Monday 9 April 2012

ராமஜெயம் கொலை விலகாத மர்ம முடிச்சிகள்.


ராமஜெயம் கொலை விவகாரத்தில் இன்னமும் துப்புத் துலங்கவில்லை. தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்திலேயே குற்றவாளிகளைப் பிடித்துவிடும் முனைப்பில் மும்முரமாக இருக்கிறது போலீஸ்.
வாட்ட சாட்டமான மூன்று பேர்...
ராமஜெயத்தை மார்ச் 29-ம் தேதி, கடைசியாகப் பார்த்துப் பேசியவர், ஓய்வு பெற்ற கூடுதல் நீதிபதியான மணி. 62 வயதான அவரிடம் 'நன்றாக ஞாபகப்படுத்தி சொல்லுங்கள்’ என்று கேட்டுக் கேட்டுத் தகவல் வாங்கி வருகிறது போலீஸ். நாமும் அவரிடம் பேசினோம். 'தில்லை நகர் பக்கம் அதிகாலையில் வாக்கிங் போறப்ப, எனக்கு ராமஜெயம் பழக்கம் ஆனார். நானும் என் னோட நண்பர்கள் சிலரும் காட்டூர் ஏரியாவில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி இருந்தோம். அதை விக்கிறதுக்கு ராமஜெயம் உதவி செஞ்சார். அதில் பாக்கிப் பணம் வாங்குறது விஷயமா ராமஜெயத்திடம் பேசலாம்னு 29-ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு அவர் வீட்டைக் கடந்து போனேன்.
வீட்டு வாசல்ல ராமஜெயம் சட்டை, லுங்கியோட நின்னுட்டு இருந்தார். என்னைப் பார்த்ததும் 'வாங்க சார்’னு சொன்னார். 'உங்க கிட்ட கொஞ்சம் பேசணுங்க’னு சொன்னதும், 'நம்ம ஆபீஸுக்கு வந்துருங்க’னு சொன்னார். தொடர்ந்து அந்தத் தெரு வழியா நடந்து வந்தேன். அவரது வீடு இருக்கிற தெருவுல எட்டாவது கிராஸ் சந்திக்கும் இடத்துல வாட்டசாட்டமா மூணு பேர் நின்னுட்டு இருந்தாங்க. அவங்களுக்கு 25 வயசுல இருந்து 30 வயசுக்குள்ளதான் இருக்கும். ரெண்டு பேர் பேன்ட் சட்டையும், ஒருத்தர் அரைக்கால் டவுசர், சட்டையும் போட்டுட்டு இருந்தாங்க. என்னைப் பார்த்ததும் அவங்க கொஞ்சம் பம்மினாங்க. சரி, வாக்கிங் போறவங்களா இருக்கும்னு நினைச்சேன்.
அப்புறம் வாக்கிங் முடிச்சுட்டு வீட்டுக்குப் போய்க் குளிச்சிட்டு காலை 6.30 மணிக்கு சாஸ்திரி ரோட்டுல இருக்கிற ராமஜெயத்தோட ஆபீஸுக்குப் போனேன். 7.45 மணி வரைக்கும் அவர் வரலை. அவரோட உதவியாளர் வேலு, 'இந்த நேரத்துக்குப் பிறகு சார் இங்க வர மாட்டார்’னு சொல்லவும் கிளம்பிட்டேன். 12 மணி வாக்குலதான் ராமஜெயத்தைக் கொலை செஞ்சிட்டாங்கன்னு கேள்விப்பட்டு பதறிப் போய் அரசு மருத்துவமனைக்கு ஓடினேன். அங்க என்னைப் பார்த்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவிஆணையர் வீராசாமி, 'கடைசியா நீங்கதான் ராமஜெயத்தைப் பார்த்துப் பேசினீங்களாமே..?’ என்று கேட்டார். நான், அப்போது பேசும் நிலையில் இல்லை. பதில் எதுவும் சொல்லாம வந்துட்டேன். அப்ப இருந்து இன்னைக்கு வரைக்கும் ஏகப்பட்ட போலீஸ்காரங்க வந்து விசாரிச்சுட்டுப் போயிட்டாங்க...' என்றார்.
கைவிட்ட கண்காணிப்புக் கேமராக்கள்!
மார்ச் 29-ம் தேதி காலை 5 மணியில் இருந்து 6 மணி வரை திருச்சி நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு. இதனால், கோகினூர் திரையரங்கம், மாம்பழச் சாலை சிக்னல்களில் இருக்கும் போலீஸ் கண்காணிப்புக் கேமராக்கள் இயங்கவில்லை. தில்லை நகரில் சில தனியார் நிறுவனங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் இருப்பதை அறிந்து ஐந்து தனியார் நிறுவனக் கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தது போலீஸ். ஆனால், அவற்றிலும் உருப்படியாக எதுவும் சிக்கவில்லையாம். 
தகவல் தராத டெலிபோன்!
இந்தக் கொலை வழக்கில் துப்புக் கொடுக்க தனியாக 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தொலைபேசி எண் ஒன்றை பொதுமக்களிடம் அறிவித்து இருந்தது போலீஸ். இதுவரை 10 அழைப்பு கள் மட்டும் வந்தனவாம். அவையும் உப்புச்சப்பு இல்லாத தகவல்கள்!
திருச்சி டு மதுரை!
சில ஆண்டுகளுக்கு முன், திண்டுக்கல்லில் பிரபல டாக்டர் பாஸ்கர், மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். பல மாதங்கள் நடந்த தேடலுக்குப் பிறகே குற்றவாளிகளைப் போலீஸ் பிடித்தது. அந்தக் கொலையை செய்தது மதுரையைச் சேர்ந்த ஒரு கூலிப்படை. ராமஜெயம் கொலை விவகாரத்திலும் அந்தக் கும்பலின் தொடர்பு உள்ளதா என்று ஒரு டீம் மதுரைக்குச் சென்று விசாரித்து உள்ளது. மேலும், சிறைகளில் இருக்கும் ரவுடிகள், அந்த ரவுடிகளுக்கு எதிர் கோஷ்டியினர் ஆகியோரிடமும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது!
இலங்கை பாணி சதித் திட்டம்?
கடத்திச் சென்று கை, கால்களை கம்பியால் கட்டி கழுத்தை நெறித்துக் கொலை செய்வது இலங்கையில் நடக்கும் கொலை ஸ்டைலாம். அதனால் அகதிகளை ஏவி இந்தத் திட்டம் அரங்கேற்றப்பட்டதா என்று சந்தேகம் கிளம்பியுள்ளது. சமீபத்தில், இலங்கையில் இருந்து தென்தமிழகம் வந்துபோனவர்கள் பற்றியும் விசாரணை நடக்கிறது.
ஆறு மாத செல்போன் ஆராய்ச்சி!
ராமஜெயத்தின் செல்போன்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக வந்த அழைப்புகளை முழுமையாக ஆராய்ந்து வருகிறது தனி போலீஸ் டீம். அதில் இருக்கும் ஒரு சில நபர்களைக் கூப்பிட்டு விவரங்களைக் கேட்டு, 'தேவைப்படும்போது கூப்பிடுவோம். விசாரணைக்கு வர வேண் டும்’ என்று அனுப்பிவைக்கிறார்கள். ராமஜெயத்துடன் நிலவிவகாரம், பணப் பரிவர்த்தனை தொடர்பு உடையவர்களை சல்லடைப் போட்டுத் தேடி விசாரிக்கிறது போலீஸ்.
சிக்கிய சில தலைகள்!
ராமஜெயத்துடன் நெருங்கிய தொடர்புடைய இரண்டு வட்டச் செயலாளர்கள், ஒரு முன்னாள் கவுன்சிலர், ஒன்றியச் செயலாளர் ஒருவர், மாவட்ட தி.மு.க. நிர்வாகி ஒருவர், ராமஜெயம் ஊரில் இல்லாத போது அவரது அலுவலகத்தைக் கவனித்துக்கொண்ட உறவுக்காரர் என்று குறிப்பிட்டமுக்கிய தலைகளை ரகசியமாகக் கண்காணித்து வருகிறார்கள். இவர்களின் செல்போன் தொடர்புகளையும் ஆராய்ந்து வருகிறது போலீஸ்.
''ஸீட் கொடுக்காததுக்காக கொலை செய்வாங்களா?!''
இப்போது, தி.மு.கழக பொறுப்பில் இருக்கும் ஒருவர் நேருவுக்கு நெருக்கம். இவர் தனது சமூகத் தினரிடம் மிகவும் ஈடுபாடு கொண்டவராம். ஸ்ரீரங்கம் தொகுதி அவரது சமூகத்தினரின் கோட்டை என்பதால், கடந்த சட்டசபை தேர்தலில் அந்தத் தொகுதியை எதிர்பார்த்து இருந்தார். ஆனால், ராமஜெயத்தின் உறவினரின் நண்பர் ஒருவருக்கு ஸீட் கொடுக்கப்படவே, அப்போதே ஏகத்துக்கும் குதித்தாராம். 
அதுவும் இல்லாமல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், சாதி மோதல் பின்னணியில் நடந்த ஒரு கொலை வழக்கில் தன்னை ராமஜெயம் சிக்க வைத்து விட்டதாகவும் அப்போது ஆவேசமாகப் புலம்பினாராம். பின்னர், நேருதான் சமாதானம் செய்து இருக்கிறார். இதனால், அவரையும் கண் காணித்து வருகிறது போலீஸ். அவரோ, 'ஸீட் கொடுக்காததுக்கு யாராச்சும் கொலை செய்வாங்களா?’ என்று நெருக்கமானவர்களிடம் கண்ணீர்விட்டுக் கதறுகிறாராம்!
பறந்து வந்து பஞ்சாயத்து!
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியின் பங்குதாரர் களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு அடிதடி நடக்கும். பங்குதாரர்களில் ஒரு தரப்பு... கல்லூரியை ராமஜெயத்துக்கு விற்க சம்மதித்ததாகவும் மற் றொரு தரப்பு மறுத்ததாகவும் தகவல். இதில், ராமஜெயத்துக்காக விமானத்தில் வந்து எல்லாம் பஞ்சாயத்து செய்தார்களாம் பிரபல டான்கள். கொலைக்கும் இந்த விவகாரத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்றும் ரகசிய விசாரணையை மேற்கொண்டுள்ளது போலீஸ்!
காதல் விவகாரம்
தென் மாவட்டப் பிரமுகரின் மகளுக்கு ராம ஜெயம் காதல் திருமணம் செய்து வைத்து, பின்னர் பிரித்தும் விட்டார். இந்த விவகாரத்தில் ராமஜெயம் பழிவாங்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவலில் ஓரளவு லாஜிக் இருப்பதால், சங்கிலித் தொடராக விசாரித்து வருகிறது போலீஸ். தவிர நர்ஸ் ஒருவரும் தென்னூர் அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் பெண் ஒருவரும் போலீஸின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார்கள்!
உடன்பிறப்புகளின் வளையத்தில் நேரு!
நேருவுக்கு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனாலும், தி.மு.க. தொண்டர் களும் அவருக்குத் தனியாகப் பாதுகாப்பு வளையம் அமைத்து ஷிஃப்ட் முறையில் காவல் காக்கிறார்கள். கூடுதல் பாதுகாப்புக்காக, நேருவின் கார் கண்ணாடிகளில் சன் கன்ட்ரோல் பிலிம் ஒட்டப்பட்டு விட்டது.
கிருபாகரன் ரிட்டர்ன்ஸ்?!
ராமஜெயம் கவனித்துக்கொண்ட வர்த்தகப் பரிவர்த்தனைகளைக் கவனிக்க  நெப்போலியனின் அண்ணன் கிருபாகரனை மீண்டும் நியமிக்க, நேரு குடும்பத்தினர் பரிசீலித்து வருகிறார்களாம். இப்போது, டெல்லியில் இருக்கும் அவர், பிணக்குகளை  மறந்து குடும்ப உறுப்பினர்களுடன் ஆறுதலாகப் பேசி வருகிறாராம்!
''10-ம் நாள் முடியட்டும்!''
நேருவிடம் பேசினால், 'தம்பியோட 10-ம் நாள் காரியம் முடியுற வரைக்கும் நான் எதுவும் பேசுறதா இல்லை. அதுக்குப் பின்னால வாங்க...'' என்கிறார் விரக்தியாக. வீட்டுக்குள் அவர் பல மணி நேரம் யாரிடமும் பேசாமல் தனிமை யில் இருப்பதாகவும், சில சமயம் குடும்ப உறுப் பினர்களிடமே கோபமாகப் பேசுவதாகவும், சமாதானம் செய்தால் உடைந்து அழுவதாகவும் சொல்லி கண்ணைக் கசக்குகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். கொலையாளிகளைப் பற்றிய க்ளுக்களை சேகரிக்க தனியார் துப்பறியும் நிறுவனத்தினரை நேரு அமர்த்தி இருக்கிறார்.  அவர்கள் தரும் தகவலை அப்படியே போலீஸுக்கு பாஸ் செய்கிறாராம் நேரு.
போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ், 'இப்போது எதைச் சொன்னாலும் அது விசாரணையைப் பாதிக்கும். குற்றவாளிகளைப் பிடித்த பிறகு விளக்கமாகப் பேசுகிறேன்' என்கிறார். இதற்கிடையே, ராமஜெயத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, மேல் விசாரணைக்காகவும் கூடுதல் தகவல்களைப் பெறவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.
பாஸ்போர்ட் சிக்கல்!
'மே 24 குருபெயர்ச்சி முடிகிற வரை சொந்த மண்ணில் இருக்கக் கூடாது’ என்று ராமஜெயத்தின் ஜோதிடர் சொன்னதால், வெளிநாடு போகத் துடித்தாராம். ஆனால், அது ஏன் நிறைவேறவில்லை என்று ராமஜெயத்தின் வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம். ''இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே, போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட ராமஜெயத்தின் பாஸ் போர்ட்டை, உயர் நீதிமன்றத்தில் வாதாடி பெற்றோம். திருச்சி போலீஸ் கமிஷனர் தரப்பில் முறைப்படி ஒரு கடிதம் இமிகிரேஷன் பிரிவுக்குப் போனால்தான், அங்கே கறுப்பு லிஸ்ட்டில் உள்ள ராமஜெயத்தின் பெயரை எடுப்பார்கள். ஆனால், கமிஷனர் ஏனோ கடிதம் அனுப்பவில்லை. அந்தக் கடிதம் போய் இருந்தால், ராமஜெயத்துக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது'' என்கிறார்.
ராமஜெயத்தின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கியத் தொழில் உறவுகள் யாருமே போலீஸிடம் மனம் விட்டுப் பேசவில்லையாம். இதன் உள்அர்த்தம் புரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது போலீஸ்!
அ. சாதிக்பாட்சா,
'ப்ரீத்தி’ கார்த்திக்

கொலையாளியைக் காட்டுமா ஒரு ரூபாய் காயின்?
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வாசல் அருகே உள்ள ஒரு கடையில் காயின் போட்டுப் பேசும் போன் இருந்ததாம். அந்தப் பகுதியில் வேலை பார்க்கும் சிறுவன் ஒருவன் அந்த ஏரியா தி.மு.க. பிரமுகரை அழைத்து, 'அண்ணே.. ராமஜெயம் கொலை சம்பவத்துக்கு முன், கடந்த ஒரு வாரமாக ஆறு அல்லது ஏழு பேர் இங்கே வந்து போனார்கள். பார்க்க.. கூலிப்படை போல கரடுமுரடாக இருந்தார்கள். எப்போதும், பிளாஸ்டிக் பையில் ஒரு ரூபாய் காயின்கள் சகிதம் வருவார்கள். ஒரு ஆள் எங்கோ நெல்லை தமிழில் பேசுவான். அவன் பேசி முடித்ததற்கான சிக்னல் காட்டியதும்... இன்னொருவன், காயின் போடுவான். மற்றவர் கள் சுற்றிலும் நிற்பார்கள். ராமஜெயம் கொலைக்குப் பிறகு அவர்கள் யாரும் இங்கே வரவில்லை. எனக்குச் சந்தேகமாக இருக்கிறது' என்று சொல்லி இருக்கிறான்.
அந்தப் பிரமுகர் உடனே கே.என். நேருவிடம் போய் இந்தத் தகவலைச் சொல்ல... 'ரொம்ப முக்கியம்யா... அந்தப் பையனைக் அழைச்சிட்டுப்போய் போலீஸ் கமிஷனரைப் பாரு' என்று சொல்லி இருக்கிறார். கமிஷனருடன் சந்திப்பு நடந்ததாம். ஏப்ரல் 4-ம் தேதியன்று கிடைத்த தகவல்படி, போன் பேசிய ஆட்களில் ஒருவனை போலீஸ் சென்னையில் பிடித்து விட்டார்களாம். அவன் மூலம் ராமஜெயம் கொலை விவகாரத்தில் ஒரு துருப்பு சிக்கி இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் பேச்சு.

No comments:

Post a Comment