Monday 2 April 2012

நடுங்க வைக்கும் நாப்கின்ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்



''உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும் என்று நாம் விலை கொடுத்து வாங்கும் பொருட்களே, நமக்கு ஆரோக்கிய கேட்டினை ஏற்படுத்தும் காரணியாக இருந்தால்..? அதுதான் நடக்கிறது பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் 'நாப்கின்’ விஷயத்தில்!''
- அதிர்ச்சியான தகவல் சொல்கிறார், முனைவர் முகமது ஷாபீர். 'பயோடெக்னாலஜி’ துறையில் ஆய்வு செய்து வரும் திருச்சியைச் சேர்ந்த ஷாபீர், அதன் ஒரு பகுதியாக 'நாப்கின்’ பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுச் செய்திகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
''இன்று சந்தையில் கிடைக்கும் சில நாப்கின்களை ஆய்வு செய்தபோது, பல உண்மைகள் புரிந்தது. அந்த நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப் பட்டிருக்கிறது. மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் வகைப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில் முதல் லேயர்... சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது; இரண்டாவது லேயர், மறுசுழற்சி செய்யப்பட்ட, அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்; மூன்றாவது லேயர், ஜெல் (பெட்ரோலியப் பொருளால் தயாரானது); கீழ் லேயர்... பாலிதீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்டவைப்பது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகை.
இரண்டாம் லேயரில் உள்ள அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் ரசாயனம் இருப்ப துடன், ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருளாலும் அந்த பேப்பர் பிளீச்சிங் செய்யப்படுகிறது. பெண்கள் இதைப் பயன்படுத்தும்போது, நுண்ணிய துகள்களாகப் படிந்திருக்கும் இந்த ரசாயனங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டையாக்ஸேன் ஆக மாறுபாடடைகிறது. கேன்சர் நோய்க்கான மூலக் காரணிகளில்... இந்த டையாக்ஸேனும் ஒன்று. தவிர, இத்தனை ரசாயனங்களால் ஆன இந்த நாப்கின்களைப் பயன்படுத்துவதால் பிறப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்னை, வெள்ளைப்படுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் கேன்சர் என்று பல பிரச்னைகள் வரிசை கட்ட நேரிடுகிறது.
நாப்கின் தயாரிப்புக்குப் பிறகு, அவை பேக்கிங் செய்து அனுப்பப்படுவதிலும் போதுமான சுத்தம் இருப்பதில்லை என்பதும் கவலைக்குரிய விஷயமே! அதிக விலை கொடுத்து வாங்கும் முன்னணி நிறுவன நாப்கின்களில்கூட தயாரிக்கப்படும் தேதிதான் இருக்குமே தவிர, காலாவதி நாள் என்பது குறிப்பிடப்படுவதில்லை. சில கம்பெனி தயாரிப்புகளில், 'தயாரிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தினால் நல்லது' என்று போட்டிருக்கிறார்கள்'' என்ற ஷாபீர்,
''இன்று பெண்களின் பூப்படையும் வயது 13 என்றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து மெனோபாஸ் ஏற்படும் 45 வயது வரை, மாதத்தில் மூன்று, நான்கு நாட்கள் என கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் மாதவிடாய் சமயங்களில் நாப்கின் உபயோகிக்க நேரிடுகிறது. ரசாயனக் கலவைகளால் உருவான நாப்கினைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது, அதன் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாததாகிறது'' என்று நிறுத்தினார்.
''இதற்குத் தீர்வுதான் என்ன?'' என்று அவரிடமே கேட்டோம்.
''வாங்கும் காசுக்குத் தரமான நாப்கின்களைத் தயாரித்துக் கொடுக்கும் மனசாட்சி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இருக்க வேண்டும். இதோ... இந்த நாப்கின் ஹாங்காங்கில் தயாரிக்கப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படவில்லை. பிரின்ட் எதுவும் செய்யப்படாத துணிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஜெல் என்பது, மக்காச்சோளத்தின் தண்டிலிருந்து எடுக்கப்பட்ட ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட ஜெல். மேலும் இந்த நாப்கினில்பயன்படுத்தப்பட்டுள்ள 'அனியன்ஸ் சிப்’, கிருமி நாசம் செய்யும் தன்மை கொண்ட பொருள். மேலும் இதில் இருந்து வெளியாகும் இன்ஃப்ரா ரெட் கதிர்கள் ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதுடன், அதை சமன் செய்ய வல்லது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள டிஷ்யூ பேப்பரும் தீங்கு விளைவிக்காதது.
வெளிநாட்டில் நாப்கின் என்பது பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பொருள் என்று அக்கறைப்படுவதால், அதன் தரக்கட்டுப்பாட்டு சோதனையை வலுவாக்கி இருக்கிறார்கள். இந்தியாவிலோ, விளம்பரங்களுக்குக் கொடுக்கும் முக்கியவத்துவத்தை, அதன் தர மேம்பாட்டுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுக்காதது, நம் இந்தியப் பெண்களின் ஆரோக்கியத்தில் அவர்களும் அரசும் கொண்டுள்ள அலட்சியத்தைத்தான் காட்டுகிறது'' என்று சாடிய ஷாபீர்,
''மாதவிடாய்க் காலங்களில் தரமான நாப்கின்கள் உபயோகிக்க வேண்டும். அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் நாப்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பெண்களை பல பிரச்னைகளில் இருந்தும் பாதுகாக்கும்!'' என்று வலியுறுத்தினார்.
மிகமிக கவலைத் தரக்கூடிய இந்த விஷயம் பற்றி 'கன்ஸ்யூமர் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா' அமைப்பின் டைரக்டர் ஆர்.தேசிகனிடம் கேட்டபோது, ''மலேஷியா, தைவான் போன்ற நாடுகளில் இருக்கின்ற வியாபாரிகள், தங்கள் நாடுகளில் எக்ஸ்பயரி ஆன மற்றும் பயன்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான நாப்கின், சானிட்டரி நாப்கின் இவற்றையெல்லாம் மொத்தமாக வாங்கி, 'வேஸ்ட்' என்று இந்தியாவுக்கு எக்ஸ்போர்ட் செய்வார்கள். சென்னைக்கு வரும் அவற்றை ராயபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைத்து, டூத் பிரஷ் மூலமாக சுத்தம் செய்து, புது நாப்கின்கள் போல இங்கே விற்பனை செய்வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அரசு அதிகாரிகள் அப்படி விற்கப்பட்ட தரமற்ற நாப்கின்களை ஒட்டுமொத்தமாக அழித் தார்கள்.
இப்போது, ஷாபீர் சொல்லும் தகவல்களை, உங்கள் மூலமாகக் கேட்டு நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவர் சொல்கின்ற விஷயத்தில் உண்மை இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்ல. ஆனால், இந்த ஆய்வை அவர் அறிவியல்பூர்வமாக நிரூபித்திருக்கிறாரா என்று தெரிய வேண்டும்'' என்ற தேசிகன்,
''சானிட்டரி நாப்கினுக்கு என்று வாலன்டரி தரக்கட்டுப்பாடு சர்டிபிகேட் ஐ.எஸ்-5405 என்பது தரப்படுகிறது. ஆனால், இந்த தரச்சான்றிதழோடுதான் சானிட்டரி நாப்கின் இந்தியாவில் விற்கப்பட வேண்டும் என்று சட் டம் இல்லை. தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற்று கொள்ளலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. பல கம்பெனிகள் இதை ஃபாலோ செய்வதில்லை.
இப்போது, ஷாபீர் கொடுத்திருக்கும் ஆய்வு அறிக்கையை உடனடியாக, பி.ஐ.எஸ். (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ஸ்) அமைப்பின் டைரக்டர் ஜெனரல் ஷரத் குப்தா ஐ.ஏ.எஸ்-க்கு மெயில் அனுப்பிவிடுகிறேன். கூடவே நாப்கின் விஷயம் குறித்து நாங்களும் தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கப் போகிறோம். அதை வைத்து, இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டிவிடலாம். எப்படியும் ஆறு மாதங்களில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்குவதை கட்டாயப்படுத்தும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்'' என்று சொன்னார்.
சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் சாதனாவிடம் இதுபற்றி கேட்டபோது, ''ஷாபீர் சொல்கின்ற தகவல்கள் அத்தனையுமே சரி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், சில உண்மைகள் இருக்கவே செய்கின்றன என்பதை மறுக்க முடியாது. நீங்கள் இதுபற்றி பேசுவதற்காக வருகிறேன் என்று என்னிடம் போனில் கேட்டதுமே... பிரபல கம்பெனிகள் தயாரிக்கின்ற சில நாப்கின்களை வாங்கிப் பார்த்தேன். அவற்றின் உள்ளே இருக்கின்ற பொருட்கள் பற்றியோ, எப்படி சுத்தமானதாக தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றியோ எந்த விவரங்களும் அதில் இல்லை. அதேசமயம், எத்தனை மாதத்துக்குள் பயன்படுத்த வேண்டும் என்கிற தகவல் இடம்பெற்றிருக்கிறது.
முன்பெல்லாம் நாப்கின்களுக்கு பதில் துணியை பயன்படுத்தினார்கள். ஆனால், அதில் உள்ள சுத்தம் சந்தேகத்துக்குரியதே. அப்படி பார்க்கும்போது நாப்கின்கள் நான்கு மணி நேரத்துக்கு பிறகு தூக்கி எறிந்து விட போகிறோம் என்பதால் பிரச்னை இல்லை. பொதுவாக இன்ஃபெக்ஷன் ஆவதற்கு இரண்டு நாட்கள் பிடிக்கும். அதுகூட, தொடர்ந்து ஒரே நாப்கினை பயன்படுத்தும்போதுதான் ஏற்படும். ஆனால், அப்படி யாரும் செய்வதில்லை. மற்றபடி, எந்த முறையில் சுத்திகரிக்கிறார்கள் என்பது கேள்விக்குரியதுதான். நாப்கின்களை பொறுத்தவரை ஐ.எஸ்.ஐ. முத்திரை அவசியம் என்பதை நானும் வலியுறுத்துகிறேன்'' என்று அக்கறையோடு சொன்னார் டாக்டர்.

பூஞ்சை உஷார்!
நாப்கின்களை பத்திரப்படுத்துவதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பேசும் ஷாபீர், ''நாப்கின் பாக்கெட்டுகளை அலமாரி, துணிகளுக்கு இடையில், ஹேண்ட் பேக் என்று அதிகக் காற்றோட்டமில்லாத இடத்தில்தான் பெரும்பாலும் பத்திரப்படுத்துகிறார்கள். அங்கெல்லாம் உலவும் 'கேன்டிடா’ எனப்படும் தொற்று நோய் பூஞ்சை வகைக் கிருமிகள், நாப்கின் பாக்கெட்டுக்குள் அடைகின்றன. பின், அந்த நாப்கின்களைப் பயன்படுத்தும்போது பிறப்பு உறுப்பு, ஆசனவாய்ப் பகுதிகளில் அந்தக் கிருமிகள் தொற்று நோயை உண்டாக்கலாம்'' என்று எச்சரிக்கிறார்.
ஐயோ ஐ.எஸ்.ஐ!
தேசிகனிடம் பேசிக் கொண்டிருந்தபோது வந்துவிழுந்த மற்றொரு அதிர்ச்சி... ஐ.எஸ்.ஐ. முத்திரை பற்றியது.
''பெரும்பாலான பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை தரப்படுகிறது. ஒரு தடவை ஐ.எஸ்.ஐ முத்திரையை வாங்கிய நிறுவனம், தன்னுடைய தயாரிப்பில் அதை அச்சிட்டுக் கொள்ளும். ஒவ்வொரு வருடமும் இந்த முத்திரையைப் புதுப்பிக்க வேண்டும் என்பது விதி. அப்படி வரும்போது, சம்பந்தப்பட்ட பொருளின் தரத்தை ஆராய்ந்து, சான்றிதழை புதிதாக தருவார்கள். ஆனால், ஒரு தடவை இச்சான்றிதழை வாங்கும் நிறுவனங்கள், அடுத்த தடவை புதுப்பிப்பதில்லை என்பது பெரும்பாலும் வழக்கமாக இருக்கிறது. நாமும் ஐ.எஸ்.ஐ முத்திரை இருந்தாலே... தரமானதாக இருக்கும் என்று நம்பிவிடுகிறோம்.
இப்படி சான்றிதழை புதுப்பிக்கவில்லை என்றால், அதைப் பற்றி செய்தித் தாள்களில் பி.ஐ.எஸ். மூலமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரோடு அறிவிப்பு வெளிடப்பட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை'' என்றார் தேசிகன்.
'டிரக்ஸ் அண்ட் காஸ்மெடிக்ஸ் ஆக்ட்'!
தரமற்ற நாப்கின்கள் விற்பனை பற்றி சென்னை, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.ரமேஷிடம் கேட்டபோது, ''பத்து வருடங்களாகவே உலகளவில் நாப்கின் பற்றி புகார்கள் எழும்பிக் கொண் டிருப்பதை இன்டர்நெட்டுகளில் கொட்டிக் கிடக்கும் தகவல்களில்இருந்தே தெரிந்து கொள்ள முடியும். ஐ.எஸ்.ஐ. முத்திரை மூலமாகவும்கூட, இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்ட முடியாது என்பதே என் கருத்து. ஒரு பொருள் சரியான அளவில் தயாரிக்கப்பட்டுள்ளதா... அதன் அமைப்பு சரியாக இருக்கிறதா என்பதைப் பொறுத்து வழங்கப்படுவதுதான் ஐ.எஸ்.ஐ. சான்று. நாப்கின் என்பது, 'டிரக்ஸ் அண்ட் காஸ்மெடிக்ஸ் ஆக்ட்' என்கிற சட்டத்தின் கீழ்தான் கொண்டு வரப்பட வேண்டும். நாம் பயன்படுத்தும் 'பேண்ட் எய்ட்' எல்லாம்கூட இந்த சட்டத்தின்கீழ்தான் வருகிறது. 'சருமத்துக்கு உகந்ததா?' என்பது தொடங்கி பலதரப்பட்ட சுகாதார பரிசோதனைகளுக்குப் பின்னரே, இத்தகைய பொருட்கள் 'தரமானது' என்று விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. எனவே 'சானிட்டரி நாப்கின்' என்பதை, 'டிரக்ஸ் அண்ட் காஸ்மெடிக்ஸ் ஆக்ட்' படி விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டால், இத்தனை ஆண்டுகளாக உலகளவில் சொல்லப்பட்டு வரும் அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்'' என்று யோசனை தந்தார் ரமேஷ்.

No comments:

Post a Comment