Friday 27 April 2012

பிரசவத்தால் அழகு குலையுமா ?

'கோடி ஒரு வெள்ளை(சலவை)க்கு, குமரி ஒரு புள்ளைக்கு’ என்று கொடுமையான ஒரு பழமொழி நம் ஊரில் உண்டு. ஒரு குழந்தை பிறந்தவுடன், அந்தப் பெண் உடலளவில் தளர்ந்துவிடுவாள், இளமை குன்றிவிடுவாள் என்பதை வலியுறுத்தப் பார்க்கிறது இந்தப் பழமொழி. ஆனால், குழந்தைப் பிறப்புக்குப் பின்பு... உரிய வழிமுறைகளைப் பின்பற்றினால், தாய்மைக்குப் பின்னும் என்றென்றும் இளமையை நிரந்தரமாக தங்க வைத்துவிட முடியும் என்பதே உண்மை!
உலகின் ஒப்பிட முடியாத உணவு... தாய்ப்பால். அது குழந்தைக்கு ஆரோக்கியம், அறிவு, நோய் எதிர்ப்பு சக்தி என்று அனைத்தையும் தர வல்லது. ஆனால், அழகு குறைந்துவிடும் என்று அந்த அமிர்தத்தை தங்கள் குழந்தைக்குத் கொடுக்கத் தவறுகிறார்கள் சில பெண்கள். இது அழகுப் பராமரிப்பு அல்ல... குழந்தைக்குச் செய்யும் துரோகம். எனவே, குழந்தைக்குத் தவறாமல் தாய்ப்பால் கொடுப்பது அதன் உரிமை, உங்கள் கடமை.
ஃபீடிங் செய்வது உங்கள் ஸ்ட்ரக்சரை குலைக்காது... மீட்டுத் தரவே செய்யும். கர்ப்ப காலம், பிரசவம் என கடந்து வந்திருக்கும் உங்கள் உடம்பில் ஏகப்பட்ட எடை கூடியிருக்கும். தாய்ப்பால் கொடுக்கும்போது, அந்த அதிகப் பருமன், தானே படிப்படியாகக் குறைந்து, உடலை பழைய நிலைக்குத் திருப்பும்.
இன்னொரு விஷயம்... குழந்தைக்குப் பால் புகட்டும்போது மாதவிலக்கு சுழற்சி ஏற்படாது. இதனால் அடுத்த குழந்தைக்கான வாய்ப்பை தள்ளிப் போடவும் ஃபீடிங் உதவும். சிலருக்கு பால் புகட்டும்போதும் சுழற்சி ஏற்படலாம். அது அவரவர்களின் உடல் அமைப்பு, ஹார்மோன் மாற்றத்தைப் பொறுத்தது. என்றாலும், இது இயல்பானதுதான். இன்னொரு முக்கிய விஷயம்... பால் கொடுப் பதால் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
'எல்லாம் சரி... ஆனா, மார்பகங்கள் தளர்ந்திருமே...’ என்று சிலர் கவலைப்படுவார்கள். பிரசவம் முடிந்த 3 - 10 மாதங்களுக்குள் உடலும், மார்பகங்களும் 60% தன் நிலை மீட்டுவிடும். தாய்ப்பால் கொடுப்பது முழுமையாக நிறுத்தப்பட்டதும்... முழுமையாக பழைய நிலைக்குத் திரும்பிவிடும். இதற்கு, நாம் சரியான அளவில் உடுத்தும் பிரேசியரும் உதவும். பிரேசியர் உடுத்துவதால்... பால் கட்டும் அல்லது பால் சுரக்காது என்கிற மூடநம்பிக்கை பலரிடம் இருக்கிறது. இதிலும் உண்மை இல்லை. பிரசவம் முடிந்ததும் தவறாமல் பிரேசியர் பயன்படுத்த வேண்டும். இதனால் பால் புகட்டுவதில் அசௌகரியம் உணர்பவர்கள், அதற்கென்றே பிரத்யேகமாக உள்ள 'ஃபீடிங் பிரா’ பயன்படுத்தலாம்.
வயிறு பெரிதாகாமல் இருக்க, நார்மல் டெலிவரியில் பிரசவித்த கணத்திலேயே துணியால் வயிற்றை இறுகக் கட்டுவார்கள். பிரசவத்தின்போது வயிறானது நன்றாக விரிந்த தன்மையில் இருக்கும். குழந்தை பிறந்தவுடன் வயிற்றின் தசைகள் தொளதொளப்பாக இருக்கும். இதனை குறைக்கவும், விரிந்திருக்கும் யூட்ரஸ்ஸானது சுருங்கி பழைய நிலைக்கு வரவும்தான் இப்படி பிரசவம் முடிந்தவுடன் வயிற்றில் துணியைக் கட்டுவார்கள். சிசேரியன் பிரசவம் என்றால்... இரண்டு வாரங்களுக்குப் பிறகு துணி கட்டிக் கொள்ளலாம். பாட்டி வைத்தியம் போல பாரம்பரியமாக பின்பற்றப்படும் இதில் பலன் இருக்கவே செய்கிறது!
இதற்காக பிரத்யேக பெல்ட்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைவிட, துணியால் வயிற்றை இறுகக் கட்டுவதே சிறந்தது. காரணம், பெல்ட் என்பது அதிகமான இறுக்கத்தைத் தரக்கூடியது என்பதால், குறிப்பிட்ட இடங்களில் அது கூடுதல் அழுத்தத்தைத் தந்து வேறுவிதமான பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். ஆனால், துணியால் கட்டும்போது ஒரே சீரான அழுத்தமே இருக்கும்.
பிரசவத்தின்போது விரிந்த கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப, ஒன்று முதல் ஒன்றரை மாதங்கள் ஆகலாம். எனவே, நார்மல் டெலிவரியாக இருந்தால் 4 வாரங்கள் வரையிலும்... சிசேரியனாக இருந்தால் இரண்டு மாதங்கள் வரையும் வயிற்றைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளைச் செய்யக்கூடாது. இந்த விஷயத்தில் பிசியோதெரபிஸ்ட் ஆலோசனை அவசியம்.
பிரசவித்த தாய்மார்களின் பிரதான பிரச்னை... உடல் எடை. கர்ப்பகாலத்தில் கிட்டத்தட்ட 12 - 15 கிலோ வரை எடை கூடி இருப்பார்கள். பிரசவத்தின்போது 4 - 5 கிலோ வரை உடனடியாகக் குறைந்தாலும், பின் வரும் நாட்களில் மீண்டும் தடதடவென உடல் எடை கூடும். குழந்தைக்கு பால் கொடுப்பதால் அதிக சாப்பாடு எடுத்துக்கொள்வது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள் என இதற்குப் பல காரணங்கள் உண்டு.
குழந்தை பிறந்த மூன்று மாதங்கள் வரை உடல் எடை குறைப்பதற்கான முயற்சிகள் வேண்டாம். தாய்மையைப் பரிபூரணமாக உணர வேண்டிய அந்நாட்களில், அது மட்டுமே நிகழட்டும். 'வெயிட் ரொம்பக் கூடுது...’ என்று கான்ஷியஸாகி டயட் ஆரம்பித்தால், தாய்ப்பாலில் அது பிரதிபலிக்கும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, உடல் தானாகவே இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பிக்கும். அதற்குப் பின்னும் உடல் எடை குறையவில்லை எனில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.
அதிகமாகச் சாப்பிட்டால்தான் அதிகமாக தாய்ப்பால் சுரக்கும் என்பதில்லை. அளவாக, அதேசமயம் சத்தாகச் சாப்பிட்டாலே தாய்ப்பால் நன்கு சுரக்கும். குறிப்பாக, கால்சியம் அதிகமுள்ள உணவு வகைகள், பால், தயிர், முட்டை, கீரை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே, நான்-வெஜ், அளவுக்கு அதிகமான சாப்பாடு என் பதையெல்லாம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
அடுத்த பிரச்னை, தலை முடி அதிகமாக உதிர்வது. கர்ப்ப காலத்தில் உணவு, மாத்திரைகள் வழியாக கால்சியம், இரும்புச்சத்து உட்கொள்வது அதிகமாக இருக்கும். அதனால் அப்போது தலை முடி நன்றாக வளரும். ஆனால், குழந்தை பிறந்தவுடன் சத்துக் குறைவு, கேசப் பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் முடி கொட்டுவது அதிகமாகும். சத்தான உணவு வகைகளுடன், முறையான கேசப் பராமரிப்புகளைத் தொடர்ந்தாலே மறையக்கூடிய எளிய பிரச்னைதான் இது!

No comments:

Post a Comment