Wednesday 11 April 2012

திக்குத் தெரியாத குழப்பத்தில் ராமஜெயம் விவகாரம் FOLLOW - UP


ராமஜெயம் கொலை வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் இது​வரை உருப்படியான தடயம் எதுவும் கிடைக்காமல், மூளையைக் கசக்கிக்​கொண்டு இருக்கிறது தமிழக போலீஸ்! 
சென்னைக்குப் போகும் வீடியோ பதிவுகள்
ராமஜெயத்தைக் கடத்துவதற்கு கொலை​யாளிகள் பயன்படுத்திய வாகனம் மாருதி வெர்ஸா அல்லது ஆம்னி​யாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸுக்கு ஆரம்பத்தில் இருந்தது. காரணம், ராமஜெயம் கொல்லப்பட்ட தினத்தன்று காலையில் வெள்ளை நிற வெர்ஸா கார் தறிகெட்டு ஓடியதாகப் பலரும் சொல்லி இருக்கிறார்கள். அதனால், இந்த வாகனங்களை வைத்து ஒத்திகை நடத்திப்பார்த்திருக்கிறார்கள் போலீஸார். 'ராமஜெயம் போலவே உடல்வாகு கொண்டவர்களை, இதுபோன்ற சின்ன வாகனத்தில் வைத்து மல்லுக்கட்டிக் கொல்வது அத்தனை சாத்தியம் இல்லாதது’ என்ற முடிவுக்கு போலீஸார் இப்போது வந்துள்ளனர். ஸ்கார்பியோ, பொலீரோ போன்ற பெரிய வாகனங்களில்தான் கொலையை நடத்தி இருக்க முடியும் என்று கருதுகிறது போலீஸ்.
திருச்சியில் இருந்து திருவளர்ச்சோலை வழியாக கல்லணைக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு குளிர்ப்பதனக் கிடங்கில் கண்காணிப்பு கேமரா இருக்கிறது. கொலை நடந்த அன்று அந்தக் கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸ் சேகரித்து சோதித்தது. போலீஸாரின் துர திர்ஷ்டம்... அந்த வாகனங்களின் மேல்பகுதி மட்டுமே வீடியோவில் பதிவாகி உள்ளதாம். வாகனத்தின் மற்ற பகுதிகளை ஒரு சுவர் மறைத்துவிட்டதாம். மேல்பரிசோதனைக்காக இந்த வீடியோபதிவு மற்றும் தில்லை நகர் முதல் மாம்பழச் சாலை வரை உள்ள ஐந்து தனியார் நிறுவன கேமராப் பதிவுகளை சென்னைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
கைக்கடிகாரம் காட்டும் நேரம்!
கொலை செய்யப்படும்போது ராமஜெயம் கையில் விலை உயர்ந்த ரேடோ வாட்ச் இருந்தது. அந்த வாட்ச் அதிகாலை 2.50 மணிக்கு நின்று விட்டதாக திருச்சி அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவித்ததாக செய்'தீ’ வெளியானது. இதுபற்றி போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, ''இது அப்பட்டமான பொய்ச்செய்தி. அந்த வாட்ச் இன்னமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. போஸ்ட்மார்ட்டத்துக்கு ராமஜெயம் உடல் கொண்டு செல்லப்படுவதற்கு முன், அவரது உடலில் இருந்த ஆடை​கள், வாட்ச் ஆகியவற்றை அகற்றி, கோர்ட்டில் ஒப்படைப்பதற்கான பொருட்களில் சேர்த்து விட்டோம். ஏன்தான் இப்படி  வதந்திகளைப் பரப்புகிறார்களோ...'' என்று வேதனைப்பட்டார்.
மாந்தோப்பு மர்மம்!
ராமஜெயத்தின் உடல் கண்டு எடுக்கப்பட்ட காவிரிக் கரையை ஒட்டிய பகுதியில் அவருக்குச்சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றில் கணக்கிலடங்கா மாமரங்கள், தென்னை மரங்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே இறகுப் பந்து மைதானமும் உள்ளது. அந்த இடங்களை வாங்கியதில் சில பிரச்னைகள் இருந்ததாகவும் தகவல். இதனால் இந்தத் தோப்புகளுக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் நேரடியாக சென்று விசாரணை நடத்தி இருக்கிறார். அந்தத் தோப்பில் இருந்த கட்டுக்கம்பி, ஆடு கட்டப் பயன்படுத்தப்படும் கயிறு ஆகியவற்றைக் கைப்பற்றி, விசாரணைக்காக எடுத்துச் சென்று உள்ளார்களாம்.  
போலீஸாரின் சந்தேகப் பார்வை!
தில்லை நகர் 4-வது கிராஸில் உள்ள ஒரு வீட்டுக்கு ராமஜெயம் அவ்வப்போது நடந்தே செல்வார். அந்த வீட்டில், கணவரைப் பிரிந்த ஒருபெண் வசிக்கிறார் என்றும் பேச்சு கிளம்பியது. போலீஸ் அந்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை செய்தபோதுதான் தெரிந்தது, அது, ராமஜெயத்தின் உதவியாளர் வேலு என்பவரின் வீடு. சமீப காலமாக, நேரு குடும்பத்துக்குச் சொந்தமான 'ஜனனி குரூப் கம்பெனி’களின் வரவு செலவுகளை இவர்தான் கவனிக்கிறார். இவரிடம் பலமுறை விசாரணை நடந்து விட்டது.
ராமஜெயத்தின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான மூன்றெழுத்து உறவினர் ஒருவர் இப்போது போலீஸின் நிழல் கண்காணிப்பில் இருக்கிறார். அடிக்கடி செல்நம்பரை மாற்றுவது, ரவுடிக் கும்பலுடன் தொடர்பு என அவரது தொடர்புகள் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது என்று சொல்லும் தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர், 'அவரை சுதந்திரமாக உலவவிட்டு பல்வேறு தகவல்களைத் திரட்டிய பிறகே விசாரணைக்கு அள்ளிக் கொண்டு வருவோம்’ என்றார்.
கொள்ளிடக் கரையில் போட்ட சபதம்!
டெல்டாவைக் கலக்கிய ரவுடியான முட்டை ரவி, சில வருடங்களுக்கு முன் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். அவரை என்கவுன்டர் செய்ய காவல்துறையைத் தூண்டியதே ராமஜெயம்தான் என்று சந்தேகப்படும் டெல்டா மாவட்டப் புள்ளி ஒருவரால்தான் ஐந்து மாதங்களுக்கு முன்பாக இந்தக் கொலைத் திட்டம் தீட்டப்பட்டது என்றும் ஒரு தகவல். 'தன் அண்ணனுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்தது முட்டை ரவிதான். அவர் என்கவுன்டர் செய்யப்பட்ட பின்னரே, தனது அண்ணன் ரவுடிக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்’ என்பது அந்தப் பிரமுகரின் கோபமாம்.
கடந்த அக்டோபர் மாதம், முட்டை ரவியின் நினைவு நாளில் அவரது குடும்பத்தினர் கொள்ளிடக் கரையில் உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றனர். அதன்பிறகு, நான்கு சுமோ கார்களில் வந்தவர்கள், சமாதியில் மலர்தூவி சபதம் எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட முறை பழைய டெல்டா மாவட்டத்து ஸ்டைல் என்று சொல்லி, தங்கள் வாதத்துக்கு வலுவூட்டுகிறார்கள்.
கூலிப்படை ஏஜென்ட்!
திருச்சி பாரதிநகரில் இப்போது வசித்து வரும் குணசேகரன் என்கிற ரவுடியை, தனிப்படை போலீஸ் டீம் விசாரித்து வருகிறது. அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளும் குணசேகரன், முன்பு முட்டை ரவி கோஷ்டியில் இருந்தவர். தமிழகத்தில் உள்ள பல்வேறு கூலிப் படையினருடன் தொடர் புடைய இவரிடம், 'ராமஜெயத்தைக் கொலை செய்தது எந்த டீம்?’ என்ற தகவலைப் பெற முயற்சித்து வருகிறது காவல்துறை. குணசேகரனுக்கு சாமி, ரவி என்ற புனைப் பெயர்களும் உண்டு. இவர், பல்வேறு கூலிப்படைகளுக்கு ஏஜென்ட்டாகச் செயல்படுபவர். இவர், ஓரிரு ஆண்டுகளாக ராம ஜெயத்துக்கு நிலங்களை வாங்கிக் கொடுக்கும் இடைத்தரகராக இருந்தவர் என்பதால், போலீஸுக்கு இவர் மீது அதிக சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
தம்பிகளுக்குத் தனியார் பாதுகாவலர்கள்!
நேருவுக்கு ராமஜெயம் தவிர, ரவிச்சந்திரன், மணிவண்ணன் என்று மேலும் இரண்டு தம்பிகள் உள்ளனர். இவர்களில் ரவி சென்னையிலும், மணிவண்ணன் திருப்பூரிலும் பிசினஸ் செய்து வருகின்றனர். நேருவுக்கு தி.மு.க. தொண்டர்கள் பாதுகாப்பு அரணாக இருப்பது போல், இந்த இருவருக்கும் தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாவலாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வெளியே செல்லும்போது நான்கு பாதுகாவலர்கள் பாதுகாப்பு அரண் அமைத்து, அழைத்துச் செல்கின்றனர்.
'புஸ்’ ஆன சாந்தி விவகாரம்!
தூத்துக்குடி மாநகராட்சியின் கவுன்சிலர் சாந்தியைப் பிடித்த போலீஸார், கை நிறையப் புதையல் கிடைத்து விட்டது போல் சந்தோஷப்பட்டனர். கடைசியில், உள்ளுக்குள் ஒன்றுமே இல்லாத வெங்காயம் போல் ஆகிவிட்டது விவகாரம்.
நீண்ட காலமாக அ.தி.மு.க-வில் வட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தவர் மகாராஜன். இவரது மகன் மணிவண்ணனின் மனைவிதான் சாந்தி.  
போலீஸ் விசாரணை குறித்து கவுன்சிலர் சாந்தியிடமே கேட்டோம். ''என்னோட உறவுக்காரப் பெண் திருச்சியில் இருக்காங்க. டீச்சர் டிரெய்னிங் படிச்சிட்டு இருக்கிற அவங்ககிட்ட, என்னோட அரசியல் பணிகள் குறித்து அடிக்கடி பேசிட்டு இருப்பேன். ஒரு சமயம் அவங்க எங்கிட்ட, ஆட்டோ டிரைவரோட செல்போனில் இருந்து பேசிட்டு இருந்திருக்காங்க. அது எனக்குத் தெரியாது. இந்தக் கொலை வழக்கில் எந்தத் தகவலும் கிடைக்காத போலீஸ், அந்த டைம்ல போன் பேசினவங்க என்கிற முறையில என்னை அழைச்சு விசாரிச்சாங்க. என் மீது எந்தத் தவறும் இல்லைன்னு தெரிஞ்சதும், போலீஸார் மன்னிப்புக் கேட்டாங்க'' என்றார்.
தலித் தலைவரின் தம்பிக்கு தொடர்பு?
'சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடியை ராமஜெயம் பிரித்தார். அதன் மூலம் ஏற்பட்ட விரோதம்தான் அவர் கொலை செய்யப்படுவதற்குக் காரணம்’ என்றும் பேசப்பட்டு வருகிறது. சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு தலித் தலைவரின் தம்பி  திருச்சியில் வசித்து வருகிறாராம். அவரிடம் தஞ்சமடையும் காதல் ஜோடியைப் பாதுகாப்பது அவருடைய வழக்கமாம். அப்படிப் பாதுகாத்து வைத்திருந்த ஒரு ஜோடியைப் பிரித்து,  அந்தப் பெண்ணைத் தன் வசப்படுத்தினாராம் ராமஜெயம். அதனால், அந்த தலித் தலைவரின் தம்பியின் ஆட்களுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்குமா என்றும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
போலீஸ் தேடுதல் எந்த முடிவும் கொடுக்காத காரணத்தால், ஆவியுடன் பேசுபவர்களை சந்தித்துக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் ராமஜெயம் தரப்பு.
தமிழகப் போலீஸுக்கு இது கிடுக்கிப்பிடி சவால்தான்!

No comments:

Post a Comment