Wednesday 11 April 2012

அட்சய திருதியை நம்பிக்கையா... மோசடியா ?


இந்த ஆண்டுக்கான 'அட்சய திருதியை' ஏப்ரல் 24 அன்று வருகிறது. 'அன்று தங்கம் வாங்கினால், அந்த வருடம் முழுவதும் செல்வம் கொழிக்கும்' என்கிற நம்பிக்கையில், தங்கம் வாங்கிக் குவிப்பது சமீபகாலமாக பெருகிக் கொண்டிருக்கிறது. அதேசமயம், 'இந்த நம்பிக்கையை வைத்து மோசடி நடக்கிறது. வியாபாரிகள் தந்திர மாக இந்த நாளை பிரம்மாண்டபடுத்தி, மக்களை வலையில் சிக்க வைக்கிறார்கள். இல்லாதவர்கள் கூட கடன் வாங்கி தங்கம் வாங்கும் அளவுக்கு நெருக்கடி தரப்படுகிறது' என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்து நிற்கின்றன!
இந்நிலையில்... இந்த தங்க நம்பிக்கை சரியா, இல்லையா என்று தங்கள் கருத்தை இங்கே பதிவு செய்கிறார்கள் இருவர்!
''அட்சய என்ற சொல்லுக்கு, எப்போதும் அழிவில்லாமல் வளர்ந்துகொண்டே இருப்பது என்று அர்த்தம். அதனால்தான் அன்று தங்கம் வாங்கினால் வருடம் முழுவதும் தங்கம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என்கிற நம்பிக்கை நம்மிடையே வளர்ந்துள்ளது. தங்கம் மட்டுமல்ல... அன்று தானம் செய்தால், வருடம் முழுவதும் புண்ணியம் பெருகும், கல்வி முயற்சி எடுத்தால் வருடம் முழுவதும் அறிவு பெருகும்'' என்று சொல்லும் சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்த 'ஜோதிட கலைமணி’ சீதாலட்சுமி,
''பிரம்மன் இந்த உலகத்தைப் படைத்தது அட்சய திருதியை அன்றுதான். அதனால்தான் உலகமும் உயிரினங்களும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பராசக்தியின் அம்சமான சாகம்பரி தேவி, உலகத்தில் மருத்துவ விருட்சங்களை உருவாக்கியதும் அட்சய திருதியை அன்றுதான். மகாபாரதத்தில் குசேலர் கிருஷ்ணருக்கு ஆயிரம் பொத்தல்கள் கொண்ட துணியில் அவல் எடுத்துக் கொண்டு சென்றபோது... அந்த பொத்தல்கள் வழியே அவல் எல்லாம் சிந்தி, சிதறிவிட்டது. கிருஷ்ணரிடம் கொடுக்கும்போது மிஞ்சிய அவலை வாயில் போடும்போது, கிருஷ்ணர் 'அட்சய’ என்று சொல்லிப் போட்டதால்... அது பல்கிப் பெருகியது என்கிறது மகாபாரதம். இப்படி பல சிறப்புக்கள் கொண்ட நாள் அது.
அன்றைய நாளில், கனகதாரா ஸ்தோத்திரத்தை 1008 முறை சொன்னால், ஆதிசங்கரர் பிச்சை எடுக்கும்போது, நெல்லிக் கனி கொடுத்த ஏழை தம்பதிக்கு எப்படி தங்க நெல்லிக்கனி மழையாகப் பொழிந்ததோ அப்படி செல்வம் கொழிக்கும்!'' என்று நம்பிக்கைஊட்டினார்.
அதேசமயம், ''அட்சய திருதியை என்பதே முழுக்க முழுக்க வியாபாரத் தந்திரம்!'' என்று சாடுகிறார் பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா.
''கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் இந்த வியாபாரத் தந்திரம், மந்திரம் போல் மக்களைப் ஆட்டிப் படைக்கிறது. நம் கலாசாரத்தில் ஓர் ஆண்... ஆணாகப் பிறந்திருப்பதே போதுமானதாக இருக்கிறது. ஆனால், பெண்ணுக்கு..? அவள் உடை, போட்டிருக்கும் நகை, கணவனின் சம்பாத்தியம் இவை அனைத்தும் தான் அவளுக்கு சமூக மதிப்பைக் கொடுக்கின்றன. இதனால்தான் பெண் எப்போதும் இதுபோன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாள். 'பெண்ணுக்கு கல்வி கொடுத்தால் இந்த நிலை ஒழியும்' என்று அவளை பாதிக்கும் பல விஷயங்கள் பற்றியும் இங்கே சொல்லி வைத்துள்ளனர். ஆனால், படித்த பெண்களும் அன்றைய தினத்தன்று போட்டிப் போட்டுக் கொண்டு க்யூவில் நின்று தங்கம் வாங்குகிறார்கள்.
அட்சய திருதியை போன்ற செயற்கையான பழக்கங்கள்... பெண்களின், சமூகத்தின் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. பண்டைய வரலாற்றில் இந்த குறிப்பிட்ட நாளில் தங்கம் வாங்கியதற்கு சான்றுகள் இருக்கிறதா? இருக்காது. இதில் யோசிக்க வேண்டிய விஷயம், 'தங்கம் வாங்குங்கள், புடவை வாங்குங்கள், தீபம் ஏற்றுங்கள்’ என்று எல்லா செயற்கை சடங்குகளும் பெண்களை குறிவைப்பவையாகவே இருக்கின்றன. இதெல்லாம் மிக மலினமான வியாபார யுக்தி என்பதை பெண்கள், குறிப்பாக படித்த பெண்கள் உணர வேண்டும். பொருட்களைச் சார்ந்து தன் மதிப்பைத் தீர்மானிக்கும் அணுகுமுறையை பெண்கள் விட்டு ஒழிப்பதுதான் நிஜமான பெண் விடுதலை.
தேவைப்படும்போது வாங்குவதில் தவறில்லை. தேவையே இல்லாமல், மற்றவர்கள் ஆசை காட்டுவதற்காக வாங்குவது, சிக்கல்களைத்தானே ஏற்படுத்தும்.  வியாபாரத் தந்திரங்களுக்கு நாம் பலியாகத்தான் வேண்டுமா என்பதை யோசியுங்கள் பெண்களே!'' என்று சிந்திக்கச் சொல்கிறார் ஓவியா!
முடிவு உங்கள் கையில்!

No comments:

Post a Comment