அக்னி
வெயில் ஆட்டம் போடும் நேரம் இது! 'ஹவ் டு பீட் த ஹீட்..?’ என்று அனை வரும்
மண்டை காய்ந்து கொண்டுஇருக்கும் இந்த சமயத்தில், 30 வகை 'கூல் கூல்
ரெசிபி’களை வழங்கி உங்களை குளிர்ச்சிப்படுத்துகிறார் சமையல் கலை நிபுணர்
தீபா பாலசந்தர்.
''தாகம் தணிப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் வகையில்
நெல்லி பட்டர் மில்க், மூலிகை சில்லர், சீரக - தனியா வாட்டர், இளநீர் -
பனங்கற்கண்டு டிரிங்க் போன்றவற்றை வழங்கியுள்ளேன். இந்தக் கோடையை உங்கள்
இல்லத்தில் இதமாக கொண் டாடுங்கள்'' என்று அழைப்பு விடுக்கும் தீபாவின்
ரெசிபிகளை, கண் குளிரும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
மல்டி வைட்டமின் ட்ரீட்
தேவையானவை: கேரட் - ஒன்று, நெல்லிக்காய் - 2, நறுக்கிய சௌசௌ - அரை கப், ஆரஞ்சு - ஒன்று, சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: கேரட்டை பொடியாக நறுக்கவும். நெல்லிக்காயின்
கொட்டையை நீக்கிவிட்டு சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். சௌசௌவை
தோலை சீவி பொடியாக நறுக்கவும். ஆரஞ்சு பழத்தை உரித்து சுளைகளை தனியே
எடுக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் அரைத்து,
வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் குளிர வைத்தால்... மல்டி வைட்டமின் ட்ரீட்
ரெடி!
பனானா ஃப்ளோட்
தேவையானவை: நன்கு பழுத்த வாழைப்பழம் - 2, பால் - ஒரு கப், சர்க்கரை - 10 டீஸ்பூன், ஐஸ்க்ரீம் - தேவையான அளவு, பாதாம், முந்திரி - தலா 10.
செய்முறை: பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும்.
வாழைப்பழத்தின் தோலை நீக்கி, பாலுடன் பழத்தை சேர்த்து, மிக்ஸியில்
அரைக்கவும். இதனுடன் சர்க்கரையையும், பொடியாக நறுக்கி வறுத்த பாதாம்,
முந்திரியையும் சேர்த்து குளிர வைக்கவும். பரிமாறும்போது பழக் கலவையை
'கப்’பில் போட்டு அதன் மேல் சிறிதளவு ஐஸ்கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.
மிக்ஸ்டு வெஜ் ராய்த்தா
தேவையானவை: தயிர் (கடைந்தது) - ஒரு கப், வெள்ளரி,
கேரட் - தலா ஒரு துண்டு, தக்காளி - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு
சிறு துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளரி ஆகியவற்றை
பொடியாக நறுக்கவும், கேரட்டை துருவிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி
துருவவும். தயிருடன் உப்பு, துருவிய கேரட், இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய
தக்காளி, வெள்ளரி, பச்சை மிளகாய் சேர்த்துக் கலக்கி, குளிர வைத்து
பரிமாறவும்.
நெல்லி பட்டர் மில்க்
தேவையானவை: நெல்லிக்காய் - 4, மோர் - ஒரு கப், உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு.
செய்முறை: நெல்லிக்காயின் கொட்டையை நீக்கிவிட்டு,
பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன்
பெருங்காயம், மோர் சேர்த்துக் கலக்கி, குளிர வைத்து பருகலாம்.
குறிப்பு: வைட்டமின் 'சி’ நிறைந்த இந்த எனர்ஜி டிரிங், வயதானவர்களுக்கு மிகவும் ஏற்றது.
ஆப்பிள் சோடா
தேவையானவை: ஆப்பிள் - ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை, சோடா - தேவையான அளவு.
செய்முறை: ஆப்பிளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி
மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை
கலந்து குளிர வைக்கவும். பரிமாறும்போது சோடா சேர்த்து கலந்து பரிமாறவும்.
ஜில் காபி
தேவையானவை: பால் - ஒரு கப், இன்ஸ்டன்ட் காபி பவுடர் (ப்ரூ, சன்ரைஸ் போன்றவை) - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 5 டீஸ்பூன், ஐஸ் க்யூப்ஸ் - 4.
செய்முறை: பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும். இதனுடன் இன்ஸ்டன்ட் காபி பவுடர், சர்க்கரை, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மிக்ஸியில் அரைத்துப் பருகவும்.
தர்பூஸ் பானகம்
தேவையானவை: தர்பூசணி பழம் - ஒரு கீற்று, சுக்குப்பொடி -
ஒரு சிட்டிகை, வெல்லம் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
ஐஸ்கட்டி - தேவையான அளவு.
செய்முறை: தர்பூசணி பழத்தின் தோல், விதைகளை
நீக்கிவிட்டு, சதைப் பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நைஸாக
மிக்ஸியில் அரைக்கவும். இத்துடன் ஐஸ்கட்டி சேர்த்து மீண்டும் மிக்ஸியில்
ஒரு சுற்று சுற்றவும். வெல்லத்தைப் பொடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி, கொதி
வந்த பின் வடிகட்டி, தர்பூஸ் கலவையுடன் கலந்து, சுக்குப்பொடி, ஏலக்காய்த்
தூள் சேர்த்து கலக்கி, பருகலாம்.
ஜீரா மில்க்
தேவையானவை: தேங்காய் - ஒன்று, சீரகம் - 2 டீஸ்பூன், வெல்லம் - தேவையான அளவு.
செய்முறை: சீரகத்தை ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
வெல்லத்தைப் பொடி செய்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, வடிகட்டவும்.
தேங்காயைத் துருவி, சீரகம் சேர்த்து அரைத்து, வடிகட்டி பால் எடுக்கவும்.
வெல்லக் கரைசலுடன் தேங்காய் பாலைக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
தேவையானபோது ஐஸ்கட்டி சேர்த்தோ, சேர்க்காமலோ பருகலாம்.
குறிப்பு: உடல் சூட்டை தணிப்பதோடு, வயிற்று புண்ணையும் ஆற்றவல்லது இந்த ஜீரா மில்க்.
திரிவேணி ஜூஸ்
தேவையானவை: ஆரஞ்சு சாறு - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - அரை கப், இஞ்சி சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: ஆரஞ்சு சாறு, எலுமிச்சைச் சாறு, இஞ்சி சாறு
ஆகியவற்றை ஒன்று சேர்த்து அவற்றுடன் சர்க்கரையையும் கலந்து, தேவையான அளவு
தண்ணீர் சேர்த்து, குளிர வைத்து பரிமாறலாம்.
டிரை ஃப்ரூட் கீர்
தேவையானவை: பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பேரீச்சம் பழம் - தலா 10, பால் (காய்ச்சியது) - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிட்டிகை.
செய்முறை: பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து, தோல்
உரிக்கவும். பிறகு, பாலில் பாதாம், முந்திரி, பேரீச்சையை சிறிது நேரம் ஊற
வைத்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து குளிர
வைத்தால்... ஹெல்தியான கீர் ரெடி!
கிர்ணிப்பழ ஜில் சாலட்
தேவையானவை: கிர்ணிப்பழம் - ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், இஞ்சி சாறு - அரை டீஸ்பூன், சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: கிர்ணிப்பழத்தை தோல் சீவி, விதைகளை நீக்கி
சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி சாறு எடுத்து கொள்ளவும்.
கிர்ணிப்பழ துண்டுகளுடன், இஞ்சி சாறு எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து
நன்கு கலக்கி, ஜில்லென்று பரிமாறவும்.
பூண்டு மோர்
தேவையானவை: மோர் - ஒரு கப், தோல் நீக்கிய பூண்டு - 4 பல், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கறிவேப்பிலையை அலசி சுத்தம் செய்யவும்.
பூண்டு, கறிவேப்பிலை, சீரகத்தை ஒன்று சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன்
மோரைக் கலந்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, உப்பு சேர்த்து,
குளிர வைத்து பருகலாம்.
குறிப்பு: காரம் அதிகம் விரும்புவோர்... பூண்டு, கறிவேப்பிலை, சீரகத்தை அரைக்கும்போது ஒரு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
ஃப்ரூட் பஞ்ச்
தேவையானவை: ஆப்பிள் - ஒன்று, அன்னாசி பழம் - ஒரு
துண்டு, ஆரஞ்சு பழம் - ஒன்று, எலுமிச்சம் பழம் - ஒன்று, சோடா - ஒரு
பாட்டில், சர்க்கரை - 10 டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு பழங்களை தோல்
நீக்கி சாறு எடுக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக்
கலக்கி, குளிர வைக்கவும். பரிமாறும்போது சோடாவை சேர்க்கவும். மேலே
ஐஸ்கட்டிகளை மிதக்க விட்டு பரிமாறவும்.
மின்ட் லைம் ஜூஸ்
தேவையானவை: எலுமிச்சைச் சாறு - ஒரு கப், புதினா சாறு - கால் கப், சர்க்கரை - தேவையான அளவு, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் நன்கு
கலந்து, குளிரச் செய்து, பரிமாறும்போது ஐஸ் கட்டிகளை மேலே மிதக்க விட்டு
பரிமாறலாம். விரும்பினால் புதினா இலைகளை மேலே தூவலாம்.
க்ரீம் பிஸ்கட் ஷேக்
தேவையானவை: க்ரீம் பிஸ்கட் - 4 (ஏதாவது ஒரு வகை), பால் - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 5.
செய்முறை: பாலைக் காய்ச்சி ஆறவிடவும். இதில் க்ரீம்
பிஸ்கட், சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் வைக்கவும். முந்திரிப் பருப்பை
பொடியாக நறுக்கி வறுக்கவும். பிஸ்கட் ஊறிய பாலை மிக்ஸியில் அடித்து, அதன்
மீது முந்திரியைத் தூவி, ஃப்ரிட்ஜில் வைத்து, கூலாக்கி பருகலாம்.
குறிப்பு: இந்த 'மில்க் ஷேக்’கை குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்
கேரட் ஜூஸ்
தேவையானவை: கேரட் - ஒன்று, சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: கேரட்டை சுத்தம் செய்து துருவவும்.
இதை தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து, சர்க்கரை
கலந்து குளிர வைத்து பருகலாம்.
குறிப்பு: நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இந்த ஜூஸை தினமும் பருகுவது மிகவும் நல்லது.
சீரக தனியா வாட்டர்
தேவையானவை: தண்ணீர் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு - 2.
செய்முறை: தண்ணீருடன் மிளகு, தனியா, சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறிய பின் வடிகட்டி, குளிர வைத்து பருகினால்... சுவையாக இருக்கும்.
குறிப்பு: உடல் ஆரோக்கியத்தைத் தரும் இந்த நீரை எல்லா வயதினரும் பருகலாம்.
பரங்கி பூசணி ஷேக்
தேவையானவை: பரங்கி - ஒரு துண்டு, பூசணி - ஒரு துண்டு, பால் - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன்.
செய்முறை: பரங்கி, பூசணியின் தோல், விதைகளை நீக்கி
துருவவும். இந்த துருவலுடன் தண்ணீர் சிறிதளவு விட்டு வேக வைத்து இறக்கி ஆற
வைக்கவும். பிறகு, காய்ச்சி ஆற வைத்த பால், சர்க்கரை இரண்டையும் அதில்
சேர்த்து நைஸாக அரைத்து, குளிர வைத்து பருகலாம்.
தக்காளி ஜூஸ்
தேவையானவை: பழுத்தத் தக்காளி - 5, மிளகு, சீரகம், உப்பு - தேவையான அளவு, சர்க்கரை - சிறிதளவு.
செய்முறை: தக்காளிப் பழம், மிளகு, சீரகம், உப்பு,
சர்க்கரை எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வடிகட்டி,
ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்த பிறகு பருகலாம்.
குறிப்பு: குட்டீஸ்களுக்கு தருவதானால்... மிளகு, சீரகம், உப்பு சேர்க்காமல், சர்க்கரை மட்டுமே கலந்து கொடுக்கலாம்.
இளநீர் பனங்கற்கண்டு டிரிங்க்
தேவையானவை: இளநீர் - ஒன்று, பனங்கற்கண்டு தூள் - 5 டீஸ்பூன்.
செய்முறை: இளநீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன்
பனங்கற்கண்டு கலந்து வைக்கவும். இளநீர் வழுக்கையை சிறு சிறு துண்டுகளாக்கி
அதனுடன் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த பிறகு பருகலாம்.
குறிப்பு: இது, தாகத்தை தணிப்பதோடு, உடல் சூட்டையும் தணிக்கும்.
வெஜ் மோர் கூலர்
தேவையானவை: கேரட் - ஒரு துண்டு, வெள்ளரி - ஒரு துண்டு, மோர் - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறு துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட், வெள்ளரி, இஞ்சியை சுத்தம் செய்து
உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதை மோருடன் கலந்து
வடிகட்டி குளிர வைத்து பரிமாறவும்.
குறிப்பு: விரும்பினால் கொத்துமல்லித்தழை சேர்க்கலாம்.
மூலிகை சில்லர்
தேவையானவை: சாத்துக்குடி - ஒன்று, தர்பூசணி துண்டுகள் -
ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், துளசி இலை, புதினா இலை - தலா
10, சர்க்கரை - 4 டீஸ்பூன்.
செய்முறை: சாத்துக்குடியை பிழிந்து சாறு எடுக்கவும்.
தர்பூசணிப்பழ துண்டுகளை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். சாத்துக்குடி சாறு,
தர்பூஸ் விழுது, எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கலந்து மேலே துளசி, புதினா
இலைகள் சேர்த்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறலாம்.
ஸ்வீட் லைம் லெமன் டீ
தேவையானவை: சாத்துக்குடி - ஒன்று, இன்ஸ்டன்ட் லெமன் டீ
பவுடர் (நெஸ் டீ - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 2 டீஸ்பூன்.
செய்முறை: சாத்துக்குடியை நறுக்கி ஜூஸ் பிழியவும்.
இதனுடன் சர்க்கரை, லெமன் டீ பவுடர், தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து,
ஃப்ரிட்ஜில் வைத்து பருகினால்... புத்துணர்ச்சி ஏற்படும்.
கிர்ணிப்பழ கூழ்
தேவையானவை: கிர்ணிப்பழம் - ஒன்று, சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: கிர்ணிப்பழத்தின் தோல், விதையை
நீக்கிவிட்டு... சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும். இதனுடன்
தேவைக்கேற்ப சர்க்கரை கலந்து பிசைந்து, ஃப்ரிட்ஜில் வைத்து, ஜில்லென ஆன
பின்பு பரிமாறவும்.
வெள்ளரி லஸ்ஸி
தேவையானவை: வெள்ளரிக் காய் - ஒன்று, தயிர் - ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், ஐஸ் க்யூப்கள் - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளரிக்காயை தோல் சீவி, துருவி,
மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் தயிர், சர்க்கரை சேர்த்து மேலும் ஒரு முறை
மிக்ஸியில் அடித்து, ஐஸ் க்யூப் சேர்த்து பரிமாறவும்.
கூல் டீ
தேவையானவை: டீத்தூள் - 3 ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறு துண்டு, சர்க்கரை - 3 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: டீத்தூளுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு,
இஞ்சியை தட்டி சேர்த்து, நன்கு கொதிக்கவிடவும். பிறகு, இறக்கி ஆற வைத்து
வடிகட்டி... எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து, ஃப்ரிட்ஜில்
வைத்து, குளிர்ந்த பின்பு பருகலாம்.
ஜாம் மில்க்ஷேக்
தேவையானவை: பால் - ஒரு கப், ஃப்ரூட் ஜாம் - 2 டீஸ்பூன், சர்க்கரை - சிறிதளவு.
செய்முறை: பாலைக் காய்ச்சி, ஆற வைத்து, ஜாம் சேர்த்து
மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து மீண்டும் மிக்ஸியில் ஒரு
முறை சுற்றி எடுத்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறினால்... சூப்பர்
சுவையில் இருக்கும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், டிரை ஃப்ரூட்ஸ் வகைகளை துண்டாக்கி மேலே தூவி பரிமாறலாம்.
தர்பூஸ் ஸ்பைசி ஜூஸ்
தேவையானவை: தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தர்பூசணி துண்டுகளுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பரிமாறும்போது ஐஸ்கட்டிகளை கலந்து பரிமாறலாம்.
வேஃபர் டிரிங்
தேவையானவை: வேஃபர் பிஸ்கட் - 2, பால் (காய்ச்சியது) - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன்.
செய்முறை: வேஃபர் பிஸ்கட்டை பாலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் சர்க்கரை கலந்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பருகலாம்.
குறிப்பு: பரிமாறும்போது, வேஃபர் பிஸ்கட்டை சிறு துண்டுகள் ஆக்கி மேலே மிதக்க விட்டும் பரிமாறலாம்.
ஐஸ்க்ரீம் ஷேக்
தேவையானவை: ஐஸ்க்ரீம் - ஒரு கப் (சிறியது), பால் - ஒரு கப் (காய்ச்சி ஆற வைத்தது), சர்க்கரை - 2 டீஸ்பூன்.
செய்முறை: ஐஸ்க்ரீம், பால், சர்க்கரை மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு நுரை வர அடித்து, குளிர வைத்து பரிமாறவும்.
குறிப்பு: பொடித்த பாதாம், முந்திரி வகைகளை பரிமாறும்போது சேர்த்துச் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment