Wednesday 25 April 2012

டாட்டூ..!


''மூஞ்சியில பூரான் உட்ருவேன்!''- இது சந்தானத்தின் காமெடி டயலாக் அல்ல; நிஜமாகவே முகம், கழுத்து, மார்பு, தோள்பட்டை, தொடை, வயிறு என உடம்பின் முக்கியமான பகுதிகளில் பூரானோடு சேர்த்து, பாம்பு, தேள், டைனோசர், ஃபீனிக்ஸ், ட்ராகுலா என விநோத உருவங்களைப் பச்சைக் குத்திக்கொள்வதுதான் சென்னை யூத்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்.
 ''டாட்டூஸ் எல்லாரும் நினைக்கிற மாதிரி மேற்கத்திய நாடுகள்ல தோன்றியது இல்லை. பச்சை குத்திக்கிறது தமிழர்களின் பாரம்பரிய அடையாளம். இப்பவும் கிராமங்கள்ல உடம்பு பூரா பச்சைக் குத்தி இருக்கும் பெரியவங்களைப் பார்க்கலாம். இந்தக் கலாசாரம் இங்கிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் போய் அப்படியே அமெரிக்கா, ஐரோப்பானு பரவிடுச்சு. அங்கே ஃபேஷன் உலகின் ஸ்பெஷல் அடையாளமே டாட்டூஸ்தான். அந்த ஃபீவர் இப்ப நம்ம பசங்களையும் தொத்திக்கிடுச்சு'' என்கிறார் எழும்பூரில் 'இங்க் கிங்’ என்ற டாட்டூஸ் கம்பெனியை நடத்திவரும் தருண் குமார். பல சினிமாப் பிரபலங்கள் உடலில் குத்தி உள்ள டாட்டூஸ் இவரின் கைவண்ணத்தில் உருவானவையே.
''லயோலாவுல பி.காம். படிக்கிறப்ப நல்லா படம் வரைவேன். என் க்ளாஸ்மேட்ஸுக்கு சாதாரண ரீஃபில் பேனாவில் டாட்டூஸ் போட்டுவிடுவேன். அது காலேஜ்ல செம பாப்புலர். படிப்பு முடிஞ்சதும் டாட்டூஸ் பற்றி படிக்கத் தாய்லாந்து போனேன். தாய்லாந்துதான் இப்போ டாட்டூஸ்களின் தாய்நாடு. அங்க பட்டாயா நகரத்துல இதுக்குனு 50 கல்லூரிகள் இருக்கு. சென்னையில இப்ப என் ஸ்டுடியோ உட்பட நாலஞ்சு டாட்டூஸ் ஸ்டுடியோஸ் இருக்கு. 2 ஆயிரம் ரூபாய்ல இருந்து 5 லட்ச ரூபாய் வரை சார்ஜ் பண்றோம்'' என்று சொல்லும் 'இங்க் டாட்டூஸ்’ தருண்குமார், ''பாதுகாக்கப்பட்ட புதிதான தனித் தனி ஊசிகள் மூலம் பச்சைக் குத்தப்படுதா என்பதைக் கவனிக்கணும்'' என்று எச்சரிக்கிறார்.
''எனக்கு ஸ்கார்பியோ ராசி. அதான் பாஸ்... விருச்சிகம். அதனால தேளை என் தோளில் டாட்டூஸா குத்தி இருக்கேன். டாட்டூஸ் குத்தினா ஒரு இனம் புரியாத தன்னம்பிக்கைக் கிடைக்குது. என்னை வலிமையானவனா உணர்றேன். இப்போ பிரணவ மந்திரமான 'ஓம்’ சிம்பளை டாட்டூஸா வரைஞ்சிருக்கேன்!'' -புஜம் காட்டிச் சிரிக்கிறார் குமார். ''கால்கள்ல நட்சத்திரமும் மீனும் வரைஞ்சதும் எனக்கு ஏஞ்சல் ஃபீல் கிடைக்குது. வீட்டுல அம்மாவும் தன் கையில் சின்னதா நட்சத்திர டாட்டூ வரைஞ்சிருக்காங்க. அப்பாவும் டாட்டூஸ் வரையணும்னு சொன்னார்'' என்று சொல்லி அதிரவைக்கிறார் ஸ்வேதா.
''18 வயசுக்கு மேற்பட்டவங்களுக்குத்தான் டாட்டூஸ் வரையுறோம். அழியுற மை, அழியாத மைனுஇரண்டு வகை இருக்கு. தப்பான வார்த்தைகள், ஆபாசமான படங்களை வரையச் சொல்றவங்க சென்னையில இல்லை. பூக்கள், மீன், நட்சத்திரம், சூரியன்னு வெரைட்டியான டிசைன்ஸ்தான் சென்னைப் பெண்களின் சாய்ஸ். போன வாரம் ராகுல்ங்கிறவர் தன் அம்மா முகத்தை கையில் பச்சைக் குத்தி இருக்கார்'' என்கிறார் 'ஜியோ டாட்டூஸ் ஸ்டுடியோ’ ஜார்ஜ்.
''முன்னெல்லாம் டபிள்யூ டபிள்யூ எஃப் ரஸ்லிங் சண்டைகள் பார்க்கிறதுல ஆர்வம் உள்ளவங்க அதுல வர்ற ஸ்டோன் ஹோல்டு, அண்டர்டேக்கர், ராக்னு ரஸ்லிங் வீரர்களின் உருவங்களை டாட்டூஸ் குத்திக்குவாங்க. இப்ப பக்தி மயமாவும் டாட்டூஸ் குத்திக்கிறாங்க. தங்களுக்குப் பிடிச்ச டாட்டூஸை அவங்களே பேப்பர்ல வரைஞ்சு எடுத்துட்டு வர்றாங்க. அந்த டிசைன்ல டாட்டூஸ் போடுறது எங்களுக்குப் பெரிய சவால். சென்னை ஃபேஷன் சிட்டியா மாறி பல வருஷம் ஆச்சு சார்!'' என்று சொல்லி சிரிக்கிறார் 'இங்க் டாட்டூஸ்’ தருண்.

No comments:

Post a Comment