Thursday 29 March 2012

சிந்தனை கார்னர்

ஒவ்வொரு மனித மனத்துக்குள்ளும், அவனை அழிக்கும் பலவீனங்களும் உண்டு. ஆக்கும் ஆற்றல்களும் உண்டு.பொதுவான நமது வளர்ப்பு முறையும் சரி அல்லது சமூகச்சூழலும் சரி, நமது பலவீனங்களையே வளர்த்தெடுக்கின்றன.

நாம் ஒரு பத்து பேரிடம் பேசிப் பார்க்கும் போது அதில் ஒன்பது பேர், அடுத்தவர்களைக் குறை சொல்பவர்களாக இருக்கின்றார்கள்.
அல்லது புறம் சொல்வார்கள். பல நேரங்களில், இந்த ஒன்பது பேரில் ஒருவராகவே நாமும் இருக்கிறோம். இது மிகப்பெரிய குற்றமில்லைதான்.

ஆனால், கிழப்பருவம் எய்தும்போதும் சிலருக்கு இந்தக்குறை அவர்களை விட்டுப் போகவில்லை என்றால், அவர்களது உணர்வுகளை அவர்கள் ஆராய்ந்து பார்க்கவில்லை என்றுதானே பொருள்?

தனக்குள்ளே ஓர் ஆற்றல் இல்லாதவர் என்று ஒருவருமே இல்லை. எந்த ஒரு மனிதப் படைப்பும் வீணான படைப்பில்லை.

நாம் நம்முடைய பலவீனங்களை மிக பலமாகவும், பலத்தை மிக பலவீனமாகவும் பிடித்திருக்கிறோம். அதனால் கால ஓட்டத்தில் நமது பலவீனங்கள் உறுதி பெறுகின்றன. இந்த உறுதி, நமது பலத்தினை மிகவும் பலவீனமாக்கி, இறுதியில் ஒன்றுமில்லாமல் செய்து விடுகின்றன.

விதைத்த பின்னர், என் வேலை முடிந்தது என்று விவசாயி அமர்வ தில்லை. காரணம், நிறைய களைகள் வளரும் என்பது அவனுக்குத் தெரியும். அவை வளர்ந்தால், தான் பயிரிட்ட விதைகள் பயனற்றுப் போகும் என்பதும் அவனுக்குத் தெரியும். அவற்றை உடனுக்குடன் பிடுங்கி எறிவான்.

தனது விதைகள் வளர்ந்து பயன் தரும் வரை அவன் ஓய்வதில்லை. தேவையானவற்றை நிலத்தில் இட்டுப் பாதுகாத்து வளர்க்கும் விவசாயிக்குத்தான் பயன் கிடைக்கிறது.

தனக்குள்ளே வளரும் களைகளைப் பிடுங்கி எறிந்து, ஆற்றல்களை அடையாளம் கண்டு வளர்க்காத எவருக்கும் வெற்றியில்லை.
‘தன்னை வென்றவனே உண்மையில் மிகப்பெரிய வீரன்’ என்று பெரியவர்கள் சொன்னதன் காரணம் இதுதான்.

நம்மை எதிர்த்து நாமே செய்யும் ஓர் இடை விடாத போர். அது. ‘என்னை எது வளர்க்கும்; என்னை எது அழிக்கும்’ என்பதை நமக்குள் தேடி, நம்மை அழிக்கும் குணத்தை நாமே அழித்தொழிக்கும் போர்.

இந்தப் போரைத் தொடங்கி விட்டாலே போதும்; நமது ஆற்றலை நாம் உணரத் தொடங்குவோம். முயற்சி இருந்தால், நமது ஆற்றல் பன்மடங்கு விரிந்து வெற்றிகளைக் குவிக்கும்.

மூச்சு நின்றால் மட்டுமா மரணம்? முயற்சி நின்றாலும்தான்.

No comments:

Post a Comment