம் கிடைப்பதால் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் ஒவ்வொருவர் வாயிலும் இருக்கின்றன. காலையில் எழும்போது அநேகமாக எல்லோருடைய வாயில் இருந்தும் நாற்றம் வீசும். இது 'ஹாலிடோஸிஸ்’ வகையில் சேராது. பகலில் உமிழ்நீர் வாயில் அதிகமாகச் சுரக்கும். இது பாக்டீரியாக்களைக் கழுவிக்கொண்டு போய்விடும். ஆனால், ராத்திரி உமிழ்நீர்ச் சுரப்புக் குறைவு. அதனால்தான் விடிந்து எழும்போது இந்த 'ஸ்மெல் எஃபெக்ட்’.
உண்மையான பற்களைத் துலக்காவிட்டால் எப்படி வாய் நாறுமோ அதேபோல, செயற்கைப் பற்களையோ அல்லது பல் செட்டோ வைத்திருப்பவர்கள், அதை முறையாகக் கழுவிச் சுத்தம் செய்யாமல் இருந்தாலும் வாய் நாற்றம் ஏற்படும்.
வாயில் புண் இருப்பது அல்லது ஈறுகளில் நோய்த்தொற்று இருப்பது ஆகியனவும் வாய் நாற்றத்துக்குக் காரணங்கள். இதேபோல, தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் நோய்த் தொற்று இருந்தாலும்கூட வாய் நாறும். குடலில் புண் இருந்தாலும் மிகுந்த நாற்றம் அடிக்கும்.
இன்னொரு காரணம் வாய் உலர்ந்து போய்விடுவது. டாக்டரிடம் ஆலோசனை பெற்று சரியான மருந்து உட்கொண்டால் இது சரியாகிவிடும்.
மண்டல நோய்கள் (ஷிஹ்stமீனீவீநீ பீவீsமீணீsமீ) என்று சொல்லப்படும் சிறுநீரகம், இதயம், நரம்பு மண்டலம் சம்பந்தமான நோய்கள் இருந்தாலும் வாய் நாற்றம் அடிக்கும். நீரிழிவு நோய் இருந்தால் வாயில் நாற்றத்துடன் சேர்ந்து லேசாகப் பழ வாடையும் வரும். சிறுநீரக வியாதிகள் இருந்தால், லேசாகச் சிறுநீர் வாடை வீசும்!
வயிற்றில் குடற்புழுத் தொற்று இருந்தாலும் சிலருக்கு இந்தப் பிரச்னை இருக்கும். சில சமயம் தொண்டைப் பகுதியில் உள்ள சதை சற்று பலவீனம் அடையும்போது கட்டி ஒன்று தோன்றி, சிறிய பலூன் அளவுக்கு வளர்ந்து பின்னர் உடைந்தும்விடும். அதில் உணவுத் துணுக்குகள் சேரும்போதும் வாய் நாற்றம் ஏற்படும். வாயில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் நாற்றம் அடிக்க வாய்ப்பு உண்டு.
பொதுவாகவே நமக்கெல்லாம் ஒரு வழக்கம். பல்லில் ஏதாவது கோளாறு என்றால்தான் பல் மருத்துவரைப் போய்ப் பாப்போம். ஒரு தொந்தரவும் இல்லையென்றாலும்கூட வருடத்துக்கு ஒருமுறை பல் மருத்துவரைப் பார்த்துப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் வாய் நாற்றம் ஏற்படக் கூடிய பல வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்திக்கொள்ள முடியும்.
நிறையத் தண்ணீர் குடிப்பது நல்லது. அடிக்கடி வாய்க் கொப்பளித்தும் துப்பலாம்.  சிறு தீனிகளை இடையே சாப்பிட்டாலும் வாய் கொப்பளிப்பது அவசியம்.
ஏலக்காயை மெல்வது தற்காலிகமான நிவாரணம் தரும். அங்கீகரிக்கப்பட்ட மவுத் வாஷ்களைப் பயன்படுத்தலாம்'' என்கிறார் நடராஜன்.
மேலே சொன்ன வழிகளை எல்லாம் கடைப்பிடித்தால், பொன் மலர் நாற்றமுடைத்து என்ற பழமொழிக்கு ஏற்ப விளங்குவீர்கள். கவனிக்க... நாற்றம் என்கிற வார்த்தைக்கான பழந்தமிழ் அர்த்தம் நறுமணம்!

பிரசவத்துக்குப் பிறகு... அம்மா... குண்டம்மா ஆவது ஏன்?



'ஐஸ்வர்யா ராய் உண்டானாலும் நியூஸ். குண்டானாலும் நியூஸ்!’ என்பது இப்போது பிரபல ஜோக். ரொம்ப காலமாகவே அவர் 'ஃபிஃப்டி கே.ஜி. தாஜ்மஹால்’ ஆகத்தான் இருந்தார். இப்போது தாய்மை தந்த பூரிப்பில் கொஞ்சம் குண்டடித்து இருக்கிறார். பிரசவத்துக்கு முன் மட்டும் அல்ல; பிரசவத்துக்குப் பின்னும் ஐஸ்வர்யாதான் ஹாட் டாபிக்.
ஐஸ்வர்யாவின் எடை கூடிவிட்டதைப் பற்றிய விவாதங்கள் அனல் பரப்புகின்றன. நமக்கு இந்த விவாதம் தேவையற்றது. ஆனால், குழந்தைப் பேறுக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பதுகுறித்த அலசல் நிச்சயம் அவசியம். இதுகுறித்து மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத்திடம் கேட்டோம்.
'தன்னுடைய சராசரி எடையைக் காட்டிலும் கர்ப்ப காலத்தில் 10 முதல் 12 கிலோ வரை ஒரு பெண்ணுக்கு எடை அதிகரிப்பது இயல்புதான். ஆனால், குழந்தை பிறந்த பிறகு ஆறு முதல் ஏழு கிலோ வரை உடல் எடை குறைவது இயல்பாக நடக்கும் விஷயம். மீதம் உள்ள எடையைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைக்க வேண்டும்.
நம் ஊரில், 'தாய்ப்பால் கொடுக்கப்போகிறாய், இரண்டு பேருக்கும் சேர்த்துச் சாப்பிடு’ என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதனால், அளவுக்கு அதிகமான உணவையும் கொழுப்பு நிறைந்த உணவுகளையும் இளம் தாய்மார்கள் சாப்பிட்டுவிடுகிறார்கள். உடல் எடை குறையாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். அதேபோல பூண்டு நல்லதுதான். ஆனால், பூண்டை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால், உடல் எடை கூடிவிடும். சுகப் பிரசவம் ஆனவர்களாக இருந்தாலும்சரி, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டவர்களும்சரி... மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு, எளிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் சாப்பாட்டை மட்டும் அதிகரித்தால், எடை குறையாது. மாறாக எடை கூடிவிடும்.
தைராய்டு சுரப்புகளில் குறைபாடு, ஹார்மோன் சமன்பாட்டில் பாதிப்பு, கர்ப்பகாலச் சர்க்கரை நோய் போன்ற சில காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படலாம். ஆனால், இவற்றுக்கான வாய்ப்புகள் குறைவு'' என்கிறார் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத்.
'ஆரோக்கிய உணவு, மிதமான உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றின் மூலம் கர்ப்பக் காலத்தில் அதிகரித்த கூடுதல் உடல் எடையை இரண்டே மாதங்களில் குறைத்துவிட முடியும்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார் உடல் எடை மேலாண்மை ஆலோசகரான டாக்டர் சுனிதா ரவி.
''கர்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையைக் குறைத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் முதல் அட்வைஸ், 'பொறுமை’ என்பதுதான். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்துவிடவில்லை. எடை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆனது. அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்துவிடாது.  மற்ற பெண்களுடனோ, சினிமா பிரபலங்களுடனோ தங்களை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்பதுதான் முக்கிய அறிவுரை' என்றவர் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ நான்கு வழிகளையும் சொன்னார்.
போதுமான அளவு சாப்பிடுங்கள்
குழந்தைப் பேறு என்பது மனதளவில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டோடு இருந்தால், அது மேலும் மன இறுக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, உணவுக் கட்டுப்பாடோ அல்லது சாப்பிடாமல் இருப்பதோ வேண்டாம். பசிக்கும்போது சாப்பிடுங்கள். நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, பழங்கள், காரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சாப்பிடுங்கள். இவை உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், உங்கள் தினசரி உணவில் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச் சத்து நிறைந்ததாகவும் கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கட்டும். அதிக சர்க்கரை, க்ரீம், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
தண்ணீர் குடியுங்கள்
உடலின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க, நாளன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவும். மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும்.
கை கால்களுக்கும் வேலை கொடுங்கள்
உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது. அது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத் தன்மையைக் கூட்டிவிடும்.
நேரத்துக்குத் தூங்குங்கள்
இரவு நேரத்தில் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் பசித்தால் காய்கறி மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடலாம். குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுங்கள். சரியாகத் தூங்காமல் இருப்பதும் தேவைக்கு அதிக நேரம் தூங்குவதும் உடல் எடையை அதிகரித்துவிடும். தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது.
பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகுதான் பெண்களுக்கு எடை கூடுகிறது. வயது அதிகரிப்பது மற்றும் இரண்டு குழந்தைகளைப் பராமரிப்பதால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவையே இதற்குக் காரணம். முன் எச்சரிக்கையுடன் இருந்தால், உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வளவையும் மீறி உடல் எடை கூடினால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நலம்.''

Friday 15 June 2012

காசி ஜெகநாதர் கடவுளுக்கு காய்ச்சல். 15 நாட்கள் நடை சாத்தப்படும் என அறிவிப்பு


உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அஸ்ஸி பகுதியில் கடவுள் ஜெகநாதர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜெய்ஸ்தா பூர்ணிமா (முழு நிலவு) அன்று கடவுளுக்கு புனித நீராட்டல் நடைபெறும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்கள் ஜெகநாதர் சிலைக்கு அளவில்லாமல் புனித நீர் ஊற்றுவர்.
 
அதேபோல், சமீபத்தில் புனித நீர் அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களால் ஆயிரக்கணக்கான குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு, ஜெகநாதர் மீது ஊற்றப்பட்டது.   இதன் காரணமாக கடவுள் ஜெகநாதருக்கு, சுகவீனம் ஏற்பட்டது. கடுமையான ஜலதோசம், இருமளால் அவதிப்படுகிறார். கடவுள் ஜெகநாதர் ஒய்வு எடுப்பதற்காக 15 நாட்களுக்கு நடை சாத்தப்பட்டது.
 
இதனால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைந்து குணமடைய பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். ஜெகநாதருக்கு, அவரது குடும்ப டாக்டர் தினமும் இரண்டு வேளை மூலிகையால் தயாரிக்கப்பட்ட மருந்தை அளித்து வருகிறார்.  
 
என்ன? கடவுளுக்கும் காய்ச்சலா? என்று ஆச்சரியப்பட வேண்டாம். இது ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு சடங்கு, சம்பிரதாயம் ஆகும். கடவுளை மனிதப் பிறவியாக பாவித்து செய்யப்படும் சடங்குகளில் இதுவும் ஒன்று.
 
ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில், முழு நிலவு அன்று, ஜெகநாதருக்கு அளவில்லா புனித நீர் ஊற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். அதை தொடர்ந்து அதிகளவில் தண்ணீரில் குளித்ததால் சளிப்பிடித்து, இருமல் ஏற்பட்டதாக அறிவித்து கோவில் நடையை சாத்தி விடுவர்.
 
எப்படி மனிதர்களுக்கு டாக்டர் மூலம் சிகிச்சை அளித்து, ஓய்வு கொடுக்கப்படுமோ, அதுபோல் கடவுள் ஜெகநாதருக்கும் செய்யப்படும்.   பண்டிட் ஒருவர் கடவுளுக்கு சேவை செய்யும் டாக்டராக பாவித்து, கடவுள் சிலைக்கு மூலிகையில் தயாரான கலவைகளை தினமும் இரண்டு வேளை பூசுவார். இப்படி பூசுவதால் சிலைக்கு மேலும் சக்தி கிடைப்பதாக ஐதீகம்.
 
தற்போது தெய்வீக டாக்டர் பணியை பண்டிட் ஸ்ரீராம் ஷர்மா (வயது 33). என்பவர் கவனித்து வருகிறார். இதற்கு முன்பு இவரது தந்தை சீதாராம் ஷர்மா தெய்வீக டாக்டர் பணியை கவனித்து வந்தார். அவர் 1995-ல் மரணம் அடைந்தது முதல், அந்தப் பணியை இவர் செய்து வருகிறார்.

ஆமாம், நான் இனத் துரோகிதான்! சீற்றம் குறையாத சீமான்

லைஞரை விட்டால் ஜெயலலிதா... ஜெயலலிதாவை விட்டால் கலைஞர் எனப் பழகிவிட்டது என் இனம். நாதியற்ற இனமாக, சகித்துக்கொள்ள முடியாத இனமாக, இனியும் தமிழினம் இருக்காது. தமிழகத்தில் இருக்கும் திராவிட அரசியல் கட்சிகள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். என் இனம், என் மொழி எனச் சொல்லும் தைரியம் இன்றைக்கு அரசியல் நடத்தும் திராவிடத் தலைவர்கள் யாருக்காவது இருக்கிறதா? 'தமிழர் இனம்’ எனப் பேசி அரசியல் நடத்தும் திராவிடக் கட்சித் தலைவர்களுக்கு பெரியாரின் பெயர் ஒரு முகமூடியாகத் தேவைப்படுகிறது. அதனால்தான், எங்கள் கட்சியின் கொள்கை விளக்க ஆவணத்தை வைத்து இப்படி ஆளாளுக்கு அரசியல் கொடி பிடிக்கிறார்கள்'' - சீற்றம் குறையாமல் தொடங்குகிறார் சீமான்.
 நாம் தமிழர் கட்சிக் கொள்கை ஆவணத்தில், 'பெரியார் மட்டுமே திராவிடம் இல்லை’ என்பதுபோல இடம்பெற்று இருக்கும் சில வாக்கியங்கள் பெரியாரிஸ்ட்டுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கின்றனவே என்ற கேள்விக்குத்தான் இப்படி எடுத்த எடுப்பிலேயே தாக்குதலில் இறங்கினார் சீமான்.
''அதற்காக, கொள்கை விளக்க ஆவணத்தில் பெரியாரைத் தமிழர் வளர்ச்சிக்கு எதிரானவராகக் குறிப்பிட்டு இருப்பது நியாயம் ஆகுமா?''
''கொள்கை விளக்க ஆவணம் திருத்துதலுக்கும் மாறுதலுக்கும் உட்பட்டது என்பதை அதில் நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறோம். மூத்திரப் பையோடு அலைந்த நிலையிலும் சூத்திரப் பிரிவுகளைக் கண்டித்த பெரியார், மண்ணுக்குள் போகும் வரை இந்த மண்ணுக்காகப் போராடியவர். அந்தப் பழுத்த தாடிக் காரரைத் தவிர்த்துவிட்டு, சுயமரியாதை தொடங்கி பெண்ணியம் வரை எதையும் இங்கே பேச முடியாது. ஆவணத்தில் திராவிட அரசியல், தேசிய அரசியல்பற்றிச் சொல்லும்போது, திராவிடம் என்றால் பெரியார் மட்டுமே இல்லை என்பதையும் சொல்லி இருக்கிறோம். 'வெள்ளையா இருக்குறவன், பொய் சொல்ல மாட்டான். படிச்சவன் சொன்னா, சரியா இருக்கும்னு நம்பாதே. எதையும் அறிவால் விமர்சனம் செய். விவாதி’ எனச் சொன்னவர் பெரியார். விவாதிக்கப்படும் கருத்துதான் வீரிய வடிவம் எடுக்கும் என்பது அவர் கற்பித்த பாடம். அவர் வழி நின்றுதான் அவர் கொள்கைகளை நாங்கள் அலசுகிறோம். பெரியாரை விமர்சிக்கவே கூடாது என்பவர்கள் பெரியாரிஸ்ட்டா? பெரியாரையும் விமர்சனத்துக்கு உட்படுத் திப் பார்க்கும் எங்களைப் போன்றவர்கள் பெரியாரிஸ்ட்டா?''
''பெரியார் கருத்து குறித்த விவாதம் உங்களைத் தமிழினத் துரோகியாகக் கட்டமைக்க வழிவகுத்து இருக்கிறதே?''
''ஆமாம், நான் இனத் துரோகிதான். என்னைத் திட்டுபவர்களின் இனத்துக்கு நான் துரோகி. நான் துரோகி என்றால், இங்கே வேறு யாருப்பா தியாகி? பெரியா ரின் வாரிசாக மஞ்சள் துண்டுக்குள் உடலை அடைத்துக்கொண்டு வருபவரா? பெரியா ரின் புத்தகங்கள் அரசுடமை ஆகவிடாமல் தடுக்கும் பெரியவர்களா? கொஞ்சமும் குரல் அடங்காதவனாக இப்போதும்சொல் கிறேன்... திராவிட அரசியல் கட்சிகளின் கொட்டம் அடக்கும் சக்தியாக இனி நாங்கள்தான் இருப்போம். அதே நேரம், அரசியல் சாராத திராவிட அமைப்புகளுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரிகள் இல்லை. என்றைக்குமே எங்களின் பெருமைக்குரிய வழிகாட்டி பெரியார்தான். தமிழ்த் தேசிய இனத்தில் பிறந்து தமிழின முகவரியாக, அடையாளமாக, வீரமாக, மானமாக இருக் கும் பிரபாகரன் எங்களின் தலைவன். இதில் மாற்றுக் கருத்து என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.''
''திராவிடர் என்பது மாயை எனச் சிலர் புதிதாகப் பேசக் கிளம்பி இருக்கிறார்கள் என திருமாவளவன் உங்களைச் சூசகமாக வசைபாடி இருக்கிறாரே?''
''நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தனித்து நின்று இருந்தால், ஈழத் துயரத்தின் எதிரொலியும் எங்களோடு இயைந்தவர்களின் குரல் ஒலியுமே அவரை அமோகமாக வெற்றிபெற வைத்திருக்கும். இன்றைக்கு இந்த சீமான் தனிக் கட்சி தொடங்கி நடத்த வேண்டிய அவசியமே இல்லாமல் போயிருக்கும். 'திராவிடத் தலைமைகளை வீழ்த்த வேண்டும்’ எனச் சொன்னவரே அண்ணன் திருமாவளவன்தான். அதே திருமாதான் இன்றைக்கு, 'கலைஞர், ஸ்டாலினைவிட நல்ல தலைவர்கள் யாரும் இல்லை’ என்கிறார். அப்படிச் சொல்பவர் ஏன் தனியே கட்சி நடத்த வேண்டும்? பேசாமல் நல்ல தலைவராகிய கலைஞரின் கட்சியிலேயே போய்ச் சேர்ந்துவிட வேண்டியதுதானே? அண்ணன் திருமா அவர்களே... நான் பேசும் அனைத்தும் நீங்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களே தவிர, நான் வேறு எங்கும் கற்றுவரவில்லை.''
''கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் பலரும் உங்களை விமர்சிக்கிறார்களே?''
''அண்ணன்கள்தானே திட்டுகிறார்கள். நன்றாகத் திட்டட்டும். சின்ன வயதில் அப்பா, அம்மா திட்டினார்கள். நல்ல பிள்ளையாக உருவெடுத்தேன். படிக்கும்போது ஆசிரியர்கள் அன்பாகத் திட்டினார்கள். தகுதி படைத்த மாணவனாக உருவெடுத்தேன். இப்போது அரசியல் தளத்தில் அண்ணன்கள் திட்டுகிறார்கள் என்றால், நான் நல்ல அரசியல் தலைவனாக வருவேன் என்பது உறுதியாகிவிட்டது.''
''ஆரம்பத்தில் ஜெயலலிதாவை ஆதரித்துப் பேசினீர்கள்... இந்த ஒரு வருட ஆட்சியிலும் உங்களுக்கு உடன்பாடுதானா?''
''யாரையும் வலிந்து ஆதரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நல்லது நடந்தால் பாராட்டுவோம்; அவலம் நடந்தால் தட்டிக்கேட்போம். சட்டமன்றத்தில் போர்க் குற்றத் தீர்மானம் கொண்டுவந்ததில் தொடங்கி, தூக்கின் நிழலில் அல்லாடும் தம்பிகளுக்காகக் குரல் கொடுத்தவரை அந்த அம்மையாரின் செயல்பாடுகளை நாங்கள் வரவேற்றோம்; வாழ்த்தி னோம். ஆனால், பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு அப்பாவி உயிர்களை இந்த அரசு காவு வாங்கியதை நாங்கள் கண்டித்தோம். இது மிகப் பெரிய வரலாற்றுத் துயரம். இன்றைக்கு ஒரு இடைத்தேர்தலைச் சந்திக்க 32 அமைச்சர்கள், 10 மேயர்கள் ஒரு மாதமாக புதுக்கோட்டையில் அலைந்து திரிகிறார்கள்; பணத்தை இறைக்கிறார்கள். இந்த ஆட்சி எவ்வளவு சிறப்போடு நடக்கிறது என்பதற்கு இந்தக் கேவலமான காட்சிகளே உதாரணம். பால் விலையை உயர்த்தியது தொடங்கி, சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டம், அண்ணா நூற்றாண்டு நூலக இடம் மாற்ற அறிவிப்பு, தேவையற்ற கைதுகள், கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் தடுக்கத் தவறியது என இந்த ஆட்சியின் பிழைகள் எக்கச்சக்கம். கேரள வெறியர்களால் சாந்தகுமார் எண்ணெய் ஊற்றிக் கொல்லப்பட்டபோது, ஓர் இரங்கல்கூட அறிவிக்காதவர்தான் நம் முதல்வர். கண்ணீரில் தத்தளிக்கும் சாந்தகுமாரின் மனைவிக்கு நாங்கள் கவர்னர் வேலை கேட்கவில்லை. சாதாரண சத்துணவு ஆயா வேலைதான் கேட்டோம். அதைக்கூட செய்ய மறுத்தவரைப் பற்றி என்ன பேசுவது?''
''விஜயகாந்த்?''
''தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் திராவிடத் தலைவர்களில் வேகமாக அரைப்பவர். தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன உயர்ந்தபட்சக் கொள்கை, ரேஷன் அரிசியை வீட்டுக்கே வந்து தருவதுதான். நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையில், ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் வந்து சமைத்து ஊட்டுவோம் எனச் சொன்னால் எப்படி இருக்கும்? இதுதான் அரசியல் பொருளாதாரக் கொள்கையா? மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் இதுதானா? அண்ணன், ஐயாக்கள் செய்த பிழையில் முளைத்த களைதான் விஜயகாந்த். எனக்கு எதிராகப் பாயும் தமிழினத் தலைவர்களைக் கேட்கிறேன்... கட்சி தொடங்கிய ஏழே வருடங்களில் விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவர் ஆகிறார் என்றால், உங்களின் கையாலாகாத்தனத்தை என்ன சொல்வது? எங்களுக்கு முன்னவர்கள் செய்த பிழையை நாங்கள் செய்யத் தயார் இல்லை. 2016-ல் தேர்தல் களத்தில் நாங்கள் நிற்கிறோம். பத்து ஆண்டுகள் கனவு வேலைத் திட்டம். ஊழலற்ற உண்மையான, நேர்மையான மக்களாட்சியை வெல்ல மாற்றத்துக்காக கருத்துப் புரட்சி செய்கிறோம். 2016-ல் பாய்வோம். 2020-ல் ஆள்வோம்.''
''சரி, 'பகலவன்’ படம் என்ன ஆனது?''
''தண்ணீரால் நனைய வேண்டிய பூமி, கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைகிறது. என் மக்கள் பிரச்னைகளில் புழுங்கித் தவிக்கிறார்கள். இதையெல்லாம் குறியீடாக வைத்து, 'கல்வி என் மக்களுக்கானது’ என்பதைச் சொல்லும் படம்தான் 'பகலவன்’. முதலில் விஜய் நடிப்பதாக இருந்தது. கதை கேட்டு சரி என்று சொன்னவர், ஏன் விலகினார் என்று தெரியவில்லை. இப்போது ஜீவாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஜீவா கட்டாயம் நடிப்பார். படம் வெளியாகும்போது, இந்தப் படத்தைத் தவறவிட்டது தவறு என்பதைத் தவற விட்டவர்கள் உணர் வார்கள்.''
''திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே இருக்க முடிவெடுத்துவிட்டீர்களா?''
''இதுபோன்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவாவது சீக்கிரமே திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்!''

நித்தி ராஜ்ய மர்மங்கள்! விடிய விடிய நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..


காவி உடைகளால் நிரம்பிக் கிடந்த பிடதி ஆசிரமம் இப்போது காக்கி கூடாரமாக ஆகிவிட்டது!  ஆசிரமத்தின் மெயின் கேட் தொடங்கி, மேற்கு மற்றும் கிழக்கு நுழைவாயில்களிலும் நூற்றுக் கணக்கான போலீஸ் நிற்கிறது. ஆசிரமத்தின் 24 மணிநேர நடவடிக்கைகளும் அப்படியே பதிவு செய்யப்படுகிறது. பதிலுக்கு நித்தி தரப்பிலும் வீடியோ பதிவு நடக்கிறது. குறிப்பாக அத்துமீறும் காவல் துறையையும், கன்னட அமைப்புகளையும் மடக்கி மடக்கி படம் எடுக்கிறார்கள் நித்தியின் சீடர்கள்! 
கடந்த 11-ம் தேதி காலை கர்நாடக முதல்வர் சதானந்தா கவுடா, 'ஆசிரமத்துக்குத் தற்காலிகமாக சீல் வைக்கப்படும்’ என்று அறிவித்த உடனே ராம்நகர மாவட்ட ஆட்சியர் ஸ்ரீராம ரெட்டி தலைமையில் துணை ஆட்சியர் அர்ச்சனா, மாவட்ட எஸ்.பி. அனுபம் அகர்வாலுடன் வருவாய்த் துறை அதிகாரிகளும் ஆசிரமத்துக்குள் நுழைந்தனர். அப்போது ஆசிரமத்தில் இருந்த 200 பேரையும் விசாரித்த‌ அதிகாரிகள், அடுத்து நித்தியின் அறையை சோதனை போட்டனர்.
''பெரிய லேசர் டி.வி., ஆறு இரும்பு பீரோக்கள், லாக்கர் பொருத்தப்பட்ட கட்டில், உடற் பயிற்சிக் கருவிகள் என்று படுஅமர்க்களமாக இருந்தது அவரது அறை. இதுவரை எட்டு இரும்பு பீரோக் களுக்கும், நான்கு முக்கிய அறைகளுக்கும் சீல் வைத் திருக்கிறோம். ஆசிரமம் முழுக்க பல அறைகளில் சோதனையிட இருப்பதால், இந்த வாரம் முழுவதும் இந்த நடவடிக்கை நீடிக்கும்'' என்றார் ராம்நகர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீராம ரெட்டி.
சிக்கிய கன்டெய்னர்!
ஆசிரம சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் பேசினோம். ''ஆசிரமம் முழுக்கவே ஆவணங்கள்தான். அதுவும் ஆசிரமத்தின் முக்கியஸ்தர்களின் அறைகள், நித்தியின் அறையில் இருந்த பீரோக்களில் எல்லாமே முழுக்கவே‌ ஆவணங்களாகத்தான் இருக்கின்றன. அவரது அறையில் இருந்த கட்டில் லாக்கரில் சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினோம். அதில் சொத்துக்கள் மற்றும் நிதி வந்த விதம் குறித்து முழுத்தகவலும் இருக்கிறது. இவைதவிர, தங்கம், வெள்ளிப் பொருட்களையும் கைப்பற்றி இருக்கிறோம். ஆசிரமத்தில் மர்மமாக இருக்கும் மூன்று கன்டெய்னர்களுக்கு சீல் வைத்திருக்கிறோம். அவை இன்னமும் திறக்கப் படவில்லை. பிரச்னை நடந்த இரவு, ஆசிரமத்தின் பின்புறத்தில் மூன்று மூட்டை ஆவணங்கள் எரிக்கப் பட்டு இருக்கின்றன. அரைகுறையாக எரிந்த அந்த ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறோம்'' என்று சொன்னார்கள்.
சிக்கிய ஆணுறை, கஞ்சா, ஆபாச சி.டி-கள்!
பிடதி ஆசிரமம், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில்தான் அமைந்து இருக்கிறது. அந்த ஆசிரம காம்பவுண்ட் ஓரத்தில் பயன்படுத்திய ஆணுறைகளும், கஞ்சா, ஆபாச சி.டி-களும், காலி மதுப் புட்டிகளும், நித்தியின் புகைப்படங்களும், புத்தகங்களும் கிடந்ததாம். இவற்றைக் கைப்பற்றிய பிடதி போலீஸ், இதுகுறித்து ரகசிய விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
இவைதவிர ஆசிரமத்தின் உள்ளே, பக்தர்களுக்கு முக்தி வழங்குவதற்காக வைத்திருந்த சில போதை மருந்துகளும் வெளிநாட்டு மது வகைகளும் சிக்கி இருக்கிறதாம். 'இது எல்லாமே எங்களைப் பிடிக்காத‌ கன்னட அமைப்புகள் செய்யும் திட்டமிட்ட சதி. எங்களை இங்கே இருந்து துரத்துவதற்காக எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க’ என்று அப்பாவியாகக் பேசுகிறார்கள் நித்தியின் பக்தர்கள்.
சரண்டர் சாமி...
காவல் துறை, ஆசிரமத்தில் சல்லடை போடுவதைக் கண்ட நித்தியானந்தா கடந்த 13-ம் தேதி, தன்னுடைய சீடர் அச்சிலானாந்தா மகா நித்தியானந்தா மூலமாக கர்நாடக  உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'எனக்கும் பிரஸ்மீட்டில் நடந்த சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வேண்டும் என்றே சில கன்னட அமைப்புகளும் என்னைப் பிடிக்காத சிலரும் என் மீது சேற்றை வாறி இறைக்கின்றன. அதற்கு கர்நாடக அரசும் துணை போகிறது. எனவே, பிடதி போலீஸ் என் மீது பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும்’ என்று கேட்டு இருந்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுபாஷ் பி.அடி, இதுகுறித்து ஜூன் 15-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க க‌ர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்ற நிலவரங்களைக் குறித்துக் கொண்ட நித்தி, மதியம் 3 மணிக்கு ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக முடிவெடுத்தார். அவர் மனதை அறிந்த மீடியாவும் கோர்ட்டை மொய்த்தது. மீடியாக்களைத் தவிர்க்க அவரும் காவல் துறையும் பலே நாடகம் போட்டார்கள். மீடியாவிடம், 'நித்தி மதுரையிலே ஆஜர் ஆயிட்டார். அங்கே போங்க’ என்று சொல்லி விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர். தான் தலைமறைவாக இருந்த இடத்தை, மீடியாக்கள் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநில ரிஜிஸ்ட்ரேஷன் கார்கள் அணிவகுக்க, கே.எல்.11 ஏஏ 9669 எண் கொண்ட கேரளா ரெஜிஸ்ட்ரேஷன் எண் கொண்ட ஸ்கோடா வெள்ளைக் காரில் வந்து இறங்கினார். உடனே பலரும், 'நித்தி கேரளாவில் இருந்தார்’ என்று கதை கிளப்பினார்கள். உண்மையில், மாண்டியாவில் இருக்கும் ஒரு பக்தரின் பண்ணையில்தான் இருந்தாராம்.
சாமரம் வீசலாமா?
நித்திக்காக கோர்ட் வாசலில் காத்திருந்த கர்நாடக போலீஸ், அவரைக் கைது செய்யாமல் பத்திரமாக கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்றது. தன் சீடர்களோடு உள்ளே போன நித்தி, ராம்நகர் மாவட்ட நீதிபதி கோமளா முன்னிலையில் சரண் டர் ஆனார். பத்திரிகையாளர்களையும், கன்னட அமைப்பினரையும் தாக்கிய வழக்கில் ஜாமீன் கோரி தன் வக்கீல் முத்து மல்லையா மூலமாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'தன்னை நிபந்தனை இல்லா ஜாமீனில் உடனடியாக விடுவிக்க வேண்டும். இது சாதாரணக் குற்றச்சாட்டு என்பதால் போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பக் கூடாது’ என்று தெரிவித்து இருந்தார். நித்தியின் வருகையால் கோர்ட்டில் ஏகக்கூட்டம். அதனால் குற்றவாளிக் கூண்டில் நின்ற நித்திக்கு, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போதிய காற்று வரவில்லை. வியர்த்தது. 'சாமரம் வீசலாமா சாமி?’ என்று நித்தியைக் கேட்டபடி நின்றார்கள் சீடர்கள்.
அட்வான்ஸ் அப்ளிகேஷன், சரண்டர் அப்ளிகே ஷன், பெயில் அப்ளிகேஷன் மூன்றையும் தாக்கல் செய்து முடிப்பதற்குள், காவல்துறை சார்பாக ஒரு நாள் போலீஸ் கஸ்டடி கேட்டனர். இதற்கு நித்தி தரப்பு வக்கீல் முத்து மல்லையா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஜாமீன் வழங்க போதிய நேரம் இல்லாததால் நீதிபதி கோமளா, நித்தியானந்தரை  ஒரு நாள் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிட்டார். மந்தகாச சிரிப்போடு வெளியே வந்த நித்திக்கு எதிராக பொதுமக்கள் கோஷம் போட்டதை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
விடிய விடிய விசாரணை!
ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி நித்தியானந்தாவை, மாகடி போலீஸ் குவாட்டர்ஸுக்கு அழைத்துச் சென்றனர். 'தியானம் செய்ய வேண்டும்’ என்று நித்தி கேட்க அதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு கிடுகிடுவென கேள்விகளை வீசினார், ராம்நகர் மாவட்ட எஸ்.பி. அனுபம் அகர்வால். அவருடைய கேள்விகளுக்குக் கொஞ்சமும் அசராமல் பதில் கொடுத்த நித்தியை போலீஸாரே ஆச்சர்யமாகப் பார்த்தார்களாம். ஒரு கட்டத்தில் வழக்குக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை போலீஸ் கேட்கத் தொடங்கவே, 'பத்திரிகையாளர்களைத் தாக்கிய வழக்கில்தானே கைதாகி இருக்கிறேன். அதுதொடர்பாக மட்டும் கேட்கலாமே?’ என்று கன்னடத்தில் நித்தி பேசியதை காவல்துறையினரும் ரசித்தார்களாம். அதன்பிறகு, அங்கே போதிய இடவசதி இல்லாத காரணத்தால், சென்னப்பட்டினம் போலீஸ் டிரெய்னிங் சென்டருக்கு நித்தியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கேயும் விடிய விடிய விசாரணை நடந்ததாம்.
நஷ்ட ஈடு கேட்ட நித்தி!
மறுநாள் காலை 11 மணிக்கு, நித்தியை ராம்நகர் கோர்ட்டுக்கு அழைத்து வருவார்கள் என்பதால், காலை முதலே மீடியாவும் பொதுமக்களும் குவிந்திருந்தார்கள்.  நித்தியைப் படம் எடுக்க முடியாத இடத்தில் மீடியாக்களை நிறுத்தினர் போலீஸ். 11 மணியைத் தாண்டியும் நித்தி வரவில்லை. விசாரித்துக் கொண்டு இருந்த  எஸ்.பி. அனுபம் அகர்வாலிடம், 'கோர்ட்டுக்குப் போகலாமே?’ என்று நித்தியானந்தாவே, கேட்டாராம். அதற்கு எஸ்.பி., 'நேற்று மதியம் 3 மணிக்குத்தான் விசாரணைக்கு எடுத்தோம். அதனால் இன்று மதியம் 3 மணி வரை நேரம் இருக்கிறது’ என்று சொன்னாராம். எனவேதான் வருகை தாமதம் ஆனது.
ராம்நகர் கோர்ட்டில் நித்திக்கு ஜாமீன் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டு இருக்கையில், தன்னுடைய சீடர் மூலமாக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவுக்கு எதிராக ஒரு மான நஷ்ட வழக்கைப் போட்டுள்ளார் நித்தியானந்தா. அதில், 'செய்தியாளர்களைத் தாக்கிய வழக்கில் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா தன்னை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஆசிரமத்தை சீல் வைக்க வேண்டும் என்றும் தன்னுடைய அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட்டார். அப்படி ஒரு முடிவை நீதித்துறை மட்டுமே எடுக்க முடியும். இதனால் எனது புகழுக்கும், என் கோடிக்கணக்கணக்கான பக்தர்களுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு மன உளைச்சலும், ஆசிரமத்தின் பணிகளும் முடங்கி போய் இருப்பதால் அவற்றை சரிசெய்ய 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த விவகாரம் கன்னட மீடியாக்களில் ஒளிபரப்பானதைக் கண்டு முகம் சிவந்தாராம் முதல்வர் சதானந்தா. 'போலீஸ் கஸ்டடியில் இருந்து கொண்டே என் மீது வழக்குப் போடுகிறாரா?’ என்றாராம் கர்நாடக முதல்வர்!
பிடதிக்குப் போகாதே!
முதல் நாள், கூட்டத்தில் மாட்டிக் கொண்டதால், இந்த முறை நித்தியை மிகவும் பாதுகாப்பாக களம் இறக்கியது போலீஸ். அதுவும் சென்னப்பட்டினத்தில் இருந்து வஜ்ரா வேனில் அழைத்து வந்தவர்கள்,  மீடியாக்களின் வெளிச்சத்தில் படாமல் நித்தியை மறைத்து கோர்ட்டுக்குள் கொண்டு போனார்கள். அதைக் கண்டு மீடியாக்கள் கூச்சல் போடவே, கோர்ட் படியில் ஏறிய நித்தி பின்னால் திரும்பி சந்தோஷமாக கை அசைத்தார். பத்திரிகையாளரைத் தாக்கியதாக பதிவான இரண்டு வழக்கிலும், 'பிடதியில் 144 ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கு போகக்கூடாது’ என்ற நிபந்தனையோடு நித்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. வெளியே வந்த நித்தி உடனே வேனுக்குள் பாய இருந்தார். ஆனால், மீடியா போட்ட கூச்சல் காரணமாக ராம்நகர் எஸ்.பி. அனுபம் அகர்வால், நித்தியின் தோளைப் பிடித்து இழுத்து மீடியா பக்கம் திருப்பினார். உடனே மீடியாவுக்கும் வக்கீல்களுக்கும் பொதுமக்களுக்கும் குனிந்து, குனிந்து வணங்கி விட்டு வஜ்ராவில் ஏறிப் போனார் நித்தியானந்தா.
மீண்டும் கைதான நித்தியானந்தா!
அடுத்த அரை மணிநேரத்தில் இன்னொரு ஆப்பு தயாராக இருந்தது. இதை அறியாமல் பிடதியில் பக்தர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். நித்தியை வரவேற்க வந்த ஆசிரமக் காரில் நித்தியை ஏறவிடாமல், மீண்டும் போலீஸ் வேனில் ஏற்றிய காவல்துறை, ராம்நகர் கலெக்டர் ஆபிஸுக்கு நித்தியைக் கொண்டு சென்றது. தன்னிடம் ஸ்டேட்மென்ட் வாங்குவதற்காக அழைத்து வந்து இருக்கிறார்கள் என்று நினைத்தார் நித்தி.
அப்போது கலெக்டர் ஸ்ரீராமரெட்டி, ''பிடதியில் பொது அமைதிக்கு பாதகம் ஏற்படுத்தியதால், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 105, 151 ஆகிய பிரிவுகளின் கீழ் உங்களைக் கைது செய்கிறோம்'' என்று சொன்னார். அதுவரை சிரித்து கொண்டே இருந்த நித்தியின் முகம் சட்டென்று சுருங்கிப் போனது. ''ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுங்கள் என்று அழைத்து வந்து, கைது என்றால் எப்படி?'' என்று கலெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் நித்தி. ஆனால், கலெக்டர் தனக்குள்ள அதிகாரத்தைத் தெளிவாக விளக்கவே, சட்டென தரையில் அமர்ந்து கொண்டார் நித்தி. அதனால் திணறிப்போன காவல் துறை, ஒரு வழியாக கைது செய்து அழைத்துப் போனது.
'முதல்வர் மீது மான நஷ்ட வழக்கு போட்ட விஷயம்  வெளியானதும், மேலிடத்தில் இருந்து கலெக்டருக்கு ஆக்ரோஷமான உத்தரவு வந்ததாம். அதனால்தான் கைது செய்ய கலெக்டர் உத்தரவு போட்டார்’ என்று சொல்கிறார்கள் கர்நாடக தலைமைச் செயலக வட்டாரத்தில். சதானந்த கவுடாவுடன் நேரடியாக நித்தி மோதத் தொடங்கி இருப்பதால், பூகம்ப அதிர்வுகள் பலமாகத்தான் இருக்கும்.!

 ''என்னத்தைச் சொல்ல?'' 
மனவருத்தத்தில் மதுரை ஆதீனம்
 கடந்த இரண்டரை மாதங்களாக நியூஸ் சுரங்கமாகவும் டென்ஷன் சென்டராகவும் திகழ்ந்த மதுரை ஆதீனம் இப்போது கப்சிப்!
நித்திக்கு எதிராக ஆதீன மீட்புக் குழுவினர் கடும் போராட்டம் நடத்திவந்த போதிலும், மதுரை ஆதீன விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வந்தது. ஒரு கட்டத்தில், நித்தியானந்தா மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்தபோது சர்ச்சை ஏற்பட்டதால், தன்னைப் போலவே இளைய ஆதீனமான நித்தியானந்தாவுக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு கடிதம் எழுதினார் அருணகிரி. கடந்த 5-ம் தேதி மீனாட்சியம்மன் கோயிலில் நடந்த திருஞானசம்பந்தர் குரு பூஜை விழாவின்போது, நித்தியானந்தாவுக்கும் கோயில் சார்பில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. இதனால், நித்தியானந்தாவின் நியமனத்தை தமிழக அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாகவே கருதப்பட்டது. பெங்களூருவில் உள்ள நித்தியின் மடத்தில் போலீஸ் ரெய்டு நடந்தபோது, மதுரை ஆதீனத்துக்கு தமிழக போலீஸார் பாதுகாப்பு கொடுத்தார்கள்.
எப்போதும் திறந்திருக்கும் மதுரை ஆதீனத்துக்கு நித்தியின் சீடர்கள், கடந்த 11-ம் தேதி உள்பக்கமாகப் பூட்டுப் போட்டார்கள். வெளியே கர்நாடக ரிஜிஸ்ட்ரேஷன் என்ட்ரோவர் கார் நிற்பதைப் பார்த்த ஆதீன எதிர்ப்பாளர்கள், 'நித்தியானந்தா உள்ளேதான் பதுங்கி இருக்கிறார்’ என்று கிளப்பி விட்டார்கள். இதைஅடுத்து கர்நாடக போலீஸார் மதுரை ஆதீனத்துக்குள் வந்து, அவரைத் தேடினார்கள். அதன்பிறகே, அவர் அங்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து பூஜைகள் நடக்கத்தான் செய்கின்றன என்று ஆதீனத் தரப்பில் சொல்லப்பட்டாலும், அங்கே முறைப்படி பூஜை செய்யவே ஆள் இல்லையாம். பிரச்னை பெரிதானதும், நித்தியின் ஆண், பெண் சீடர்கள் பலர் மடத்தில் இருந்து வெளியேறி விட்டார்கள். தொடர்ந்து மடத்தில் இருந்தவர்களையும் கர்நாடக போலீஸ¨க்குப் பயந்து, அவர்களது பெற்றோர்களே வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தத் தொடங்கி விட்டனர். அப்படியிருந்தும் பி.இ. பட்டதாரியான ராகவன் வெளியேற மறுத்ததால், அவரை மீட்டுத் தரக்கோரி அவரது பெற்றோர் மதுரை விளக்குத் தூண் போலீஸில் புகார் செய்தனர். 'ராகவன் மேஜர் என்பதால், அவரைக் கட்டாயப்படுத்த முடியாது. அவரை யாராவது தடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்’ என்று போலீஸார் கையை விரித்து விட்டார்கள்.
தனது பணியாட்களில் பலர் விலகிச் சென்று விட்டதால், தனிமைச் சிறையில் இருப்பதைப் போல் கவலையில் இருக்கிறாராம் பெரியவர். பத்திரிகையாளர்களோடு எப்போதும் நட்பாக இருக்கும் அருணகிரிநாதரை, இப்போது யாரும் தொடர்புகொள்ள முடியவில்லை. எப்போதாவதுதான் போனை அவர் எடுக்கிறார். அப்படி அவரிடம் பேசிய நெருக்கமான நிருபரிடம், ''என்னத்தைச் சொல்ல... பொறுமையாக இருப்போம்'' என்றாராம் அருணகிரி.
''இளைய ஆதீனத்தை நியமிக்கும் அதிகாரம் இருப்பதுபோல், நீக்குவதற்கும் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா?'' என்று அருகில் இருந்தவர் கேட்டபோது 'அதிகாரம் இருக்கிறது. ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்று பார்ப்போம். அதுவரையில் பொறு மையாக இருப்போம்'' என்று சோர்வான குரலில் சொன்னாராம் அருணகிரிநாதர்.
ஏற்கெனவே மதுரை ஆதீனம் தொடர்பாக கோர்ட்டில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு புதுமையான வழக்கு இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், 'நான் நித்தியானந்தாவின் மாறுபட்ட வழிபாட்டு முறைகளைக் கண்டு அவரது சீடனாக மாறினேன். ஜூன் 11-ம் தேதி மாலை அவரைத் தரிசிக்க மடத்துக்குச் சென்றபோது அங்கிருந்த சீடர்கள், 'நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியாது’ என்று கூறி வெளியே விரட்டினர்.  அதே நாளில் அவர் அருணகிரிநாதருடன் சேலத்தில் இருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. நித்தியானந்தாவை, அருணகிரிநாதர் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது. அவரை மீட்டு ஆஜர்படுத்துமாறு போலீஸுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

பிடதி ஆசிரமம் பார்க்கலாம் வாங்க! நித்தியின் கைதுக்குக் காரணம் ஜெயேந்திரர்?

ல்லாச் செய்திகளும் பிடதியை நோக்கி!
 பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் 32-வது கிலோ மீட்டரில் இருக்கிறது பிடதி. அனைத்துப் பஸ்களும் நின்று கிளம்புகின்றன. அங்கே இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தியான பீடத்தின் நுழைவாயில் இருக்கிறது.
வாசலில் இருக்கும் காவலாளிகள், உங்களைப் பற்றிய அத்தனை விவரங்களையும் கேட்டுத் தெரிந்து​கொண்ட பிறகுதான் கேட்டைத் திறப்பார். செக்யூரிட்டி அறைக்கு அருகே இருக்கும் டேபிளில் ஒரு ரிஜிஸ்டர் இருக்கும். அதில் உங்களது பெயர், முகவரி, செல்போன் எண் என அத்தனையும் எழுதிக் கையெழுத்துப் போடவேண்டும். ஓர் அடையாள அட்டையில் உங்களது பெயரை எழுதி கழுத்தில் மாட்டிய பிறகுதான், உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். இந்த சம்பிரதாயங்கள் நடக்கும் நுழைவாயிலில் இருந்து ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது ஆசிரமம்.
நீங்கள் சாதாரண பக்தராக இருந்தால் நடந்துதான் போகவேண்டும். ஆசிரமத்துக்கு நெருக்கமானவர்கள், வேண்டப்பட்டவர்கள் என்றால், செக்யூரிட்டி இன்டர்காமில் தகவல் சொல்வார். உடனே ஆசிரமத்தில் இருந்து கார் வந்து அழைத்துச் செல்லும்.
நடந்து செல்லும் வழியில் பிரமாண்டமான சிவபெருமான் சிலை இருக்கிறது. ஒரு பெரிய குளத்துக்கு நடுவில் சிவன் இருப்பதைப் போன்று வடிவமைத்து இருக்கிறார்கள். நித்தியானந்தரின் பிறந்த நாள் மற்றும் பௌர்ணமி தினங்களில் இந்த இடம் விழாக்கோலத்துடன் இருக்கும். நித்தியானந்தர் பட்டாடை உடுத்தி வந்து, சிவனுக்குக் குடம் குடமாக பாலும் தேனும் ஊற்றி அபிஷேகம் செய்வார். விடிய விடிய ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடப்பதும் இங்கேதான். அதையும் கடந்து நடை போட்டால், முதலில் வருவது வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கான விடுதி. அதை ஒட்டி ஓர் இலவச மருத்துவமனை இருக்கிறது. அதைத் தாண்டி உள்ளே செல்வதற்கு சில செக்போஸ்ட் இருக்கின்றன.
முதலில் ஆசிரமத்தின் பிரமாண்டமான வரவேற்பு அறை. யாரைப் பார்க்க வேண்டும், எதற்காகப் பார்க்க வேண்டும் என்று ஒட்டுமொத்த ஜாதகமும் கேட்பார்கள். அதன் பிறகு நீங்கள் சந்திக்க வந்த நபருக்குத் தகவல் சொல்லப்படும். அவர் விருப்பப்பட்டால், உங்களை சந்திப்பார். 24 மணி நேரமும் செயல்படும் இந்த வரவேற்பு அறைதான் பக்தர்களின் போனுக்குப் பதில் சொல்லும் கால் சென்டராகவும் இருக்கிறது. ஆசிரமத்துக்கு வரும் விசாரிப்பு, டொனேஷன் போன்ற பெரும்பாலான விஷயங்கள் இந்த அறையிலேயே ஃபில்டர் செய்யப்பட்டுவிடும்.
அதைத் தொடர்ந்து இருக்கும் ஹாலில், ஈசனின் மடியில் இருக்கும் பார்வதி சிலைக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு இருக்கிறது. நித்தியானந்தர் பிடதியில் இருந்தால், தினமும் காலை 8 மணிக்கு இந்த ஹாலுக்கு வருவார். அங்கே உள்ள சிலைகளுக்கு சுமார் அரை மணி நேரம் பூஜை செய்வார். பூஜை முடிந்த பிறகு, நித்தி அங்கேயே அமர்ந்துகொள்வார். பக்தர்கள் வரிசையில் நிற்க... ஒவ்வொருவராக அழைத்து தலையைத் தடவிக் கொடுத்து ஆசீர்வாதம் செய்வார்.
இந்த ஹாலுக்குப் பின்பக்கத்தில் 600 வருடங்கள் பழமையானதாகச் சொல்லப்படும் ஆலமரம் ஒன்று இருக்கிறது. இந்த ஆலமரமத்துக்கு அடியில்தான் நித்திக்கு ஞானம் கிடைத்ததாகச் சொல்வார்கள். ஆலமரமத்துக்குப் பக்கத்தில் தட்சிணாமூர்த்தி சிலை இருக்கிறது. அதிகாலை 5 மணிக்கெல்லாம் இந்த ஆலமரத்தைச் சுற்றி, நித்தி வாக்கிங் போவார். அதன்பிறகு அங்கேயே சற்று நேரம் தியானத்திலும் ஆழ்ந்து விடுவார். நித்திக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், இந்த ஆலமரத்துக்கு அடியில் வந்து ஹாயாக அமர்ந்து கொள்வார்.
'எத்தனையோ வசதிகள் இருந்தாலும் இந்த ஆல மரத்தடியில் உட்காருவதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு...’ என்று நித்தியே அவரது அடிப்பொடிகளிடம் அடிக்கடி சொல்வார். ஆலமரத்துக்கு இடதுபுறத்தில் இருக்கும் ஒரு நீண்ட அறை முழுக்க, நித்தி சிறு வயதில் பயன்படுத்திய பொருட்கள், புகைப்படங்களை வைத்திருக்கிறார்கள். அதோடு நித்தி உட்காந்து ஆசி வழங்குவதைப் போன்ற ஒரு மெழுகுச் சிலையும் இருக்கிறது.
சற்றுத் தள்ளி இருக்கிறது ஆனந்தக்கூடம். நித்திக்காக பிரமாண்ட நாற்காலி, ஃபோகஸ் லைட், வீடியோ கேமராக்கள் என்று பக்காவான செட் அமைப்போடு இருக்கிறது. நித்தி பத்திரிகையாளர்களை சந்திப்பதும், உரை நிகழ்த்துவதும் இந்தக் இந்தக் கூடத்தில்தான்.
இந்த கூடத்துக்கு எதிரில்தான் டைனிங் ஹால். காலை தொடங்கி இரவு வரை யார் ஆசிரமத்துக்குப் போனாலும், சாப்பாடு உண்டு. வரிசையாக அடுக்கி இருக்கும் சில்வர் தட்டை எடுத்துக்கொண்டு, வேண்டி​யதைச் சாப்பிட்டு, தட்டைக் கழுவி வைக்க​வேண்டும். இங்கே சமைக்கப்படும் உணவில் வெங்​காயம், பூண்டு சேர்க்க மாட்டார்கள். (கிளர்ச்சியை ஏற்படுத்தாமல் இருக்க!)
ஆசிரமத்தில் குடும்பத்தோடு வந்து தங்கி இருப்பவர்களுக்கு தனியாக ஒரு குடியிருப்பும், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இன்​னொரு பகுதியிலும் இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். குடும்பத்தோடு இருப்பவர்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாம். ஆனால், பகல் நேரத்தில் ஆசிரமத்தில் சேவை செய்ய வேண்டும்.
பிரம்மச்சரியத்தை ஏற்க விரும்புபவர்களுக்கு பல சோதனைகள் வைக்கப்படும். அந்தச் சோதனைகளில் வெற்றி பெறாதவர்களுக்கு பிரம்மச்சரியம் கொடுப்பது இல்லை. பிரம்மச்சரியம் ஏற்ற ஆண்களை 'மஹாராஜ்’ என்று அழைக்கிறார்கள். பெண்களை, 'ம்மா’ என்கிறார்கள். ஆசிரமத்தில் தங்கி இருக்கும் பிரம்மச்சாரிகளில், இன்ஜினீயர்கள், டாக்டர்கள், பேராசிரி​யர்கள் என்று பெரும்பாலும் மெத்தப் படித்த​வர்கள்தான் அதிகம். அவரவர் படித்த படிப்புக்கு ஏற்ப வேலைகள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.
இங்கிருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாகத்தான் நித்தி தங்கும் அறை இருக்கிறது. நித்திக்கு எல்லாமுமாக இருக்கும், மூன்று மஹாராஜ்கள் மட்டும்தான் இந்த அறைக்குள் போய்வர முடியும். நித்ய பிரவானந்தா, நித்ய ஞானானந்தா, நித்ய ரூபானந்தா ஆகியோர்தான் அந்த மூன்று மஹாராஜ்கள். மூவருமே சேலம் விநாயகா மிஷன் பல் மருத்துவக் கல்லூரியில் படித்த பல் டாக்டர்கள். சேலத்தில் நித்தியானந்தரின் சொற்பொழிவைக் கேட்டு, அவரது கொள்கைகள் பிடித்துப்போனதால் படிப்பை முடித்த கையோடு ஆசிரமத்தில் சேர்ந்தவர்கள்.
நித்தி விருப்பப்பட்டால் மட்டுமே அவரது அறைக்குள் புதியவர் எவரும் நுழைய முடியும். ஆனால் இப்போது, நித்தியின் அனுமதி இல்லாமலே கர்நாடகப் போலீஸ் நுழைந்து விட்டது!

  கைதுக்குக் காரணம் ஜெயேந்திரர்?
நித்தியின் ஆசிரமத்தை சீல் வைக்கும் அளவுக்கு நிலைமை போனதற்கு, முக்கியக் காரணம் என்று ஜெயேந்திரரைக் கை காட்டுகிறார்கள், நித்தியின் சீடர்கள். ''ரஞ்சிதாவைப் பற்றி ஜெயேந்திரர் அவதூறாகப் பேசினார். அதற்காக ரஞ்சிதா, அவர் மீது வழக்கு தொடர்ந்தார். ரஞ்சிதா தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி ஜெயேந்திரர் தரப்பில் பலமுறை பேசினார்கள். ஆனால் சுவாமியோ, 'அது பத்தி எனக்குத் தெரியாது. அது ரஞ்சிதா சம்பந்தப்பட்ட விஷயம்’னு தெளிவாகச் சொல்லி விட்டார். இதில் ஜெயேந்திரருக்கு ரொம்பவும் கோபம். கர்நாடக முதல்வர் கவுடா, ஜெயேந்திரரின் தீவிர பக்தர். அதனால் ஜெயேந்திரர்தான் நடவடிக்கை எடுக்கத் தூண்டி இருக்கிறார். கர்நாடக முதல்வரும், உண்மையை விசாரிக்காமல் ஆசிரமத்துக்குச் சீல் வைக்கச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார். எங்க சுவாமியின் சக்தி என்னன்னு அவருக்குத் தெரியலை, இனி போகப் போகப் புரிந்து கொள்வார்'' என்று ஆத்திரப்படுகிறார்கள் நித்தி சீடர்கள்

நடிகை சமந்தாவை, மணிரத்னம் கடலில் இருந்து தூக்கியது ஏன்? புதிய தகவல்


ஹீரோவைவிட மூத்த தோற்றத்தில் இருப்பதால் ‘கடல்’ படத்தில் இருந்து சமந்தாவை நீக்கினார் மணிரத்னம். மீனவர்கள் பிரச்னையை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கும் புதிய படம் ‘கடல்’. இதில் கவுதம் ராம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர்  நடிகர் கார்த்திக்கின் மகன். ஹீரோயினாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இவர்கள் நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. சமந்தா ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கும் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘கடல்’ படத்திலிருந்து சமந்தா விலகினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மணிரத்னம் படத்துக்கு கால்ஷீட் தருவதில் பிரச்னை ஏற்பட்டதால் அதிலிருந்து சமந்தா விலகியதாக கூறப்பட்டது. 
ஆனால் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னமும், கேமராமேன் ராஜீவ் மேனனும் ‘கடல்’ படத்தின் காட்சிகளை சமீபத்தில் திரையிட்டுப்பார்த்தார்கள். அப்போது ஹீரோ கவுதம் தோற்றத்துக்கும், சமந்தாவின் தோற்றத்துக்கும் பொருத்தம் இல்லை என்று இருவரும் நினைத்தனர். 19 வயதே ஆன கவுதம் ராம் இளமை பொலிவுடன் இருக்கிறார். ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தாவுக்கு 27 வயது. கவுதமைவிட முதிர்ச்சியான தோற்றத்தில் இருக்கிறாராம். இதை மணிரத்னம் விரும்பவில்லை.
எனவே சமந்தாவை நீக்கிவிட்டு ‘அலைகள் ஓய்வதில்லை’ ராதாவின் மகள் துளசியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார். தற்போது சமந்தாவுக்கு பதிலாக துளசி, கவுதம்ராம் ஜோடியாக நடிக்கிறார். வரும் ஜூலை மாதம் முதல் துளசி படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
இதற்கிடையில் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில்,‘எதிர்பாராதவிதமாக மணி சார் படத்திலிருந்து விலகி இருக்கிறேன். இது எனக்கு பெரிய இழப்பு. கால்ஷீட் பிரச்னையால் இதிலிருந்து வெளியேற வேண்டியதாகிவிட்டது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

'மாற்றான்' அலையில் காணாமல் போக நான் விரும்பவில்லை. கவுதம் மேனன்


இயக்கம், தயாரிப்பு என அனைத்து மொழிகளிலும் தற்போது பிஸியாக இருக்கும் இயக்குனர்  கெளதம் வாசுதேவ் மேனன்.

இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளுலும் 'நீதானே என் பொன்வசந்தம்' என்னும் படத்தினை இயக்கி வருகிறார். முதன் முறையாக இப்படத்திற்கு கௌதமுடன் கை கோர்த்து படத்துக்கு இசை கோர்க்கிறார் இளையராஜா.

தனது அடுத்த தயாரிப்பு என்ன, இயக்கம் என்ன என்பது குறித்து  இணையத்தில் கெளதம் மேனன் தெரிவித்து இருப்பது :

" 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' என்னும் படத்தினை தயாரிக்க இருக்கிறேன். பிரேம் சாய் என்ற இயக்குனர் இயக்க இருக்கிறார். ஜெய் மற்றும் ரிச்சா தமிழிலும், நிதின் மற்றும் ரிச்சா தெலுங்கிலும் நடிக்க இருக்கிறார்கள். 'COURIER BOY KALYAN' என்று தெலுங்கில் இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டு இருக்கிறது.

இப்படத்திற்கு கார்த்திக் இசையமைக்க இருக்கிறார். அவரது இசையை கேட்டேன் அருமையாக இருக்கிறது. ஜுன் 14ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு படப்பிடிப்பு துவங்குகிறது.

'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் இசை வெளியீடு ஜுலை முதல் வாரத்தில் இருக்கும். ஜுலை 1ம் தேதி கூட இருக்கலாம். படத்தின் இசை கண்டிப்பாக அனைவரையும் கவரும். படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளிவரும். 'மாற்றான்' அலையில் காணாமல் போக விருப்பமில்லை.

தயாரிப்பில் இருக்கும் 'தங்கமீன்கள்' ஒரு மென்மையான படம். விரைவில் அப்படம் வெளிவரும். யுவனின் இசை இன்னும் இரண்டு வாரங்களில் வெளிவரும். ராம் ஒரு அற்புதமான இயக்குனர்.

எனது இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 'யோஹன்' திரைப்படம் ஜுலை மாதம் முதல் துவங்குகிறது.  'யோஹன்' - ஆக்ஷன் அதகளம்! "

மறுபடியும் ஒரு காதல்: இலங்கைத் தமிழரின் உண்மையான நெகிழ வைக்கும் காதல் கதை.


சினிமாவில், கதை பிறந்த கதையை கேட்டால் அதுவே பெருங்கதையாக இருக்கும். அடுத்த வாரத்தில் ரிலீஸ் ஆகவிருக்கும் மறுபடியும் ஒரு காதல் படத்தின் கதையை கேட்டால், உலகம் ரொம்ப சின்னதுப்பா... என்று நம்மையறியாமல் முணுமுணுக்க தோன்றும்.
இப்படத்தின் இயக்குனர் வாசு பாஸ்கர் ஒருமுறை விமானப்பயணம் மேற்கொள்ளும் போது தவிர்க்க முடியாமல் மூன்று மணி நேரம் ஒரு விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியதாகிவிட்டதாம். அப்போது உடன் வந்த பெரியவர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தாராம். இலங்கை தமிழரான அவர், சிறுவயதில் தமிழ்நாட்டின் கரையோரப்பகுதியான நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடிதம் மூலமாகவே காதலித்து வந்தாராம். ஒருமுறை கூட இருவரும் நேரில் சந்தித்தது இல்லை.
பிறகு சூழ்நிலை காரணமாக இலங்கையை விட்டு வெளியேறியவர் ஒருகட்டத்தில் அந்த காதலியை மறந்தே போனார். வயதான காலத்தில் இவரது மனைவி ஒருநாள், சிறுவயது காதல் சம்பவங்கள் ஏதாவது இருந்தால் கூறுங்களேன் என்று கேட்க, இந்த சம்பவத்தை சொன்னாராம் பெரியவர். சட்டென்று கண்கலங்கி அழுதாராம் கிழவி.
'எதுக்காக அழறே, இந்த வயசுல போயா நான் அந்த நாகப்பட்டினம் பெண்ணை தேடப் போறேன்?' என்று கிழவர் ஆறுதல் சொல்ல, பாட்டி சொன்னதுதான் பேரதிர்ச்சி. 'நீங்க சொல்ற அந்த நாகப்பட்டினம் பொண்ணே நான்தான்' என்றாராம் அவர்.
மறுபடியும் ஒரு காதல் படத்தின் கதை எனக்குள் அந்த இடத்தில்தான் பிறந்தது என்றார் வாசு.பாஸ்கர்.

மகள்களுடன் மனக்கசப்பு. சென்னையை விட்டு கோவை செல்லும் சூப்பர் ஸ்டார்.

விரைவில் கோவையில் குடியேறப் போகிறார் ரஜினி என்ற செய்தி, கோவை ரசிகர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி சமீபத்தில் அவரது குடும்ப நிகழ்வுகள் காரணமாக அமைதியின்றி தவிப்பதாகவும், இமய மலைக்கு ஓய்வெடுக்கச் செல்வதாகவும் பல்வேறு செய்திகள் வந்த வண்ணமிருந்தன.
இதற்கிடையே, அவர் கோவையில் குடியேறப் போவதாக குமுதம் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகள்கள் பிரச்சினையால் மன நிம்மதி இழந்த ரஜினி, கோவை ஆனைகட்டியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமம் அருகே, அமைதியான சூழலில் ஒரு இடம் பார்த்து தேர்வு செய்த ரஜினி, அங்கே ஒரு சிறிய அழகான பங்களாவை உருவாக்க உத்தரவிட்டுள்ளார்.

Rajini shifting his residence to Coimbatore?

அதன்பேரில் கடந்த ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த பங்களா, கிடுகிடுவென கட்டி முடிக்கப்பட்டு, இப்போது முடியும் தறுவாயில் உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினி சில காலம் அமைதியாக இங்கே தங்கியிருக்க விரும்புவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வீடு குறித்து எந்த தகவலையும் வெளிப்படுத்தாவிட்டாலும், அந்தப் பகுதி மக்கள் இதை ரஜினி வீடு என்றே அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தி வெளியானதிலிருந்து கோவை ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துவிட்டதோடு, தலைவர் வீட்டைப் பார்த்துவிட்டு வர ஆனைகட்டிக்கு போக ஆரம்பித்துவிட்டார்களாம்.

ரூ.48 கோடி வசூல் செய்த கர்ணன் படத்தின் 100வது நாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடு.



 Karnan's 100th day function





சிவாஜியின் ‘கர்ணன்’ படம் 1964-ல் ரிலீசானது. 48 வருடத்துக்கு பிறகு இப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகூட்டி கடந்த மார்ச் 16-ந்தேதி மறு ரிலீஸ் செய்தனர். 

தமிழகம் முழுவதும் 72 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. சென்னை சத்யம் தியேட்டரில் ‘கர்ணன்’ படம் வெற்றிகரமாக ஓடி 100-வது நாளை நெருங்குகிறது.

வருகிற 23-ந்தேதி இங்கு 100-வது நாள் கொண்டாடப்படுகிறது. இன்னும் இந்த தியேட்டரில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகிறது. சென்னை சாந்தி தியேட்டரில் இப்படம் மறு ரிலீஸ் செய்து 50 நாட்கள் தாண்டி ஓடியது.

திருச்சி, மதுரை, தஞ்சாவூர், நெல்லை, நாகர்கோவில் தியேட்டர்களிலும் 50 நாட்கள் ஓடியது. ஒவ்வொரு தியேட்டராக மாறி மொத்தம் 250 தியேட்டர்களில் இப்படம் ஓடி உள்ளது.

இதுவரை கர்ணன் படம் ரூ. 5 கோடி வசூல் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 112 வருட தமிழ் சினிமா வரலாற்றில் மறுரிலீஸ் செய்த படம் 100 நாட்கள் ஓடியது இதுவே முதல் முறையாகும்.

தெலுங்கில் மாயாபஜார் என்ற கறுப்பு வெள்ளை படத்தை கலரில் மாற்றி மறுரிலீஸ் செய்து 100 நாட்கள் ஓட்டினர். கர்ணன் படத்தை தயாரித்தபோது அதன் மொத்த பட்ஜெட் 40 லட்சம் ஆகும். அப்போதும் 4 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது.

இந்த படத்தில் சிவாஜி கர்ணனாகவும் அசோகன் துரியோதனனாகவும் முத்துராமன் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். பி.ஆர்.பந்துலு இயக்கியுள்ளார்.

சென்னையில் 100-வது நாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாட திவ்யா பிலிம்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது. நடிகர்-நடிகைகள் இதில் பங்கேற்கின்றனர். பழைய நடிகர்கள் விழாவில் கவுரவிக்கப்படுகிறார்கள்.

சிவாஜி ரசிகர்கள் சார்பில் 100-வது நாள் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் சந்திரசேகரன் அறிவித்து உள்ளார்.

Tuesday 12 June 2012

டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி...










டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Step1

ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

Step2

கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.

Step3

அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)

Step4

வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.

Step5

இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.

Step6

இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.

இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.

(அடையனும்..ஹூம்....நமக்கு இவ்வளவு அறிவு இருப்பதை தெரிந்து இதிலிருந்தும் தப்பிக்க ஒருவேளை பாழாய்ப் போன கொசுக்கள் புதிய யுக்தி எதையாவது கடைப் பிடிக்க ஆரம்பித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவ்வளவு தான் இப்போதே சொல்லிப்புட்டேன்.)

நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
இதன் பலனை 4x5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.

Friday 8 June 2012

மீண்டும் சீண்டும் சிம்பு !

சிம்பு நடிப்பில் நேற்று முதல் வாலு படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. ஹன்சிகா, சந்தானம், கணேஷ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு TEASER ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் முழுக்க முழுக்க மீண்டும் தனுஷை சீண்டி இருக்கிறார் சிம்பு.

ஹன்சிகா சிம்புவைப் பார்த்து பேசும் வசனம் ஒன்று இந்த டீசரில் வருகிறது. அதில் " ஒருசில பசங்களை பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும், உன்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்கும் " என்பார் ஹன்சிகா. 

'படிக்காதவன்' படத்தில் தமன்னாவிடம் தனுஷ் " என்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்காது, பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும் " என்பார்.

அதை அப்படியே மாற்றி  உன்னையெல்லாம் பார்க்க பார்க்கதான் பிடிக்கும், என்னை பெண்ணுங்களுக்கு பார்த்த உடனே பிடிக்கும் என சீண்டியிருக்கிறார் சிம்பு என்கிறது கோலிவுட்.

இப்படத்தின்  படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் தான் நடைபெற இருக்கிறது. அதுமட்டுமல்லாது, சிம்பு நடிப்பில் உருவாகும் குறுகிய கால தயாரிப்பு படம் 'வாலு' தான். தீபாவளி தினத்தன்று 'வாலு' வெளிவரும் என்று தெரிவித்து இருக்கிறது படக்குழு.

TEASERல் லேசாக தனுஷ் சீண்டிருக்கும் சிம்பு, படத்தில் என்ன பண்ண போகிறாரோ... அவர் என்ன வாலுத்தனம் செய்தாலும் அது 'வாலு' படத்திற்கு விளம்பரம் தான்!