முன்னோர் சொல்லிச் சென்ற அழகுப் பராமரிப்பு வழிமுறைகள் பலவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டுக் கொண்டே வருகின்றோம். அதில் ஒன்றுதான்... எண்ணெய்க் குளியல். இந்த ஹாட் சம்மருக்கு கண்டிப்பாக வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் போட வேண்டியது, கேசப் பராமரிப்புக்கு மட்டுமல்ல... தேக நலனுக்கும் நல்லது.
நல்லெண்ணெய் மாதிரியான வழக்கமான எண்ணெய்களில் இருந்து கொஞ்சம் ஸ்பெஷலான 'மொராக்கோ ஆயில் மசாஜ்’ பற்றிப் பார்ப்போம். இதற்கு 'மிராக்கிள் ஆயில் மசாஜ்’ என்ற பெயரும் உண்டு. நம்பமுடியாதபடி கேசத்தின் அழகைக் கூட்ட வல்லது இது!
அதென்ன மொராக்கோ ஆயில்..?!
ஆப்ரிக்காவில் உள்ள மொராக்கோ பகுதியில் அதிகமாக விளையும் ஆர்கான் பழங்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இது. இதில் வைட்டமின் 'எஃப்’ மற்றும் 'இ’ அதிகம் உள்ளது. வைட்டமின் 'எஃப்’, தலைமுடிக்கு வலுவைக் கொடுக்கும். வைட்டமின் 'இ’, பொடுகை விரட்டுவ துடன், கேசத்தை மிருது வாக்கும். சூரியனிடமிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் கேசத்தில் உண்டாகும் பாதிப்புக்கு கவசமாகச் செயல்படும் திறனும் இந்த ஆயிலுக்கு உண்டு.
''ஹேர் கேர் ட்ரீட்மென்ட் செய்யும்போது, மறக்காம மாடலா என்னைக் கமிட் பண்ணுங்க!'' என்று சொல்லி வைத்திருந்த மீனாட்சியை, மறந்துவிடாமல் அழைத்தோம். ''கூடவே நடிகை ஜெனிலியாவோட ஃபேவரைட் ஹேர் ஸ்டைலான 'டிவிஸ்டு லக்ஸ்’-ம் செய்து கொள்ளலாம்!'' என்றதும், ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் அவர் முகத்தில். மீனாட்சிக்கு கேசம் உடைந்து போவது, வறட்சி என்று சில பிரச்னைகள் இருந்தன. எல்லாவற்றுக்கும் தீர்வு காணலாம் என்று நம்பிக்கை கொடுத்து, ஹேர் ட்ரீட்மென்ட்டை ஆரம்பித்தோம்.
முதலில் கேசத்தை ஷாம்பு போட்டு நன்றாக அலசினோம். பின் லேசாக ஈரப்பதம் இருப்பதுபோல் கேசத்தை உலர்த்தினோம். இப்போது மிராக்கிள் ஆயிலுடன் ஆயில் ஸ்பா க்ரீமை சேர்த்து, ஒவ்வொரு முடியிலும் படும்படி அப்ளை செய்தோம், சீப்பு கொண்டு ஸ்மூத்தாக வாரினோம். கூடவே மசாஜ். இது, குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. இதன் மூலம் கேசத்தின் வேர்க்கால்கள் வரை எண்ணெய் படர்வதுடன், ரத்த ஓட்டமும் தூண்டப்படும்.
அடுத்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஸ்டீமிங். ஆயில் மற்றும் க்ரீம் கலவை இரண்டும், வேர்க்கால்கள் வழியாக உள் இறங்கவே இந்த ஸ்டீமிங். இது முடிந்ததும், கேசத்தை நன்றாக அலசினோம். இதில் கவனிக்க வேண்டியது, எண்ணெய்ப்பசை போக வேண்டும் என்பதற்காக ஷாம்பு வாஷ் செய்யக்கூடாது. அது தலை மற்றும் கேசத்தில் படிந்திருக்கும் மொத்த எண்ணெயையும் எடுத்துவிடும். 'பிசுபிசுவென்று இருக்குமே’ என்ற கவலை வேண்டாம். இதில் அவ்வளவு பிசுபிசுப்பு இருக்காது. அப்படி உணர்பவர்கள், ஞாயிறு அன்று வீட்டில் இருக்கும்போது இந்த ஆயில் பாத் எடுத்து, மறுநாள் ஷாம்பு வாஷ் செய்து கொள்ளலாம்.
''மிராக்கிள்னு இதுக்கு பேர் வெச்சது ரொம்பப் பொருத்தம். என்ன ஆச்சர்யம்... ஒரே வாஷ்ல என் ஹேர் இவ்ளோ ஸ்மூத்தா ஆயிருச்சே! '' என்று சந்தோஷமானார் மீனாட்சி.
குறைந்தது 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த மிராக்கிள் ஆயில் பாத் எடுத்துக் கொள்ளலாம். முடியாதவர்கள், அட்லீஸ்ட் மன்த்லி ஒன்ஸ். தினமும் குளியலுக்கு முன் கொஞ்சம் மிராக்கிள் ஆயில் மற்றும் க்ரீம் சேர்த்து தலையில் தடவியும் பாத் எடுத்துக் கொள்ளலாம். கேசம்... ஆரோக்கியமாகும், அழகாகும், வலுவாகும்!
''மேம்... டிவிஸ்டு லக்ஸ் ஹேர் ஸ்டைல்'' என்று நினைவுபடுத்தினார் மீனாட்சி. மிதமான ஈரப்பதத்துடன் இருக்கும் கேசத்தை பல பார்ட் களாகப் பிரித்து, கீழிருந்து மேலாக கேசத்தைச் சுருட்டி மேலே கொண்டு வந்து கிளிப் செய்ய வேண்டும். முன்பக்கம் நெற்றிப் பகுதியைத் தவிர்த்து, மற்ற பகுதிகளில் எல்லாம் இதை 'ஸ்டெப் பை ஸ்டெப்’பாக செட் செய்ய வேண்டும். 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பின் ஹேர்பின்களை அகற்றினால்... அலை அலையாகப் புரளும் கேசம்!
No comments:
Post a Comment