Wednesday 18 April 2012

நள்ளிரவு போன்... ராமஜெயம் சத்தியம்


ராமஜெயம் வழக்கில் கொலையாளிகள் சிக்கி விட்டார்கள்’ என்று ஒரு தரப்பும், 'இன்னும் யாரையும் பிடிக்கவே இல்லை' என்று இன்னொரு தரப்புமாக காவல் நிலையத்திலேயே பெட் கட்டிக் கொண்டிருக்​கிறார்கள். திருச்சியில் என்னதான் நடக்குது? 
கொலையாளிகள் பட்டியல் ரெடி
கே.என்.நேருவுக்கு விசுவாசமான போலீஸ் அதிகாரிகள் அதிரடியாகச் செயல்பட்டு கொலை யாளிகளை நெருங்கி விட்டதாகவும் 'இவர்கள்தான்... இன்ன காரணத்துக்காகத்தான் கொலை செய்தார்கள்' என்று, அதற்கான ஆதாரங்களையும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் வசம் ஒப்படைத்து விட்டதாகவும் ஒரு தகவல் கசிகிறது. வரும் ஏப்ரல் 22-ம் தேதி தமிழக சட்டசபையில் போலீஸ் மானியக் கோரிக்கை வர இருக்கிறது. அந்தச் சமயத்தில் கொலையாளிகளின் விவரங்கள் வெளியிடப்படும் என்கிறார்கள். ஆனால் இன்னொரு தரப்பினரோ, ''இதுவரை போலீஸார் சேகரித்த அத்தனை தகவல்களையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க முதல்வர் யோசித்து வருகிறார். அதற்கான முறையான அறிவிப்பை மானியக் கோரிக்கையின் போது வெளியிடுவார்'' என்கிறார்கள்.
ராமஜெயம் செய்த சத்தியம்!
திருச்சி டெல்டா பகுதியில், கடந்த ஐந்து வருடங்களாகவே கூலிப்படைத் தலைவர்கள் சிலரும் மர்மான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அத்தனை பேரைப் பற்றிய விவரங்களையும் சேக ரிக்கத் தொடங்கியுள்ளது, தனிப்படை போலீஸ். திருவையாறு மற்றும் மதுரையைச் சேர்ந்த முக்கியக் கூலிப்படையினரை போலீஸார் தங்கள் கிடுக்கிப் பிடியில் கொண்டு வந்ததாகவும் பேச்சு உலவுகிறது.
திருவாரூர் மாவட்ட தி.மு.க. பிரமுகர் பூண்டி கலைவாணனின் எதிரிகளில் யாரோதான் ராமஜெயத்தைப் போட்டுத்தள்ளி இருக்கலாம் என்று போலீஸாருக்கு ஆரம்பம் முதலே சந்தேகம். ஏனென்றால், ராமஜெயமும் கலைவாணனும் பாளையங்கோட்டை சிறையில் சமீபத்தில் இருந்தனர். அப்போது, இருவரும் நெருக்கமாகி விட்டனர். தனக்குள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டி ராமஜெயத்திடம் உதவி கேட்க, முழு அளவில் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தாராம் ராமஜெயம். இந்தச் சிறைச்சாலைக் காட்சி எப்படியோ கலைவாணனின் எதிரிகளுக்குப் போய்விடவே, அதுமுதல் ராமஜெயம் மீது கடுங்கோபத்தில் இருந்தார்களாம். அவர்களில் யாரோதான் கூலிப்படையை ஏவி இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
ஈகோ யுத்தமும் ஜாதி அரசியலும்!
திருச்சியைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத காவல் துறை அதிகாரிகள், ''போலீஸுக்குள் நிலவும் சாதி அரசியலும் ஈகோ யுத்தமும்தான் குற்றவாளியை நெருங்க முடியாமல் திணற வைக்கிறது. விசாரணை அதிகாரிகளில் ஒருவர், முக்குலத்தோர் மற்றும் தலித் இன ரவுடிகளை மட்டுமே தேடித்தேடி விசாரித்து வருகிறார். இன்னொரு அதிகாரியிடம் சாமி ரவி பற்றி விசாரிக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டது. 'அவர் மீது எவ்வித வழக்கும் இதுவரை இல்லை’ என்று க்ளின் இமேஜ் ரிப்போர்ட் கொடுத்து விட்டார் அந்த அதிகாரி. அதை மேல்விசாரணைக்காக வேறொரு உயர் அதிகாரியிடம் அனுப்பியபோதுதான், ஒரு கொலை விவகாரத்தில் சாமி ரவி பெயர் அடிபடுவது தெரியவந்து இருக்கிறது. மற்றொரு போலீஸ் அதிகாரி, வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ரவுடிகளை விசாரிப்பதில் சுணக்கம் காட்டுகிறார். இப்​படி ஆளுக்கொரு விதமாக நடந்துகொண்டால், எப்படி கொலை​யாளிகளைப் பிடிக்கமுடியும்'' என்று நொந்து​ கொண்டார்கள்.
நள்ளிரவு போன்...
போலீஸிடம் ராமஜெயத்தின் மகள் ஜனனி, ''மார்ச் 28-ம் தேதி இரவு 11 மணிக்கு அப்பாவுக்கு போனில் அழைப்பு வந்தது. அந்த நபருடன் பேசியதில் இருந்​தே அப்பா டென்ஷனாக இருந்தார். நீங்கள்லாம் போய்த் தூங்குங்க. இந்தப் பிரச்னையை இழுத்துக்கிட்டே போகக் கூடாது. நாளைக்கே முடிச்​சுடணும்’னு சொன்​னார்'' என்று ஒரு தகவல் தெரிவித்துள்ளார். அந்த போனில் பேசியவர் தி.மு.க.பிரபலத்தின் மகனாம்.  சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பிரமுகர் ராம​ஜெயத்துடன் சில தொழில்களில் பங்குதாரராக இருக்கிறாராம். லாபத்தைப் பங்கிடு​வதில் இரண்டு தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்து இருக்கிறது. அந்தப் பிரபலத்துக்கு வேண்டப்பட்ட மூன்றெழுத்து தாதா ராமஜெயத்தின் கொலைக்​குப் பின்னணியில் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. மேலும், ராமஜெயம் அண்டை மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் கூட பிசினஸ் செய்தவர். அதனால், வெளி மாநிலத்தவரின் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணையை ஏன் போலீஸ் துரிதப்படுத்தவில்லை என்றும் கேட்கிறார்கள்.
நேரு போட்ட சபதம்
ராமஜெயத்தின் இறுதிக் காரியங்கள் முடிந்து விட்ட நிலையில் உறவினர்களில் சிலர் அயல்நாடுகளுக்குச் சென்று விட்டனர். சிலர் இயல்பு வாழ்க்கைக்கு வந்து விட்டனர். ஆனால், நேருவை மட்டும் சமாதானப்படுத்தவே முடியவில்லையாம். பழைய கலகலப்பு  இல்லாமல் மௌனமாகவே இருக்கிறாராம் நேரு. அதோடு, 'குற்றவாளிகளைப் பிடிக்கும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்று உறுதியாகவும் இருக்கிறாராம்.

No comments:

Post a Comment