Sunday 1 April 2012

3-சினிமா விமர்சனம்


                                                3 - விமர்சனம்

இந்திய சினிமாவின் இரு பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள் இணைந்துள்ள படம் 3. ரஜினியின் மகளான ஐஷ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷ், கமல்ஹாஸன் மகள் ஸ்ருதிஹாஸன் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.
                                               



ஐஷ்வர்யாவின் முதல் படம் என்பதால் சாதாரணமாக படப்பிடிப்பை ஆரம்பித்தனர். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் செய்த ஒரு காரியத்தால் இந்த படத்தை இந்தியா முழுவதும் திரும்பிப் பார்த்தது. கொலவெறிப் பாடலை யூ டியூபில் போட்டதன் மூலம் படம் தானாக விளம்பரமானது. இந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

ஸ்ருதியும் தனுஷும் பள்ளியில் படிக்கும் போதே காதலிக்கிறார்கள். ஸ்ருதியை துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒரு சின்ஸியரான மாணவராக இருக்கிறார் தனுஷ்.

பள்ளியில் படிக்கும் போதே, இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டு மொட்டைமாடியில் சந்திப்பது, வீட்டில் யாரும் இல்லாதபோது இருவரும் குஜாலாக இருப்பது போன்ற நல்ல காரியங்கள் தொடர்கிறது.

பள்ளிப்படிப்பு முடிந்தபிறகும் காதல் தொடர்கிறது. பல எதிர்ப்புகளைத் தாண்டி திருமணாம் செய்துகொள்கிறார்கள். திருமணாத்திற்கு பின் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கிறது. மகிழ்ச்சியான சூழலில் வாழ்கின்றனர்.

ஆனால், தன் மனைவி ஸ்ருதிஹாசனுக்கும் தெரியாமல் தனுஷுக்கு ஒரு வியாதி இருப்பதாக படத்தின் இரண்டாம் பாதியில் சொல்லப்படுகிறது. அதாவது அதிகமாக கோபப்படுவதும், அதிகமாக சந்தோஷப்படுவதும். சிம்பிளா சொன்னா, ஒருவர் மேல் கோபம் வரும்போது, அவங்க மண்டைய ரெண்டா பொளந்து ரத்தகாயமாக்கிட்டு, அப்புறம், அய்யோ... நானா இப்படி பண்ண, எனக்கு ஏன் தான் இப்படியெல்லாம் தோணுதோ என்று தலைமேல அடிச்சுக்கிட்டு அழுவது!



காதல் கொண்டேன், மயக்கம் என்ன இரண்டு தனுஷையும் ஒன்னா பார்த்தா எப்படி இருக்கும். அதே சைக்கோத் தனமான கேரக்டர். இந்த வியாதி முத்திப்போக, கடைசியில் ஸ்ருதிஹாசனை தனுஷ் கொன்றுவிடுகிறாரா? அல்லது தற்கொலை செய்துகொள்கிறாரா? என்பது படத்தின் முடிவு. ஆனால் அது ரசிகர்களுக்கு கொடுமையான முடிவுதான் எனபதில் எந்த சந்தேகமும் இல்லை.

கதை இதுதான் என்றாலும் அதை திரைக்கதை மூலம் ரொம்ப நல்லாவே குழப்பி இருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ்.


முதல் பாதியில் சிவகார்த்திகேயன் சிரிக்க வைக்கிறார். இப்படி ஒரு எதார்த்தமான முதலிரவுக் காட்சியை தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காது போல. தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் அப்படி ஒரு நெருக்கம். தனுஷ் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

குழப்பம் கதையில் மட்டுமே! நடிப்பை பொருத்தவரை இந்த கேரக்டரை தனுஷைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது. உண்மையான சைக்கோ மாதிரியே நடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன், பார்ப்பதற்கு ’கும்’முன்னு இருந்தாலும் பல நேரங்களில் ’கம்’முன்னே இருக்காங்க. ஆனாவொன்னா அழுவது எரிச்சல்!

பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானவை தான். பாடல்களின் விஷுவல் காட்சிகளும் ஏமாற்றமில்லாமல் அமைந்திருக்கின்றன. கொலவெறி பாடல் அதிரடியான அலட்டல்கள் இல்லாமல் எதார்த்தமாக இருந்தது ஆறுதல். நீ பார்த்த விழிகள்... இதமான மெலடி.

பொல்லாதவன், ஆடுகளம், சிறுத்தை என பல பரிமாணங்களில் சிறந்த ஒளிப்பதிவாளராக நிரூபித்தவர் வேல்ராஜ். இந்த படத்தில் சாதாரண காட்சிகளையும் கூட பிரம்மிக்கும் வகையில் பதிவு செய்திருக்கிறார்.  

தனுஷுக்கு வியாதி என்பதை ஏற்க முடிந்தாலும், அது எதனால் வந்தது, அதற்கான காரணங்கள் என்ன என்பதை கதையில் சொல்லி இருந்தால், கொஞ்சம் தெளிவா குழம்பி இருக்கலாம். என்ன காரணம்னு கடைசி வரைக்கும் சொல்லாமல், ஹீரோவோடு சேர்த்து பார்வையாளர்களையும் சாகடிப்பது எந்த விதத்தில் நியாயம்? (எப்படி இருந்தாலும், ஐஸ்வர்யா தனுஷ் செல்வராகவனின் உதவியாளர் என்பதை நிரூபித்துவிட்டார் )

படத்தை எடுத்தவருக்கு பைத்தியமா? படத்தில் நடிப்பவருக்கு பைத்தியமா? இல்ல படத்தை பார்ப்பவர்களுக்கு பைத்தியமான்னு?  ஒரு பெரிய கேள்வியே வருகிறது.அடிக்கிற வெயில்ல ஏற்கெனவே தலைவலி, இதுல இதுவேறவா?

3 - மண்ட காயுது! ஒரே தலைவலி, ஏன் இந்த கொலவெறி?

No comments:

Post a Comment