சினிமாவில்,
கதை பிறந்த கதையை கேட்டால் அதுவே பெருங்கதையாக இருக்கும். அடுத்த
வாரத்தில் ரிலீஸ் ஆகவிருக்கும் மறுபடியும் ஒரு காதல் படத்தின் கதையை
கேட்டால், உலகம் ரொம்ப சின்னதுப்பா... என்று நம்மையறியாமல் முணுமுணுக்க
தோன்றும்.
இப்படத்தின்
இயக்குனர் வாசு பாஸ்கர் ஒருமுறை விமானப்பயணம் மேற்கொள்ளும் போது தவிர்க்க
முடியாமல் மூன்று மணி நேரம் ஒரு விமான நிலையத்தில் காத்திருக்க
வேண்டியதாகிவிட்டதாம். அப்போது உடன் வந்த பெரியவர் ஒருவரிடம் பேச்சுக்
கொடுத்தாராம். இலங்கை தமிழரான அவர், சிறுவயதில் தமிழ்நாட்டின்
கரையோரப்பகுதியான நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடிதம் மூலமாகவே
காதலித்து வந்தாராம். ஒருமுறை கூட இருவரும் நேரில் சந்தித்தது இல்லை.
பிறகு
சூழ்நிலை காரணமாக இலங்கையை விட்டு வெளியேறியவர் ஒருகட்டத்தில் அந்த
காதலியை மறந்தே போனார். வயதான காலத்தில் இவரது மனைவி ஒருநாள், சிறுவயது
காதல் சம்பவங்கள் ஏதாவது இருந்தால் கூறுங்களேன் என்று கேட்க, இந்த
சம்பவத்தை சொன்னாராம் பெரியவர். சட்டென்று கண்கலங்கி அழுதாராம் கிழவி.
'எதுக்காக
அழறே, இந்த வயசுல போயா நான் அந்த நாகப்பட்டினம் பெண்ணை தேடப் போறேன்?'
என்று கிழவர் ஆறுதல் சொல்ல, பாட்டி சொன்னதுதான் பேரதிர்ச்சி. 'நீங்க சொல்ற
அந்த நாகப்பட்டினம் பொண்ணே நான்தான்' என்றாராம் அவர்.
மறுபடியும் ஒரு காதல் படத்தின் கதை எனக்குள் அந்த இடத்தில்தான் பிறந்தது என்றார் வாசு.பாஸ்கர்.
No comments:
Post a Comment