Friday 27 April 2012

பாண்டிராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்!

பாண்டிராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்!

'பிரிக்க முடியாதது எதுவோ?’ என்ற கேள்விக்கு, திரைத் துறையும் நீதிமன்ற​மும் என்றுதான் இனி பதில் சொல்ல​வேண்டும். அந்த அளவுக்குத் இப்போது பிரச்னைகள்...

சமீபத்தில் சிக்கி இருப்பது, 'மெரினா’ திரைப்படம்.
'நான்தான் 'மெரினா’ திரைப்படத்துக்கு உண்மையான தயாரிப்​பாளர். எனக்கு உரிய லாபத்தையும் அங்கீகாரத்தையும் கொடுக்க இயக்குனர் பாண்டிராஜ் மறுக்​கிறார்’ என்று, வளசரவாக்கத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் வழக்குத் தொடுத்து இருக்கிறார்.
அவரிடம் பேசினோம். ''பெரம்​பலூரில் நான் கல்லூரியில் படித்த​போது, பாண்டிராஜ் எனக்கு அறிமுகம். என்னைத் தொடர்பு​கொண்ட பாண்டிராஜ், 'மெரினா கடற்கரையில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களை வைத்து ஒரு கதை உருவாக்கி இருக்கிறேன். ஆனால், இதைத் தயாரிக்க யாரும் முன்வரவில்லை’ என்றார். 'நானே தயாரிக்கிறேன்’ என்றேன். அதன் பிறகு ஒரு நாள் என்னைத் தொடர்பு கொண்டு, 'இரண்டு லட்ச ரூபாய் அவசரமாகத் தேவைப்படுகிறது’ என்றார். உறவினரிடம் கொடுத்து அனுப்பினேன். அதை வைத்துத்தான் அவர், 'பசங்க புரொடக்​ஷன்ஸ்’ நிறுவனத்​தை தொடங்கினார். 'மெரினா’ படத்துக்குப் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தபோது, 'பசங்க புரொடக்ஷன்ஸ் பாண்டிராஜ் தயாரிப்பில்’ என்று விளம்பரம் கொடுத்தார். உடனே, 'மெரினா’ படத்தை வெளியிடத் தடை விதிக்கக்கோரி நீதிமன்​றம் சென்றேன். என்னை இணைத் தயாரிப்பாளராக சேர்த்துக் கொள்வதாகவும் பத்திரிகை விளம்பரம் மற்றும் டைட்டில் கார்டில் தயாரிப்​பாளர் வரிசையில் என் பெயரையும் இடம்பெறச் செய்வதாகவும், நான் செலவு செய்த தொகையையும் லாபத்தில் எனக்கான ஒரு பங்கையும் ஆடிட்டர் மூலம் கணக்குப் பார்த்து 60 நாட்களுக்குள் தருவதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
அதன் பிறகு என்னிடம் தொலைபேசியில் பேசிய பாண்டிராஜ், ஆடிட்டிங் செய்ய ஒரிஜினல் பில்கள் வேண்டும் என்றார். நகல் எடுத்துக்கொண்டு ஒரிஜினலை அவரிடம் கொடுத்தேன். இதுவரை எந்த ஆடிட்டும் நடக்கவில்லை. எனக்கும் ஒரு பைசாகூட வரவில்லை. ஒரிஜினல் பில்களை கைப்பற்றிக்கொண்ட தைரியத்தில், 'உன்னால் ஒண்ணும் செய்ய முடியாது. படத்தில் லாபமே இல்லை, நீ ஒரு பைசாகூட படத்துக்குச் செலவு செய்யவில்லை’ என்கிறார்.
'மெரினா' படத்தைத் தயாரிக்க ஆன மொத்த செலவே 90 லட்சம்தான். ஆனால், தமிழகத்தில் படம் பெற்றுத் தந்த லாபம் மட்டும் 4.5 கோடி. அதுபோக, தனியார் தொலைக்​காட்சிக்குப் படத்தை 1 கோடியே 40 லட்சத்துக்கு விற்றுள்ளார். ஆனால், எனக்கு நியாயமாகச் சேரவேண்டிய லாபத்தையும் தரவில்லை; நான் முதலீடு செய்த தொகையையும் தரவில்லை. இப்போது எனக்குத் தெரியாமல் ரீ-மேக் மற்றும் டப்பிங்குக்கு, தெலுங்கு, மலையாளம், கன்னடத் தயாரிப்பாளர்களுக்கு இந்தப் படத்தை விற்கவும் முயற்சி செய்கிறார். நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடுத்து உள்ளேன்'' என்றார்.
இதற்கு என்ன சொல்கிறார் பாண்டிராஜ்?
''ரியல் எஸ்டேட் புரோக்கரான பாலமுருகன், 'மெரினா’ படத்தைத் தயாரிப்பதாகச் சொன்னது உண்மைதான். ஆனால், அவரால் சொன்னபடி முழுப் பணத்தையும் தயார் செய்ய முடியவில்லை. அதனால் ஆரம்பத்திலேயே அவரை வெளியேற்றி விட்டேன். பிறகு, நான் கடன் வாங்காத ஆட்களே இல்லை. எனது அண்ணன்கள் இரண்டு பேர் 34 லட்ச ரூபாய் பணம் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். வட்டிக்கும் பணம் வாங்கினேன். நிலைமை இப்படி இருக்கும்போது,  25 லட்ச ரூபாய் மட்டும் செலவழித்த​வரை எப்படிப் படத் தயாரிப்பாளர் என்று சொல்லி அவருக்கு பங்கு தர முடியும்? அவர் செலவழித்த 25 லட்ச ரூபாயிலும் முறையான கணக்கு 11 லட்சத்துக்கு மட்டுமே இருக்கிறது. நீதிமன்றமே, அவர் செலவழித்த தொகைக்கான லாபத்தைக் கொடுக்க வேண்டும் என்றுதான் உத்தரவிட்டு உள்ளது. ஏற்கெனவே 15 லட்ச ரூபாயை கொடுத்து விட்டேன். இனி தரவேண்டியது வெறும் இரண்டரை லட்சம்தான். நான் 10 லட்சம் தர தயாராக இருக்கிறேன். இதை சட்டப்படி சந்திப்பேன். பாலமுருகன் மீது மானநஷ்ட வழக்கும் தொடருவேன்'' என்றார்.
இனி நீதிமன்றம் முடிவு சொல்லட்டும்!

No comments:

Post a Comment