Tuesday, 8 May 2012

சித்திரைப் பெருவிழாவில் கர்ஜித்த குரு


கலப்புத் திருமணம் செஞ்சுவைச்சா, தொலைச்சுப் புடுவேன்!


சட்டமன்றச் சறுக்கல், சி.வி.சண்முகம் உதவியாளர் கொலை வழக்கு, அன்புமணிக்கு கிடுக்கிப்பிடி போடும் டெல்லி சி.பி.ஐ., வேல்முருகன் நீக்கம்.. என்று, ராமதாஸுக்கு நெருக்கடியான நேரம் இது. அதனால்தானோ என்னவோ, மீண்டும் வன்னிய ஆயுதத்தைக் கையில் எடுத்து இருக்கிறார் ராமதாஸ். 
கடந்த 5-ம் தேதி மாமல்லபுரத்தில், சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா கொண்டாடப்​பட்டது. கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்று காடுவெட்டி குருவும், திருக்கச்சூர் ஆறுமுகமும் கடந்த மூன்று மாத காலமாகவே வட மாவட்டங்களில் சுற்றிச் சுழன்றனர். அதன் பலன் விழாவில் தெரிந்தது. 'அய்யாவும் சின்னய்யாவும் தன்னோட செல்வாக்கைக் காட்டிட்டாங்க’ என்று பாட்டாளிச் சொந்தங்கள் பெருமைப்பட்டுக் கொண்டனர்!
காலையிலேயே குடும்ப சகிதமாக மாமல்ல​புரம் வந்துவிட்டார் ராமதாஸ். வாகன நெரிசலால் ஸ்தம்பித்துப்போனது மாமல்லபுரம். மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு வருடமும் டாஸ்மாக் கடைகளில் பிரச்னை நடக்கிறது என்பதால், முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டதாம். வாகனங்களில் வந்த பலரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காக்கிகளை, காது கூசும் வார்த்தைகளால் வசை பாடியதைப் பார்க்க முடிந்தது.
இளைஞர் பெருவிழா தொடங்கியதும், மாநாட்டுத் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, வன்னியர்களைக் கௌரவப்படுத்தும் நாடகங்கள் அரங்கேற... மேடைக்கு எதிரே குடும்பத்தினரோடு அமர்ந்து ரசித்தார் ராமதாஸ். மேடைக்கு இருபுறமும் கட்டுக்​கடங்காத இளைஞர் கூட்டம் கூச்சலிட்டு அனைவரையும் எரிச்சலூட்ட... ராமதாஸ் அப்செட் ஆனார். இன்னும் சிலர் மின்கம்பங்களில் ஏறிக்கொண்டு, கீழே இறங்காமல் அடம்பிடிக்க... திருக்கச்சூர் ஆறுமுகமும் காடுவெட்டி குருவும், கெஞ்சலாகவும், மிரட்டலாகவும் பேசி இறங்க வைத்தனர். கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் பேசத்தொடங்கிய காடுவெட்டி குருவின் பேச்சில் செம காட்டம். ''எங்களுக்குச் சாதி வெறி பிடித்து இருக்கிறது என்று பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இந்த நாட்டில் எவனுக்கு சாதி வெறி இல்லை? தி.மு.க-வில் உள்ள செட்டியார்களும் முதலியார்களும் அடுத்த சாதியிலா சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள்?
அடுத்த முதலமைச்சரா யார் யாரோ வருவாங்கன்னு பத்திரிகைகாரங்க சொல்றாங்க... ஒரு வன்னியன் வருவான்னு எழுதலையே... ஏன்? எல்லாம் சாதி வெறி'' என்று பாய்ந்தவர், அடுத்த விவகாரத்துக்குப் போனார்.
''நம் இனத்துப் பெண்களைப் பலாத்காரம் செஞ்சு கலப்புத் திருமணம் செய்றாங்க. நாம எச்சரிக்கையா இருக்கணும். நம்ம சாதியிலதான் நாம கல்யாணம் செய்யணும். எவன்டா சாதிய ஒழிச்சான்? நான் வன்னியர் சங்கத் தலைவர் சொல்றேன். யாராவது எங்க பொண்ணுங்களுக்கு கலப்புத் திருமணம் செஞ்சு​வைச்சா... தொலைச்சுப்புடுவேன்'' என்று எச்சரிக்கை செய்தார்.
எப்போதும் பேசுவதுபோலவே, ''இளைஞர்கள் போதைக்கு அடிமையாகக் கூடாது. கட்சியைப் பலப்படுத்த வேண்டும்'' என்று அறிவுரை சொன்னார் அன்புமணி.
இறுதியாக மைக் பிடித்தார் ராமதாஸ். ''தமிழகத்தை வளர்ச்சியடையச் செய்கிறேன்னு ஒருத்தர் டி.வி. பொட்டியைக் கொடுத்​தார். இன்னொருவர் ஆட்டுக்குட்டி கொடுக்கிறார். இதுவா பொருளாதார வளர்ச்சி? இதுவரை நீங்க ஆட்சி செய்ததில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால்தான் ஆட்சியை எங்களிடம் கொடுங்கள் என்கிறோம்.
1987-ம் ஆண்டு செப்டம்பர் 17-ல் இருந்து ஒரு வாரம் தொடர் போராட்டங்கள் நடத்தினோம். அதுபோன்று ஒரு போராட்டத்தைத் தனி இட ஒதுக்கீடு கேட்டு நடத்தினால், தமிழகம் தாங்குமா? அதனால்தான் சொல்கிறேன். எங்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டைக் கொடுத்து விடுங்கள். இல்லையென்றால், போராட்டங்கள் நடத்தித் தமிழகச் சிறைகளை நிரப்ப லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்'' என்று உணர்ச்சிப் பிழம்பாகப் பேசி முடித்தார்.
அய்யாவுக்கும் சின்னய்யாவுக்கும் அவ்வளவு  உற்சாகம்! 
பா.ஜெயவேல்

No comments:

Post a Comment