'ஒரு கோப்பைத் தேநீர்தான் வாழ்க்கை’. போகிறபோக்கில் யாரோ ஒருவர் உதிர்த்த பொன்மொழி இது. அட, அப்படி என்ன மேஜிக்தான் இருக்கிறது தேநீரில்? ஒரு ஸ்பூன் கேள்வி கலந்த ஆச்சர்யத்துடன் தேயிலையின் நதிமூலம் தேடி தேயிலை தேசமான நீலகிரிக்குப் பயணமானோம்.
தேயிலைத் தூளில் உயர் தரம், நடுத்தரம், மலிவு என்று விலை அடிப்படையில் பல ரகங்கள் இருக்கலாம். ஆனால், எல்லாத் தேயிலைகளுக்கும் மூலப்பொருள் ஒன்றேதான். தேயிலைத் தூளாக்கப்படும் முறைகளாலும் தயாரிப்பு மாற்றங்களாலும் அது வகைப்படுத்தப்படுகிறது. அதன்படி க்ரீன் டீ, சில்வர் டீ, ஓலாங் டீ, பிளாக் டீ, யெல்லோ டீ, டஸ்ட் டீ என்று பல்வேறு வெரைட்'டீ’கள் உண்டு.
டீ நல்லதா கெட்டதா; ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கலாம் என்பன போன்ற சந்தேகங்களை கோயம்புத்தூரைச் சேர்ந்த குடல் நோய்ச் சிகிச்சை நிபுணர் டாக்டர் கோகுல் விளக்குகிறார்...''தேயிலையில் 700-க்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் உள்ளன. குறிப்பாக, புரதச் சங்கிலியின் அடிப்படையான அமினோ அமிலங்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் நிறைந்து உள்ளன. இதய நோயைத் தவிர்க்கும் ஃப்ளவனாயிட்ஸ் (Flavonoids) தேநீரில் நிறைந்திருக்கிறது. அதாவது ஒரு கோப்பைத் தேநீரில், 21 சதவீதம் ஃப்ளவனாயிட்ஸ் இருக்கிறது. வாய் - பல் நலத்திலும் தேநீருக்கு முக்கியப் பங்கு உண்டு. சராசரி ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, நீரிழிவுப் பிரச்னை வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. ஓரளவுக்கு ஆக்சாலிக் அமிலம் இருப்பதால், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கோப்பை வரை டீ குடிக்கலாம். ஆனால், பால் சேர்க்காமல் குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக டஸ்ட் டீ குடித்தால், நெஞ்சு எரிச்சல், தலைச் சுற்றல், குமட்டல் வரலாம். டஸ்ட் டீயில் கலப்படம் அதிகமாக இருப்பதால், பல்லில் கறை படிவதில் ஆரம்பித்து பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன!'' என எச்சரிக்கிறார் டாக்டர் கோகுல்.
கேமிலியா சைனன்ஸிஸ் என்ற தாவரத்தின் இலைகளில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. தோட்டத்தில் இருந்து பறிக்கப்படும் தேயிலைகளைக் கொண்டு பல்வேறு டீத்தூள் வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை டஸ்ட் டீ, க்ரீன் டீ, ஓலாங் டீ, சில்வர் டிப்ஸ் டீ.
டீத்தூள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைகளைக் கொண்டு புதிய புதிய டீத்தூள் வகைளை அறிமுகம் செய்துவருகின்றன. டீ வகைகளின் தயாரிப்பு முறைகள் வெவ்வேறாக இருந்தாலும், அவற்றில் உள்ள சத்துக்களில் பெரிய அளவில் மாறுதல்கள் இல்லை. இதற்கு டஸ்ட் டீ மட்டும் விதிவிலக்கு.
''தேயிலை தயாரிக்கப்படும் விதத்தைக் கொண்டு அதன் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இது தவிர தேயிலையுடன் இஞ்சி, எலுமிச்சை, பாதாம் போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டும் டீ வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த துணைப் பொருட்களின் சத்து தேநீருடன் சேரும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
தேநீர் என்பது இயற்கை பானம். அதை வெந்நீரில் போட்டு வடிக்கட்டி குடிப்பதே சிறந்த முறை. இதில் பால் சேர்க்கும்போது அதில் உள்ள வேதிப் பொருட்கள் தேநீரில் உள்ள சத்துக்களை முறித்துவிடும். எந்த வகை டீத்தூளாக இருந்தாலும், தண்ணீரில் டீத்தூளைப் போட்டு கொதிக்கவிடக் கூடாது. மாறாக, டீத்தூளை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொண்டு அதில், நன்கு கொதிக்கவைக்கப்பட்ட வெந்நீரை ஊற்ற வேண்டும். இரண்டு - மூன்று நிமிடங்களில் டீத்தூளின் சாறு அனைத்தும் வெந்நீரில் கலந்துவிடும். அந்த நீரை அப்படியே அருந்தலாம்'' என்கிறார் தொட்டபெட்டா டீ ஃபேக்டரியின் பொது மேலாளர் வரதராஜன்.
டீயில் ஆறு விதமான பாலிபீனால்கள் உள்ளன. மேலும் காஃபின், தியோபுரோமின், தியாஃபிலின் போன்ற அல்கலாய்டுகள் உள்ளன. இவை மனித உடலுக்கு புத்துணர்வைத் தருபவை. சிகரெட் புகைப்பதால் உடலில் படியும் நிகோடின் அளவை தியோபுரோமின் குறைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
வயது முதிர்வைத் தாமதப்படுத்தும் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் இதில் அதிக அளவில் உள்ளன. இது உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்பை குறைத்து உடலினை சமச்சீராக பராமரிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. எபிகேலோ கேட்சின் என்ற பொருள் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது. பாலிபீனால்கள் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கின்றன. மேலும் மூளையில் ஆல்ஃபா அலைகளைத் தூண்டி மனதுக்கு அமைதி தருகின்றன. இவை தவிர டீயில் வைட்டமின் பி, சி, ஈ, கே; பொட்டாசியம், துத்தநாகம், மாங்கனீசு ஆகியவையும் உள்ளன. கலோரி இதில் துளியும் இல்லை. அனைத்துச் சத்துக்களும் க்ரீன் டீயில் அதிகபட்ச அளவிலும் டஸ்ட் டீயில் குறைந்தபட்ச அளவிலும் உள்ளன.
சில்வர் டிப்ஸ் டீ
டஸ்ட் டீ
க்ரீன் டீ
லெமன் டீ
ஓலாங் டீ
இஞ்சி டீ
No comments:
Post a Comment