தேன்... தேன் தித்திக்கும் தேன்!
கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, புரதம், மெக்னீஷியம், வைட்டமின்கள்... எனப் பல்வேறு சத்துக்களைக்கொண்டது தேன். பாப்பா முதல் தாத்தா வரை எல்லோரும் தேனை உட்கொள்ளலாம். ஆனால், குழந்தைப் பருவத்தில் மிகக் குறைந்த அளவே - அதுவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஐந்து வயதுக்குப் பிறகு ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்கள் தினமும் 10 முதல் 15 மி.லி. தேன் சாப்பிடலாம். தேன் உண்டால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். சருமம் பொலிவு பெறும். குரல் வளம் பெறும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
உள்ளுக்குள் சாப்பிடுவது, மேற்பூச்சாகப் பூசிக்கொள்வது என இரண்டு வகைகளிலும் தேனைப் பயன்படுத்தலாம். கை கால்களில் அடிபட்டு வீக்கமாக இருந்தால், பச்சை முருங்கைப் பட்டை அல்லது காய்ந்த முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்துத் தேனுடன் கலந்து சுடவைத்து, அடிபட்ட இடத்தில் ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து பற்றுப் போட்டு வந்தால் குணம் கிடைக்கும். தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால், அந்த இடத்தில் தேனைத் தடவும்போது கடுகடுப்புக் குறையும். பிறகு மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
அரிசித் திப்பிலியைப் பொடிசெய்து, தேனில் கலந்து, காலையிலும் இரவிலும் ஒரு டீஸ்பூன் அளவு மூன்று நாட்களுக்குச் சாப்பிட, வறட்டு இருமல் குணமாகும்.
நாவல் பழக் கொட்டையை நன்றாகக் காயவைத்துப் பொடி செய்து தேனில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் அளவுக்குத் தினமும் மதியச் சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்பாகச் சாப்பிட்டு வர வேண்டும். இப்படி 48 நாட்களுக்குச் சாப்பிட்டுவர, இன்சுலின் சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோய் கட்டுப்படும்.
சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் சரியான ருசி உணர்வு தெரியாது. ஜாதிக்காய், மாசிக்காய் ஆகியவற்றைத் தூள் செய்து, தேனில் ஒருநாள் முழுவதும் ஊறவைத்துத் தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட, நாவில் உள்ள சுவை நரம்புகள் தூண்டப்பட்டு நன்றாகச் சுவையை உணர முடியும்.
சிறிதளவு கருந்துளசியையும் மிளகையும் இடித்து இரண்டு மணி நேரம் தேனில் ஊறவைக்கவும். இதில், ஒரு டீஸ்பூன் அளவுக்குத் தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர, சளியினால் வரும் ஜுரம் சரியாகும். தோல் நீக்கிய பாதாமைத் தேனில் ஊறவைத்துத் தினமும் சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு, அசதி நீங்கிச் சுறுசுறுப்பு உண்டாகும்.
ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் மூன்று வேளை குடித்து வர, ஆஸ்துமா, சளி, மூச்சிரைப்பு குணப்படும். இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் வெதுவெதுப்பான நீரில் சிறிது தேன் கலந்து குடித்தால், நிம்மதியான உறக்கம் கிடைக்கும். பொதுவாக, சூட்டை அதிகப்படுத்தும் என்பதால், உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் எப்போதாவது மட்டுமே தேன் சாப்பிட வேண்டும். தேன், முடியின் மீது பட்டால் நரைத்துவிடும் என்பார்கள். அது தவறான கருத்து. முடியின் மீது தேன் படும்போது, முடியில் உள்ள மெலனின் நிறமியின் அளவு சற்றுக் குறைந்து லேசாக செம்பட்டை நிறத்தில் தோன்றும். ஆனால், வெளியில் செல்லும்போது சூரிய ஒளியில் உள்ள 'வைட்டமின் டி’ முடியின் மீது படுவதால், இரண்டு நாட்களிலேயே கேசம் இயல்பான கருப்பு நிறத்துக்கு மாறிவிடும்.
அதேபோல வெந்நீரில் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடல் இளைக்கும் என்பார்கள். இப்படிச் சாப்பிடுவதால், உடலில் உள்ள தேவையற்றக் கழிவுகள் வெளியேற்றப்படும். ஓரளவு உடல் எடை குறையும் வாய்ப்பும் உண்டு. வெந்நீரில் தேனுடன் சிறிதளவு இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்.
ஆனால், ஒன்று முக்கியம்... நீங்கள் பயன்படுத்தும் தேன் சுத்தமானதாக இருந்தால் மட்டுமே, மேற்கண்ட பலன்கள் கிடைக்கும்!''
No comments:
Post a Comment