Friday 15 June 2012

ஆமாம், நான் இனத் துரோகிதான்! சீற்றம் குறையாத சீமான்

லைஞரை விட்டால் ஜெயலலிதா... ஜெயலலிதாவை விட்டால் கலைஞர் எனப் பழகிவிட்டது என் இனம். நாதியற்ற இனமாக, சகித்துக்கொள்ள முடியாத இனமாக, இனியும் தமிழினம் இருக்காது. தமிழகத்தில் இருக்கும் திராவிட அரசியல் கட்சிகள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். என் இனம், என் மொழி எனச் சொல்லும் தைரியம் இன்றைக்கு அரசியல் நடத்தும் திராவிடத் தலைவர்கள் யாருக்காவது இருக்கிறதா? 'தமிழர் இனம்’ எனப் பேசி அரசியல் நடத்தும் திராவிடக் கட்சித் தலைவர்களுக்கு பெரியாரின் பெயர் ஒரு முகமூடியாகத் தேவைப்படுகிறது. அதனால்தான், எங்கள் கட்சியின் கொள்கை விளக்க ஆவணத்தை வைத்து இப்படி ஆளாளுக்கு அரசியல் கொடி பிடிக்கிறார்கள்'' - சீற்றம் குறையாமல் தொடங்குகிறார் சீமான்.
 நாம் தமிழர் கட்சிக் கொள்கை ஆவணத்தில், 'பெரியார் மட்டுமே திராவிடம் இல்லை’ என்பதுபோல இடம்பெற்று இருக்கும் சில வாக்கியங்கள் பெரியாரிஸ்ட்டுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கின்றனவே என்ற கேள்விக்குத்தான் இப்படி எடுத்த எடுப்பிலேயே தாக்குதலில் இறங்கினார் சீமான்.
''அதற்காக, கொள்கை விளக்க ஆவணத்தில் பெரியாரைத் தமிழர் வளர்ச்சிக்கு எதிரானவராகக் குறிப்பிட்டு இருப்பது நியாயம் ஆகுமா?''
''கொள்கை விளக்க ஆவணம் திருத்துதலுக்கும் மாறுதலுக்கும் உட்பட்டது என்பதை அதில் நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறோம். மூத்திரப் பையோடு அலைந்த நிலையிலும் சூத்திரப் பிரிவுகளைக் கண்டித்த பெரியார், மண்ணுக்குள் போகும் வரை இந்த மண்ணுக்காகப் போராடியவர். அந்தப் பழுத்த தாடிக் காரரைத் தவிர்த்துவிட்டு, சுயமரியாதை தொடங்கி பெண்ணியம் வரை எதையும் இங்கே பேச முடியாது. ஆவணத்தில் திராவிட அரசியல், தேசிய அரசியல்பற்றிச் சொல்லும்போது, திராவிடம் என்றால் பெரியார் மட்டுமே இல்லை என்பதையும் சொல்லி இருக்கிறோம். 'வெள்ளையா இருக்குறவன், பொய் சொல்ல மாட்டான். படிச்சவன் சொன்னா, சரியா இருக்கும்னு நம்பாதே. எதையும் அறிவால் விமர்சனம் செய். விவாதி’ எனச் சொன்னவர் பெரியார். விவாதிக்கப்படும் கருத்துதான் வீரிய வடிவம் எடுக்கும் என்பது அவர் கற்பித்த பாடம். அவர் வழி நின்றுதான் அவர் கொள்கைகளை நாங்கள் அலசுகிறோம். பெரியாரை விமர்சிக்கவே கூடாது என்பவர்கள் பெரியாரிஸ்ட்டா? பெரியாரையும் விமர்சனத்துக்கு உட்படுத் திப் பார்க்கும் எங்களைப் போன்றவர்கள் பெரியாரிஸ்ட்டா?''
''பெரியார் கருத்து குறித்த விவாதம் உங்களைத் தமிழினத் துரோகியாகக் கட்டமைக்க வழிவகுத்து இருக்கிறதே?''
''ஆமாம், நான் இனத் துரோகிதான். என்னைத் திட்டுபவர்களின் இனத்துக்கு நான் துரோகி. நான் துரோகி என்றால், இங்கே வேறு யாருப்பா தியாகி? பெரியா ரின் வாரிசாக மஞ்சள் துண்டுக்குள் உடலை அடைத்துக்கொண்டு வருபவரா? பெரியா ரின் புத்தகங்கள் அரசுடமை ஆகவிடாமல் தடுக்கும் பெரியவர்களா? கொஞ்சமும் குரல் அடங்காதவனாக இப்போதும்சொல் கிறேன்... திராவிட அரசியல் கட்சிகளின் கொட்டம் அடக்கும் சக்தியாக இனி நாங்கள்தான் இருப்போம். அதே நேரம், அரசியல் சாராத திராவிட அமைப்புகளுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரிகள் இல்லை. என்றைக்குமே எங்களின் பெருமைக்குரிய வழிகாட்டி பெரியார்தான். தமிழ்த் தேசிய இனத்தில் பிறந்து தமிழின முகவரியாக, அடையாளமாக, வீரமாக, மானமாக இருக் கும் பிரபாகரன் எங்களின் தலைவன். இதில் மாற்றுக் கருத்து என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.''
''திராவிடர் என்பது மாயை எனச் சிலர் புதிதாகப் பேசக் கிளம்பி இருக்கிறார்கள் என திருமாவளவன் உங்களைச் சூசகமாக வசைபாடி இருக்கிறாரே?''
''நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தனித்து நின்று இருந்தால், ஈழத் துயரத்தின் எதிரொலியும் எங்களோடு இயைந்தவர்களின் குரல் ஒலியுமே அவரை அமோகமாக வெற்றிபெற வைத்திருக்கும். இன்றைக்கு இந்த சீமான் தனிக் கட்சி தொடங்கி நடத்த வேண்டிய அவசியமே இல்லாமல் போயிருக்கும். 'திராவிடத் தலைமைகளை வீழ்த்த வேண்டும்’ எனச் சொன்னவரே அண்ணன் திருமாவளவன்தான். அதே திருமாதான் இன்றைக்கு, 'கலைஞர், ஸ்டாலினைவிட நல்ல தலைவர்கள் யாரும் இல்லை’ என்கிறார். அப்படிச் சொல்பவர் ஏன் தனியே கட்சி நடத்த வேண்டும்? பேசாமல் நல்ல தலைவராகிய கலைஞரின் கட்சியிலேயே போய்ச் சேர்ந்துவிட வேண்டியதுதானே? அண்ணன் திருமா அவர்களே... நான் பேசும் அனைத்தும் நீங்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களே தவிர, நான் வேறு எங்கும் கற்றுவரவில்லை.''
''கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் பலரும் உங்களை விமர்சிக்கிறார்களே?''
''அண்ணன்கள்தானே திட்டுகிறார்கள். நன்றாகத் திட்டட்டும். சின்ன வயதில் அப்பா, அம்மா திட்டினார்கள். நல்ல பிள்ளையாக உருவெடுத்தேன். படிக்கும்போது ஆசிரியர்கள் அன்பாகத் திட்டினார்கள். தகுதி படைத்த மாணவனாக உருவெடுத்தேன். இப்போது அரசியல் தளத்தில் அண்ணன்கள் திட்டுகிறார்கள் என்றால், நான் நல்ல அரசியல் தலைவனாக வருவேன் என்பது உறுதியாகிவிட்டது.''
''ஆரம்பத்தில் ஜெயலலிதாவை ஆதரித்துப் பேசினீர்கள்... இந்த ஒரு வருட ஆட்சியிலும் உங்களுக்கு உடன்பாடுதானா?''
''யாரையும் வலிந்து ஆதரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நல்லது நடந்தால் பாராட்டுவோம்; அவலம் நடந்தால் தட்டிக்கேட்போம். சட்டமன்றத்தில் போர்க் குற்றத் தீர்மானம் கொண்டுவந்ததில் தொடங்கி, தூக்கின் நிழலில் அல்லாடும் தம்பிகளுக்காகக் குரல் கொடுத்தவரை அந்த அம்மையாரின் செயல்பாடுகளை நாங்கள் வரவேற்றோம்; வாழ்த்தி னோம். ஆனால், பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு அப்பாவி உயிர்களை இந்த அரசு காவு வாங்கியதை நாங்கள் கண்டித்தோம். இது மிகப் பெரிய வரலாற்றுத் துயரம். இன்றைக்கு ஒரு இடைத்தேர்தலைச் சந்திக்க 32 அமைச்சர்கள், 10 மேயர்கள் ஒரு மாதமாக புதுக்கோட்டையில் அலைந்து திரிகிறார்கள்; பணத்தை இறைக்கிறார்கள். இந்த ஆட்சி எவ்வளவு சிறப்போடு நடக்கிறது என்பதற்கு இந்தக் கேவலமான காட்சிகளே உதாரணம். பால் விலையை உயர்த்தியது தொடங்கி, சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டம், அண்ணா நூற்றாண்டு நூலக இடம் மாற்ற அறிவிப்பு, தேவையற்ற கைதுகள், கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் தடுக்கத் தவறியது என இந்த ஆட்சியின் பிழைகள் எக்கச்சக்கம். கேரள வெறியர்களால் சாந்தகுமார் எண்ணெய் ஊற்றிக் கொல்லப்பட்டபோது, ஓர் இரங்கல்கூட அறிவிக்காதவர்தான் நம் முதல்வர். கண்ணீரில் தத்தளிக்கும் சாந்தகுமாரின் மனைவிக்கு நாங்கள் கவர்னர் வேலை கேட்கவில்லை. சாதாரண சத்துணவு ஆயா வேலைதான் கேட்டோம். அதைக்கூட செய்ய மறுத்தவரைப் பற்றி என்ன பேசுவது?''
''விஜயகாந்த்?''
''தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் திராவிடத் தலைவர்களில் வேகமாக அரைப்பவர். தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன உயர்ந்தபட்சக் கொள்கை, ரேஷன் அரிசியை வீட்டுக்கே வந்து தருவதுதான். நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையில், ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் வந்து சமைத்து ஊட்டுவோம் எனச் சொன்னால் எப்படி இருக்கும்? இதுதான் அரசியல் பொருளாதாரக் கொள்கையா? மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் இதுதானா? அண்ணன், ஐயாக்கள் செய்த பிழையில் முளைத்த களைதான் விஜயகாந்த். எனக்கு எதிராகப் பாயும் தமிழினத் தலைவர்களைக் கேட்கிறேன்... கட்சி தொடங்கிய ஏழே வருடங்களில் விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவர் ஆகிறார் என்றால், உங்களின் கையாலாகாத்தனத்தை என்ன சொல்வது? எங்களுக்கு முன்னவர்கள் செய்த பிழையை நாங்கள் செய்யத் தயார் இல்லை. 2016-ல் தேர்தல் களத்தில் நாங்கள் நிற்கிறோம். பத்து ஆண்டுகள் கனவு வேலைத் திட்டம். ஊழலற்ற உண்மையான, நேர்மையான மக்களாட்சியை வெல்ல மாற்றத்துக்காக கருத்துப் புரட்சி செய்கிறோம். 2016-ல் பாய்வோம். 2020-ல் ஆள்வோம்.''
''சரி, 'பகலவன்’ படம் என்ன ஆனது?''
''தண்ணீரால் நனைய வேண்டிய பூமி, கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைகிறது. என் மக்கள் பிரச்னைகளில் புழுங்கித் தவிக்கிறார்கள். இதையெல்லாம் குறியீடாக வைத்து, 'கல்வி என் மக்களுக்கானது’ என்பதைச் சொல்லும் படம்தான் 'பகலவன்’. முதலில் விஜய் நடிப்பதாக இருந்தது. கதை கேட்டு சரி என்று சொன்னவர், ஏன் விலகினார் என்று தெரியவில்லை. இப்போது ஜீவாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஜீவா கட்டாயம் நடிப்பார். படம் வெளியாகும்போது, இந்தப் படத்தைத் தவறவிட்டது தவறு என்பதைத் தவற விட்டவர்கள் உணர் வார்கள்.''
''திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே இருக்க முடிவெடுத்துவிட்டீர்களா?''
''இதுபோன்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவாவது சீக்கிரமே திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்!''

No comments:

Post a Comment