Thursday, 19 April 2012

குத்துப் பாட்டு இல்லாம பாட்டு எடுக்க முடியலை!


முகமூடி’ - என் சின்ன வயசுக் கனவு. 'அம்புலி மாமா’, 'பாலமித்ரா’, 'முத்து காமிக்ஸ்’ படிச்சு வளர்ந்தவன் நான். இரும்புக் கை மாயாவி  இப்பவும் என் கனவில் வர்றான். 'முகமூடி’ ஸ்க்ரிப்ட் முடிச்சதும் நான் நினைச்சது வந்ததை உணர்ந்தேன். இப்போதைய தமிழ் சினிமா சூழலில் சூப்பர் ஹீரோ படம் எடுப்பது கஷ்டம். கண்ணு முன்னாடி ஒரு கொடுமை நடந்துட்டு இருக்கு. அதை எதிர்கொள்ள நினைக்கிறவன் என்ன மாதிரி நடந்துக்குவான்னு யோசிச்சுப்பார்த்தேன்... ஒரு ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், இரும்புக் கை மாயாவி மாதிரி ஏதாச்சும் சாகசம் பண்ணாத்தான் உண்டு. அதுதான் இந்தப் படத்துக்கான விதை. நான் செய்ததிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷத் தைக் கொடுக்கிற படம் 'முகமூடி’தான்!'' - குளிர் கண்ணாடி விலக்காமல் பேசுகிறார் இயக்குநர் மிஷ்கின்.
''பேட்மேன், ஸ்பைடர்மேன் பாணி படம்னா... ரசிகர்கள் நிறைய எதிர்பார்ப்பார்களே?''
''ப்ளாக்ல எழுதறவங்களுக்கும் ஜோல்னா பைக்காரர்களுக்கும் இப்பவே சொல்லிடுறேன்... இது அதுமாதிரியான படம் இல்லை. 'புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா?’, 'முகமூடி சோடா மூடி’னு இப்பவே தலைப்பு எல்லாம் எழுதிவெச்சுட்டு ரெடியா இருப்பீங்க. ஆனா, நான் புலியும் இல்லை... பூனையும் இல்லை. எம்.ஜி.ஆர். மாஸ்க் போட்டுக்கிட்டு தெள்ளத்தெளிவா ஒரு படம் எடுத்திருக்கேன். இதை நம்ம சமகாலத் தமிழ்ச் சூழலில் வெச்சுப் பார்க்கணும். எளிமையான சகல மனிதர்களுக்கும் போய்ச் சேரும் முயற்சி இது!''
''ஜீவா எப்படி இதற்குப் பொருந்தினார்?''
''பேச ஆரம்பிச்சதுமே 'ஆறு மாசம் குங்ஃபூ கத்துக்கணும் ஜீவா’னு சொன்னேன். 'ஏழெட்டு வருஷமா அந்தப் பயிற்சியில் இருக்கேன். இன்னும் அதை எங்கேயும் பயன்படுத்தலை’னு சொன்னார். இந்த புராஜெக்ட்டுக்குள் முழுசா இறங்கிட்டார். என் மேல் ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்கார். இனி, ஒவ்வொரு வருஷமும் ஒரு படம் அவர்கூட பண்ணலாம்கிற அளவுக்கு நட்பு வளர்ந்திருக்கு. சூப்பர்மேன் டிரெஸ் தயாரிக்கச் துணி செலவே 45 லட்சத்தைத் தாண்டுச்சு. ஹாங்காங்ல இருந்து சண்டைப் பயிற்சிக்கு வந்திருந்தாங்க. அந்த டிரெஸ் போட்டுட்டு நிக்கிறது ரொம்பக் கஷ்டம். பத்து நிமிஷம் தொடர்ந்து நின்னா, கண் பொங்கும். உடம்பெல்லாம் வியர்த்து ஒழுகும். அதை எல்லாம் பொறுத்துக்கிட்டு இருந்தார் ஜீவா. இவ்வளவு சின்ன வயதில் ஒரு நடிகனுக்கு இவ்வளவு மெச்சூரிட்டி சாத்தியமானது சத்தியமா ஆச்சர்யம் தான். ஜீவாவுக்கு இன்னும் மரியாதையையும் பெருமையையும் இந்தப் படம் சேர்க்கும்!''
''என்ன... நரேனை வில்லனா ஆக்கிட்டீங்க?''
''படத்துக்கு வில்லன் ரொம்ப முக்கியம். அசிஸ்டென்ட்டுகள் வரிசையாப் பெயர்களை அடுக்கிக்கிட்டேபோனாங்க. 'ஏன் நம்ம நரேனை நடிக்கவெச்சா என்ன?’னு கேட்டேன். அவங்க நம்பலை. அந்த நிமிஷமே நரேனுக்கு போன் போட்டேன். 'வில்லனாவா... புறப்பட்டு வர்றேன்’னு வந்து நின்னார். சில நிமிஷங்களில் வில்லனை ஃபிக்ஸ் பண்ணிட்டோம்!''
'' 'நந்தலாலா’வோட நடிப்பை நிறுத்திட்டீங்கபோல... ஏன்?''
''அந்தப் படத்தில் நடிச்சது காலத்தின் கட்டாயம். அதுக்கு விகடன் 'சிறந்த நடிகர்’ பட்டம் கொடுத்தது உச்சபட்ச அங்கீகாரம். இப்பவும் ரொம்ப ஆழமா, ஆத்மார்த்தமான ஸ்க்ரிப்ட் அமைஞ்சா நான் நடிக்கத் தயார்தான். அது என் ஸ்க்ரிப்ட்டாக இருந்தால் இன்னும் சந்தோஷம். ஆனா, நடிப்பது என் முதல் விருப்பம் கிடையாது!''
''எப்போதையும்விட தமிழ்ப் படங்கள் இப்ப நிறைய ரிலீஸ் ஆகுது. ஆனால், வெற்றி ரொம்ப அபூர்வமா இருக்கே... ஏன்?''
''பல சினிமாக்களில் ஆன்மா இல்லை. ஆனா, மக்க ளின் எதிர்பார்ப்பு பல படிகள் தாண்டிப்போயிருச்சு. ஹாலிவுட் படங்களின் டெக்னாலஜி கண்ணுக்கு முன்னாடி தெரியுது. புரட்டிப் போடுற மாதிரி வித்தியாசமா செய்தால் பிழைச்சிக்கலாம். எல்லாத்துக்கு நடுவிலும் ஒரு பையன் திடீர்னு ஒரு விபத்தை மையமாவெச்சு 'எங்கேயும் எப்போதும்’ எடுத்தாரே... முதல் படத்திலேயே தமிழ் சினிமாவையே 'யார் இந்தப் பையன்?’னு திரும்பிப் பார்க்கவைக்கலை? தாங்க முடியாத சோகத்தோட படத்தை முடிக்கலை? பிரபு சாலமன் 'மைனா’வை எவ்வளவு காவியமா எடுத்திருந்தார்? இப்படிப்பட்ட விஷயங்கள் இருந்தால், யார் நடிச்ச, யார் இயக்கிய படமா இருந்தாலும் ஜெயிக்கும். 25 வருஷத்துக்கு முன்னாடி வர வேண்டிய படத்தை எல்லாம் எடுத்துட்டு, 'ஓடலை’னு இப்போ யாரும் கவலைப்படக் கூடாது!''
''அப்போ புதுசா சினிமாவுக்கு வர்றவங்களுக்கு என்ன தேவைனு நினைக்கிறீங்க?''
''நிறையப் பேர் குழப்பத்தில் இருக்காங்க. 19 வயசில் பிழைக்க வந்து 32 வயசில்தான் முதல் படம் பண்ணினேன். இதுவரைக்கும் 72 தொழில் பண்ணியிருக்கேன். சினிமாவுல சாதிக்கணும்னு எல்லாருக்கும் ஆசை, கனவு இருக்கலாம். ஆனா, அதுக்கான விதை பழுது இல்லாம இருக்கணும். தன்னைத் தயார்படுத்திக்கணும். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி இரண்டு வருஷம்லேண்ட்மார்க்கில் வேலை பார்த்துக்கிட்டே சினிமாவைப் பத்தி புத்தகங்கள் படிச்சேன். தினசரித் தயாரிப்பு இல்லாம இங்கே எதுவும் நடக்காது!''
''சினிமாவைப் பத்தி இவ்வளவு பேசுறீங்க... ஆனா, உங்க படத்திலும் குறிப்பிட்ட சில காட்சிகள், பாட்டுகள் யோசிச்சுவெச்ச மாதிரியே வருதே?''
''குத்துப் பாட்டுதானே? சினிமாவில் எனக்குப் பிடிக்காததே இந்தப் பாட்டுங்கதான். பாட்டு இல்லாமப் படம் எடுக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும். தமிழ் சினிமாவில் பாட்டுக்களும், கிளைமாக்ஸில் மூச்சுவிடாம வசனம் பேசுறதும் நின்னால்தான், அதுக்கு வாழ்வு வரும். ஆனா, நான் குத்துப் பாட்டு வெச்சாலும் அதுல விரசமோ, ஆடைக் குறைப்போ இருக்காது. தொப்புளுக்கு க்ளோஸப் வைக்கிறது இல்லை. ஒரு உண்மையை ஒப்புக்கத்தான் வேணும். என்னால் குத்துப் பாட்டு இல்லாம படம் எடுக்க முடியலை. இதைச் சொல்ல நான் வெட்கப்படலை. ஆனா, அந்தப் பாட்டு என் விருப்பத்தோட சம்பந்தம் இல்லாததுனு சொல்றதுக்குத்தான் மஞ்சள் சேலை கட்டி ஆடவிடுறேன்!''

No comments:

Post a Comment