Tuesday, 8 May 2012


நெகிழ்ந்த இயக்குனர், பதறிய லிங்குசாமி!


ஒரு படத்தினை பார்த்து முடித்து விட்டு வெளியே வந்தால் அந்த படத்தின் பாதிப்பு ஒரு மணி நேரம் அல்லது ரெண்டு மணி நேரம் இருக்கும். ஆனால் 'வழக்கு எண் 18/9' படத்தினை பார்த்தவர்கள் பல இன்னும் படத்தின் பாதிப்பில் இருந்து மீளவில்லை என்பது தான்.

பாத்திர தேர்வு, யதார்த்தமாக நகரும் கதை, ஸ்டில் கேமிரா மூலம் சிறப்பாக படமாக்கியது என அனைத்திலும் வித்தியாசப்படுத்தி அனைவரது மனதையும் உலுக்கி எடுத்து விட்டார் பாலாஜி சக்திவேல்.

'வழக்கு எண் 18/9' படத்தின் வரவேற்பிற்கு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சந்திப்பு நேற்று ( மே 07 )சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினர் அனைவரும் அதில் கலந்து கொண்டனர். கலகலப்பாக தொடங்கிய சந்திப்பு அவ்வளவு உணர்ச்சிவசமாக முடியும் என்று யாரும் எதிர்ப்பார்த்து இருக்கமாட்டார்கள்.

படக்குழுவினர் ஒவ்வொருவருமே "எங்களுக்கு புது வாழ்க்கை அமைத்து கொடுத்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு நன்றி" என்று சொல்ல, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டார் பாலாஜி சக்திவேல்.

பாலாஜி சக்திவேல் பேசும்போது " பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லாம் நான் அவ்வளவாக பேசுவது இல்லை. படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம் . உங்களுக்கு எப்படி..  " என்று பேசியவர், " லிங்குசாமி.. எழுந்து அங்கே போய் நில்" என்றார். லிங்குசாமி ஒன்றும் புரியாமல் பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் வந்து நிற்க அனைவரது முன்னிலையில், பாலாஜி சக்திவேல் கீழே விழுந்து வணங்கினார். லிங்குசாமி இதனை சற்றும் எதிர்பாராமல் திகைக்க,  இருவரும் கட்டிப்பிடித்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். " இதற்கு மேல் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று கூறிவிட்டு அமர்ந்து கொண்டார் பாலாஜி சக்திவேல்.
இறுதியாக பேசிய லிங்குசாமி " படம் இந்த அளவிற்கு வரவேற்பு பெற்று இருக்கிறது என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம். இயக்குனர்களுக்கு என்று தனியாக ஒரு ஷோ போட்டோம். எல்லா இயக்குனர்களும் எழுந்து நின்று கை தட்டினார்கள்.

அவர்களை அடுத்து பத்திரிகையாளர்களாகிய நீங்கள் என்ன கூற போகிறீர்களோ என்ற பயந்து கொண்டே, உங்களுக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே படத்தினை போட்டு காண்பித்தோம். படம் முடிந்த உடன் நீங்கள் எழுந்து நின்று கை தட்டினீர்கள்.. அப்போதே எனக்கு தெரிந்து விட்டது படம் கண்டிப்பாக வெற்றி என்று.

'வழக்கு எண் 18/9' படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தை மேலும் மேலும் இது போன்ற பல படங்களை தயாரிக்க தூண்டியுள்ளது. கண்டிப்பாக தயாரிப்பேன்.

'வழக்கு எண் 18/9' திரைப்படம் கண்டிப்பாக பல்வேறு விருதுகளை வெல்லும். அதற்கு காரணம், நீங்கள் படம் பற்றி எழுதியது தான். எத்தனை விருது வென்றாலும் அப்போது எல்லாம் நாம் கண்டிப்பாக சந்திப்போம் " என்று கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பு முடிவடைந்ததும் பாலாஜி சக்திவேல் சூழ்ந்து கொண்ட வீடியோகிராபர்கள் தங்களுக்கு பேட்டி தருமாறு கேட்டார்கள். அப்போது அவர் " இல்லை! இந்தப் படம் இவ்வளவு வரவேற்பை பெறும் என்று நினைக்கவில்லை. நிறைய பேர் போனில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போதும் அனைவரும் என்னை பாராட்டும் போது உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். ஆகவே, இப்போது தயவு செய்து வேண்டாம். அப்புறமாக தருகிறேன் " என்று கூறினார்.

No comments:

Post a Comment