Friday 30 March 2012

சங்கரன்கோவிலில் நடந்தது சவால் தேர்தல்-ஓர் அலசல்

 இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்பது அசைக்க முடியாத விதியாக மாறிப்போனாலும், அ.தி.மு.க. வாங்கிய வாக்குகள் அபரிதமானவை. இரண்டாம் இடத்தைத் தி.மு.க. பிடித்தாலும் அந்தக் கட்சிக்கும் ம.தி.மு.க-வுக்கு மான வித்தியாசம் மிகமிகக் குறைவு என்பது கவனிக்கத்தக்கது.
இதைத் தாண்டி நால்வருக்குமே சங்கரன்கோவில் தேர்தல் முடிவுகள் சில செய்திகளைச் சொல்லியிருக்கின்றன!
எப்படிக் கிடைத்தது அ.தி.மு.க-வுக்கு?
பதிவான சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் சுமார் 95 ஆயிரம் வாக்குகளை அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வியே அள்ளிவிட்டார். அடுத்து வந்த தி.மு.க. வேட்பாளரைவிட சுமார் 68 ஆயிரம் வாக்குகள் அதிகம். ஜெயலலிதாவுக்கு இது மகத்தான வெற்றி.
இந்த வெற்றி எப்படிக் கிடைத்தது? 32 மந்திரிகளும் அத்தனை எம்.எல்.ஏ-க்களும் ஒரு மாதம் சங்கரன்கோவிலிலேயே டேரா போட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கத் தாமதமானதால் அரசின் இலவசத் திட்டங்கள் அனைத்தும் அங்கு சீரும்சிறப்புமாக அரங்கேறின. கடைசி நாளில் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாக அ.தி.மு.க-வினர் மீது எதிர்க் கட்சிகள் வெளிப்படையாகக் குற்றம்சாட்டின. ஜெயலலிதா அதை மறுக்கவில்லை!
சங்கரன்கோவில் தொகுதி எப்போதுமே இரட்டை இலையின் கோட்டை. ஜெயல லிதாவே தோற்றுப்போன 1996 சட்டமன்றத் தேர்தலில்கூட இலைதான் இங்கு வென்றது. தமிழ்நாட்டில் நாலே நாலு தொகுதிகள் வென்றபோதே ஜெயம் கொடுத்த தொகுதி இது. எனவே, அ.தி.மு.க.தான் வெல்லும் என்பதில் ஜெயலலிதாவுக்குச் சந்தேகம் இல்லை. 'விஜயகாந்துக்கு விட்ட சவாலை எதிர்கொள்ள வேண்டும். அவரது தயவில் நான் கடந்த தேர்தலில் ஜெயிக்கவில்லை!’ என்பதை ஆணித்தரமாகப் பறைசாற்றத் துடித்தார் ஜெயலலிதா.
நாயக்கர்களுக்காக தெலுங்கில் பேசி... பரமக்குடி பயத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியைச் சந்தித்து... முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் குடும்பத்தைத் தேர்தலுக்கு முந்தைய வாரம் கார்டனுக்கு வரவழைத்து காபி கொடுத்து... சரத்குமாரையும் பிரசாரத் துக்கு அழைத்து... ஜெயலலிதா சும்மா ஜெயித்துவிடவில்லை. 'இழந்தது’ அதிகம். இது அனைத்து மந்திரிகளுக்கும் தெரியும்!
வருத்தம் வேண்டும் தி.மு.க-வுக்கு!
நெல்லை மாவட்டத்தில் கறுப்பு - சிவப்புக் கொடியை ஏற்றி முதன்முதலில் கிளைக் கழகத்தைத் தொடங்கிவைத்த கருணாநிதிக்கு, சங்கரன்கோவிலில் டெபாசிட் போனது மரியாதையைத் தராது. 'தோல்விக்காக வருந்தத் தேவை இல்லை!’ என்று தொண்டர்களுக்கு அவர் சொல்கிறார். தொண்டர்கள் வருந்தத் தேவை இல்லை. ஆனால், அவர் நிச்சயம் வருத்தப்படத்தான் வேண்டும்.
இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் ஜெயிக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க-தான் வென்றது. ஆனால், சங்கரன்கோவிலில் வாங்கிய வாக்குகள்? 9 மாதங்களுக்கு முன் நடந்த பொதுத் தேர்தலில் 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற தி.மு.க-வுக்கு, இப்போது பாதி வாக்குகள்கூடக் கிடைக்கவில்லை. அ.தி.மு.க-வில் இந்நாள் அமைச்சர்கள் குவிந்ததுபோல, தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர்கள் குவிந்தார்கள். தலைமைக் கழகம் பணம் தரவில்லை என்றாலும் இவர்கள் பழைய பசையோடும்... சொந்த மாவட்டத்து பிரியாணி மாஸ்டர்களோடும் சங்கரன்கோவிலைச் சுற்றினார்கள். இவர்கள் போதாது என்று அழகிரியும் ஸ்டாலி னும் தங்களது அரசியல் எதிர்காலத்தை சங்கரன்கோவிலில் தேடிக்கொண்டு இருந்தார்கள்.
'இது இடைத்தேர்தல் அல்ல. எடைத் தேர்தல்! நடக்கும் ஆட்சியை எடை போட்டுப் பார்க்கும் தேர்தல்’ என்று கோமதி அம்மன் கோயில் வாசலில் சொல்லிப் பார்த்தார் கருணாநிதி. அவரோடு காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் என்று பலர் மேடையை நிரப்பினார்கள். பயனில்லை. டெபாசிட் போனது. 'மோசமான ரூட்ல கூட்டிட்டுப் போயி முதுகு வலி வந்திருச்சே!’ என்று மதுரை விமான நிலையத்தில் வருத்தப்பட்டபடி வான் வண்டி ஏறியதுதான் மிச்சம்!
மகிழ்ச்சி கிடைக்காத ம.தி.மு.க!
சங்கடங்கோவிலாக மாறிவிட்டது வைகோவுக்கு! 'வெற்றி லட்சியம்; இரண்டாவது இடம் நிச்சயம்’ என்ற உறுதியோடு ம.தி.மு.க-வினர் இரண்டு மாதங்களாக வேலை பார்த்தார்கள். ஆனால், பிரசாரக் களத்துக்குள் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் கரன்சியோடு குதித்தபோது, ம.தி.மு.க-வினர் சுணங்கிப்போனார்கள். அதிலும் கடைசி இரண்டு நாள் நிலைமை அவர்களை மொத்தமாகவே முடக்கிவிட்டது. 'தேர்தல் தேதியைத் தள்ளிவையுங்கள்’ என்று தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு வைகோ சோர்ந்துபோனார்.
சொந்தத் தொகுதி, சொந்தக்காரர்கள் அதிகம் இருக்கும் தொகுதி, 50 ஆண்டுகளாக வலம் வரும் கிராமங்கள் நிறைந்த தொகுதி என எத்தனையோ ப்ளஸ்கள் இருந்தாலும் இரண்டாம் இடம் பிடிக்கவில்லை. வாக்குகள் 20 ஆயிரத்தைத்தான் தொட முடிந்தது. கொள்கைப் போராட்டங்களுக்கும் தேர்தல் அரசியலுக்கும் உள்ள வித்தியாசத்தை ம.தி.மு.க-வினருக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்திவிட்டது சங்கரன்கோவில் முடிவு.
தேய்கிறதா தே.மு.தி.க?
சட்டசபையில் ஜெயலலிதா சவால் விட்டதுமே விஜயகாந்த், யதார்த்தமான பதிலைச் சொன்னார்: ''எல்லா இடைத்தேர்தல்களிலும் ஆளும் கட்சிதானே ஜெயிக்கும்!''
இதனாலேயே தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றுதான் நினைத்தார் விஜயகாந்த். ஆனால், அவரைத் தூண்டிவிட்ட புண்ணியவான் யாரென்று தெரியவில்லை. தேவை இல்லாமல் மாட்டிக்கொண்டு... 'தே.மு.தி.க-வுக்கு இவ்வளவுதான் (செல்)வாக்கு!’ என்பதை ஊருக்குச் சொல்லிவிட்டார். ''வாக்குப் பதிவு எந்திரத்தில் முதல் பெயராக முத்துக்குமாரும் முரசு சின்னமும் இருக்கும். அதில் குத்தி முதலாவது இடத்துக்கு வரவையுங்கள்'' என்றார். ஆனால், பிரதானக் கட்சிகளில் கடைசியாக வந்துவிட்டார்.
''தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு நான்தான் மாற்று'' என்று அவர் சொன்னது எடுபடவில்லை. இதற்குக் காரணம் 10 மாதங்களுக்கு முன் அ.தி.மு.க-வுக்கு ஓட்டுக் கேட்டார் என்பதனால் அல்ல. ''அவர்தான் மாற்று'' என்று மக்கள் உணர்வது மாதிரி இந்த 10 மாதங்களும் அவர் நடந்துகொள்ளவில்லை என்பதுதான்!
அதற்காக ஜெயலலிதா சொல்வதுபோல ''சவால்விட்டவர்களுக்கு வாக்காளர்கள் பதிலடி கொடுத்துவிட்டார்கள்'' என்றும் சொல்ல முடியாது. பென்னாகரம் இடைத்தேர்தலில்  ஜெயலலிதாவே டெபாசிட் இழந்தவர்தான். இடைத்தேர்தலில் விஜயகாந்த் நிற்காமல் இருந்து இருந்தால்கூட, விமர்சனத்தைத் தவிர்த்து இருக் கலாம். கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த ஐந்து இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க-வே போட்டி யிடவில்லை. எப்படிப் பார்த்தாலும் சமயோசித மாகச் செயல்பட விஜயகாந்த் தவறிவிட்டார்.
ஆக, நான்கு பேருக்கும் 'நச்’செனச் சேதி சொல்லி இருக்கிறது சங்கரன்கோவில்!

No comments:

Post a Comment