Wednesday 18 April 2012

நீங்களே உருவாக்கலாம்... வற்றாத நீ்ர ஊற்று !


வந்துவிட்டது கோடை. தண்ணீர் பஞ்ச ஓலம் நாடெல்லாம் கேட்கும் காலம்.
''இப்படியே போனா, என் பேரனோட பேரன், தங்கம் விலை கொடுத்துதான் தண்ணி வாங்கிக் குடிக்கணும்!'' என்கிறார் டீக்கடையில் பேப்பர் வாசிக்கும் தாத்தா.
''மூன்றாம் உலகப் போர் மூள்வது, தண்ணீருக்காகத்தான் இருக்கும்!'' என்கின்றன சர்வதேச ஆய்வறிக்கை கள்.
ஆக... நாம் அதன் வீரியம் உணராமல் இருந்தாலும், தண்ணீர் பிரச்னை இந்த நூற்றாண்டின் பெரும் பிரச்னையாகவிருக் கிறது என்பதே உண்மை.
''உலகம் என்பது நம் வீட்டில் இருந்துதான் தொடங்கும் நமக்கு. எனவே... ஒவ்வொரு குடிமகனும் தன்னளவில், தன் வீட்டளவில் தண்ணீர் சேகரிப்புப் பற்றியும், சிக்கனப் புழக்கம் பற்றியும் யோசித்தே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம். குடிநீர் தட்டுப்பாடு, அந்தளவுக்கு வரும் காலங்களில் நம்மை ஆட்டிப்படைக்கவிருக்கிறது'' எனும் சித்ரா நாகராஜன், கடந்த 20 வருடங்களாக மழைநீர் சேகரிப்பு மூலம் தன் வீட்டின் தண்ணீர் ஊற்றை, வற்றாத வரமாக மாற்றி இருக்கிறார்.
திண்டுக்கல், என்.ஜி.ஓ. காலனியில் இருக்கும் தன் வீட்டுக் கிணற்றைக் காட்டி, ''நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் வந்த வருடங்களில்கூட, எங்கள் கிணற்றில் தண்ணீர் வற்றவில்லை!'' என்றபடி ஆரம்பித்த சித்ரா,
''நாங்கள் இந்த வீட்டுக்கு வந்து 40 வருடங்களாகிறது. வந்த புதிதில் இங்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு. வீட்டில் இருந்த கிணற்றில் மழைக் காலத்தில் ஓரளவுக்குத் தண்ணீர் இருக்கும். கோடையில் சொட்டுநீர் கூட இருக்காது. 2 கிலோ மீட்டர் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை. 'கிணற்றில்தான் நீர் இல்லை... போர்வெல்லாவது போடுவோம்’ என்று முயற்சியில் இறங்கினோம். இது நடந்தது கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு. 80 அடி ஆழத்தில் போர் போட்டும் தண்ணீர் கிடைக்க வில்லை.
பக்கத்தில் சென்று தண்ணீர் எடுத்து வருவது, பெரிய அண்டாக்கள், கேன்களில் சேமித்து வைத்துக் கொள்வது என்று தற்காலிகத் தீர்வுகளைவிட, நிரந்தர தீர்வு பற்றி யோசிக்க வேண்டியது முக்கியம் என்பது புரிந்தது. அந்தளவுக்கு கடந்த கோடைகளும் வரவிருந்த கோடைகளும் எங்களை பயமுறுத்தின. அந்தத் தேடலின்போதுதான் மழைநீர் சேகரிப்புப் பற்றித் தெரிந்து கொண்டோம். உடனடியாக அதை செயல்படுத்தினோம்.
மழைக்காலங்களில் மாடியிலிருந்து வழியும் நீரைக் குழாய் மூலமாக கிணற்றில் கொண்டு சேர்த்தோம். கிணற்றைச் சுற்றி கூழாங்கற்களை நிரப்பினோம். குளியல், சமையல் என்று வீட்டு உபயோக நீர் வீணாகாமல், அந்த கூழாங்கற்களின் வழி இறங்கி மறுசேகரமானது. இதனால் எங்களின் நிலத்தடி நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிய அதிசயம் நிகழ்ந்தது. கிணறு, கோடையிலும் வற்றாமல் இருந்தது.
ஐந்து வருடங்களில் குளிக்க, துவைக்க, துலக்க என்று புழக்கத்துக்குப் பஞ்சமில்லாமல் நீர் கிடைக்க, அடுத்தபடியாக, குடிநீர் சேகரிப்பு முயற்சியில் இறங்கினோம். கிணற்றுக்கு அருகிலேயே குழியெடுத்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவுள்ள ஒரு தொட்டி கட்டினோம். மழைக் காலங்களில் மாடியிலிருந்து சேகரிப்பு குழாய் வழியாக வழியும் நீரை, வலை மூலமாக வடிகட்டி, இந்தத் தொட்டியில் சேகரித்தோம். தேவைப்படும்போது இந்த நீரை அடி பம்ப் மூலமாக எடுத்து, காய்ச்சி, வடிகட்டி குடிக்க ஆரம்பித்தோம். கடந்த 20 வருடங்களாக இந்த தண்ணீரைத்தான் குடிக்கிறோம். மினரல் வாட்டர் என்கிற பெயரில் ஊர், பேர் தெரியாதவர்கள் எல்லாம் விற்கும் தண்ணீரை பணத்தைக் கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக... உங்கள் வீட்டிலேயே சேகரமாகும் இந்தத் தண்ணீர் நூறு மடங்கு பாதுகாப்பானது.
இத்தனை ஆண்டுகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, இந்த ஏரியா கிணறுகள் எல்லாம் வற்றிய கோடை களில் கூட, எங்கள் கிணற்றில் தண்ணீர் சலசலத்துக்கொண்டுதான் இருந்தது.எங்களைப் பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்களும் இதே முறையில் மழைநீர் சேகரிப்பு அமைத்தது, நல்ல தொடக்கம் என்பதில் எங்களுக்குப் பெருமையும், சந்தோஷமும். இப்போது வருடம் முழுவதும் எங்களின் தண்ணீர் தேவை நிறைவேறுவதுடன், அருகில் உள்ள நான்கு குடும்பங்களும் குடிக்கவும், சமைக்கவும் எங்கள் வீட்டில் தண்ணீர் எடுத்துச் செல்கிறார்கள்!'' என்ற சித்ரா,
''தண்ணீர் சேகரிப்பு மட்டுமல்ல... சேகரித்த தண்ணீரை சிக்கனமாகப் புழங்குவதும் மிக அவசியம்!'' என்று, அந்த முறைகளைப் பற்றியும் பகிர்ந்தார்.
''தினமும் குளியலுக்காகத்தான் அதிக தண்ணீர் செலவாகிறது. ஷவரில் குளிப்பதைத் தவிர்த்து வாளியில் தண்ணீர் பிடித்து வைத்துக் குளித்தால்... நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு அறுபது லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்தலாம். பாத்திரம் தேய்க்கும்போதும், பல் தேய்க்கும்போதும் 10 லிட்டருக்கும் மேல் தண்ணீர் வீணாகிறது. இதைத் தவிர்க்க, குழாயைத் திறந்து விடாமல் மக்கில் தண்ணீரைப் பிடித்து வைத்துப் பயன்படுத்தலாம். கார் கழுவ மற்றும் வீட்டைச் சுத்தம் செய்ய குழாயிலிருந்து நேராக ஹோஸ் பைப்பை பயன்படுத்தாமல் பக்கெட்டில் பிடித்து வைத்துச் செய்தால் பல லிட்டர் நீரைச் சேமிக்கலாம். காய்கறி சுத்தம் செய்த தண்ணீர் மற்றும் அரிசி அலம்பிய தண்ணீரைச் செடிகளுக்கு விடலாம். வாஷிங் மெஷினில் இருந்து வெளியேறும் தண்ணீரை பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம்'' என்றார் சித்ரா அழகாக.
தண்ணீருக்காக நாளை தவிக்காமல் இருக்க, இந்தக் கோடையிலாவது விழித்துக் கொள்வோம்!

ஒரு கப் காபிக்கு 140 லிட்டர் தண்ணீர்!
காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிக்கிறோம். அதற்கு எவ்வளவு தண்ணீர் செலவாகியிருக்கும்? என்று கேட்டால்...
'என்ன... கால் கப் தண்ணீர் இருக்கலாம்!' என்பதுதான் பெரும்பாலானவர்கள் சொல்லும் பதிலாக இருக்கும். ஆனால், ஒரு கப் காபியை உருவாக்க மொத்தமாக 140 லிட்டர் தண்ணீர் செலவு செய்யப்படுகிறது என்பதுதான் உண்மை. காபி செடியை வளர்க்க, கொட்டைகளை சுத்தம் செய்ய... என ஒவ்வொரு நிலைக்கும் தேவையான தண்ணீரைக் கணக்கிட்டால் இவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்கிறார்கள் தண்ணீர் குறித்த ஆராய்ச்சியில் இருக்கும் வல்லுநர்கள்!
ஒரு கிலோ தேங்காய் உற்பத்திக்கு 2 ஆயிரத்து 500 லிட்டர்; ஒரு டம்ளர் பாலுக்கு 200 லிட்டர்; ஒரு கிலோ கோதுமைக்கு 1,300 லிட்டர்; தோல் ஷ§ உற்பத்திக்கு 16 ஆயிரத்து 600 லிட்டர்... என நம்முடைய ஒவ்வொரு தேவைக்கும் மறைமுகமாக ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆகக்கூடி, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1,500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஓராண்டுத் தேவை... சுமார் 5 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர்!
மழைநீரை குடிநீராக்க..!
 வீடுகளில் மழைநீர் சேமிப்பது பற்றி திண்டுக் கல்லைச் சேர்ந்த நீர்ப்பாசன வல்லுநர், பொறியாளர் சுந்தரேசனிடம் பேசியபோது, ''வீடுகளில் மழைநீர் சேமிக்க இரண்டு வழிகள் இருக் கின்றன. ஒன்று மழை நீரை நிலத்தடி நீரோடு சென்றடைய செய்வது. மற்றொன்று நேரடி பயன்பாட்டுக்காக சேமிப்பது. இதில் நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்ய நினைப்பவர்கள்... சுமார் மூன்று அடி விட்டமும், 8 அடி ஆழமும் கொண்ட குழிகளை வெட்டி, அதில் 6 அடி உயரத்துக்கு உடைந்த செங்கற்களை கொட்டி, அதன் மேல் 2 அடி உயரத்துக்கு மணலைக் கொட்டி மழை நீரை அதற்குள் விடவேண்டும். வீட்டில் கிணறு உள்ளவர்கள் இந்தக் குழியின் அடியில் இருந்து குழாய் மூலமாக நீரை கிணற்றுக்குள் விட்டுக் கொள்ளலாம்.
குடிநீருக்காக பயன்படுத்த நினைப்பவர்கள், மாடியில் பெய்யும் மழைநீரை குழாய்கள் மூலமாக 500 முதல் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டிகளில் (சின்டெக்ஸ்) சேமித்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது தொட்டியின் மூடியில் ஒரு வடிகட்டியை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்று சொன்னார்.

No comments:

Post a Comment