Friday, 20 April 2012

தைரியம் இருந்தா எனக்கு அனுப்பச் சொல்!

துரையில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளைப் புறக்கணித்த மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள் 17 பேருக்கு அதிரடியாக ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பி, அழகிரியின் அஸ்திவாரத்தில் கை வைத்து இருக்கிறது தி.மு.க. தலைமை!
'தங்கள் மாவட்டத்தில் கடந்த 15.4.2012 காலை, கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இளைஞர் அணிக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்தியபோது, தாங்கள் அந்தக் கூட்டத்திலும், அன்று மாலை தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட கண்டனப் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளாததோடு, தங்கள் பகுதியில் இருந்து விண்ணப்பித்து இருந்த இளைஞர்களையும் நேர்காணலில் கலந்துகொள்ளச் செய்யாதது கழகக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகவும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உரியதாகவும் தலைமைக் கழகம் கருதுகிறது. தங்களின் இச்செயலுக்கு உரிய காரணத்தையும் விளக்கத்தையும் இக்கடிதம் கண்ட ஒரு வார காலத்துக்குள் தலைமைக் கழகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். தவறினால், தலைமைக் கழகம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்’ என்று, தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், கூரியரில் அனுப்பிய நோட்டீஸ் 17-ம் தேதி, மதுரை தி.மு.க-வினர் வீட்டுக் கதவைத் தட்டி உள்ளே விழுந்தது.
முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன், பொன்முத்துராமலிங்கத்தின் மகன் சேதுராமலிங்கம், ரவீந்திரன், முபாரக் மந்திரி, ஒச்சுபாலு உள்ளிட்ட எட்டு பகுதிச் செயலாளர்கள், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் மிசா பாண்டியன், துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சின்னம்மாள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வி.கே.குருசாமி, தர்மலிங்கம் உள்ளிட்டவர்கள்தான் ஷோ-காஸ் நோட்டீஸ் வாங்கிய பாக்கியவான்கள். இதற்கிடையே, ஸ்டாலினின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாநகரச் செயலாளர் தளபதி, அழகிரிக்கு பயந்து ஏற்கெனவே தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு ஃபேக்ஸில் அனுப்பி விட்டாராம்.
கடந்த 17-ம் தேதி காலையில் அறிவாலயத்தில் ஆற்காட்டார் முன்னிலையில் கருணாநிதியிடம் வருத்தப்பட்டு பேசிய ஸ்டாலின், 'கழகத்தில் சேலமும் மதுரையும் மட்டும் தனித்தீவாக இருக்கிறது. என்னை நோகடிக்கும் விதமாகவே தொடர் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். தலைவரின் நிகழ்ச்சியை நிர்வாகிகள் புறக்கணித்தால் அவர் என்ன மனவேதனையில் இருப்பாரோ, அத்தகைய வேதனையில்தான் இப்போது நான் இருக்கிறேன். என்னைப் புறக்கணித்த அத்தனை பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.
இதையடுத்து, 'மதுரையில் என்னதான் நடந்தது?’ என்று அழகிரி வட்டத்து சீனியர்கள் சிலருக்குப் போன் போட்டு விசாரித்தாராம் டி.கே.எஸ்.இளங்கோவன். அவரிடம் பேசிய பொறுப்பாளர் ஒருவர், 'கடந்த 10 வருஷமா அண்ணன் - தம்பி சர்ச்சைக்குள்ள சிக்கிக்கிட்டு நாங்க படாதபாடு படுறோம். போனா இவருக்கு வருத்தம்; போகாவிட்டால் அவருக்குக் குத்தம். நாங்க என்னதான் பண்றது? கட்டுக்கோப்பான இயக்கத்தில் தலைவரோட பிள்ளைகளே ஆளுக்கு ஒரு நிலைப்பாட்டுல இருந்தாங்கன்னா... நாளைக்கு வீரபாண்டியார் மகன் ஒரு தப்புச் செஞ்சா தலைவரால் எப்படித் தட்டிக்கேட்க முடியும்?’ என்று வேதனையைக் கொட்டினாராம்.
நம்மிடம் பேசிய மதுரை தி.மு.க-வின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர், ''1982-ல் இருந்து அழகிரியால் மாவட்டச் செயலாளர்கள் ஆக்கப்பட்ட சிம்மக்கல் தாவூத், காவேரிமணியம், வேலுச்சாமி போன்றவர்கள் பிறகு, அவராலேயே ஓரம் கட்டப்பட்டார்கள். அந்த வரிசையில் இப்போது தளபதியும் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார். 'எனக்குப் பதவியே வேண்டாம்; பொழப்பைப் பாக்கவிடுங்க’ன்னு கடந்த நாலு மாசமாவே சொல்லிட்டு இருந்தாரு தளபதி. ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்காக, யாருகிட்டயும் கை ஏந்தாம 10 லட்ச ரூபாய் வரை செலவு செஞ்சிருக்கார். அதுதான் தப்பாப்போச்சு. கட்சி சொன்ன வேலையை செய்யலைங்கிறதுக்காக நடவடிக்கை எடுத்தா, அது சரி. ஆனா, கட்சி சொன்ன வேலையை செஞ்சதே தப்புங்கிற மாதிரி தளபதியை ராஜினாமா பண்ண வெச்சது நியாயம்தானா?'' என்று வருத்தப்​பட்டார்.
தி.மு.க. சட்டப்புள்ளி ஒருவரோ, ''ஸ்டாலின் மதுரைக்கு வந்தார். அன்று 'எங்களைப் போக வேண்டாம்’னு சொன்னது உண்மைதான். அதை மீறி நாங்கள் வந்திருந்தால், அதனால் வரும் பாதிப்புகளில் இருந்து ஸ்டாலின் எங்களைக் காப்பாற்றி இருப்பாரா? ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்கு எங்​களைப் போகவிடமால் தடுத்தது யார் என்பது உங்களுக்குத் தெரியும்​தானே... அப்படியானால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பும் தைரியம் தலைமைக்கு இருக்கிறதா?’  என்று சீறினார்.
ஷோ-காஸ் நோட்டீஸ் பற்றி அவைத்தலைவர் இசக்கி​முத்துவிடம் பேசினோம். ''விளக்கம் கேட்டிருக்காங்க. அழகிரி அண்ணன் வந்ததும் அவருகிட்ட கேட்டுட்டு முடிவெடுக்கலாம்னு இருக்கேன்'' என்றார்.
பொருளாளர் மிசா பாண்டி​யனிடம் கேட்டதற்கு, ''வழக்கமா பொதுச்செயலாளர்தான் நோட்டீஸ் அனுப்​புவார். ஆனா, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்​கோவன் அனுப்பி இருக்கார். இது உண்மையான நோட்டீஸ்தானா இல்லை, யாராச்சும் டுபாக்கூரா அனுப்பி​ இருக்​காங்களான்னு செக் பண்ணணும்'' என்று கலகலப்பாக ஆரம்பித்தவர், ''இளைஞர் அணி நேர்காணல் கூட்டங்களுக்கு கட்சிப் பொறுப்பாளர்கள் போகணும்னு கட்டாயம் இல்லை. அதனால் போகலை. கண்டனக் கூட்டத்துக்கு நாங்க போகலைன்னு யாரு சொன்னது? அந்தக் கூட்டமும் முறையாவா நடந்துச்சு? கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளரான அழகிரி அண்ணனின் பெயரை போஸ்டர்களில் போடலை. அவருக்கே இந்த நிலை என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்னு யோசிச்சோம். அதனால, மேடைக்குப் போகாம இருந்துட்டோம். மீறி மேடைக்குப் போயிருந்தாலும் ஏதாவது குழப்பத்தை விளைவித்து, 'இவங்களாலதான் நடந்துச்சு’னு எங்க மேல பழிபோடவும் தயங்க மாட்டாங்க. அப்படித்தானே பரமக்குடியில ரித்தீஷ் மேல பழி சுமத்தினாங்க?
துணைச் செயலாளர் சின்னம்மாளின் சொந்த அண்ணன் 13-ம் தேதி கடலூரில் விபத்தில் இறந்து விட்டார். துக்கத்தில் இருந்த அவருக்கும் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். எங்களுக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரி அண்ணன் இருக்கிறார். 20-ம் தேதி அவர் மதுரை வந்ததும், இதற்கு என்ன பதில் கொடுக்கிறதுன்னு கேட்டு முடிவெடுப்போம். மதுரை நிர்வாகிகள் அனைவரையும் தலைமைக் கழகம் சென்னைக்கு அழைத்து, எங்கள் மீது கூறப்பட்ட அவதூறுக் குற்றச்சாட்டுக்கு, எங்களிடமும் விளக்கம் கேட்கணும். நாங்கள் 17 பேரும் பொறுப்பில் இருந்து விலகத் தயார். ஆனால், எங்களுக்கு பதிலாக வரும் 17 பேருக்காவது இனிமேல் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற விதியை கழகத் தலைமை வகுத்துக் கொடுக்க வேண்டும்'' என்றார்.
''கட்சிப் பொறுப்பாளர்களை ஸ்டாலின் கூட்டத்துக்கு போக​விடாமல் நீங்கள்தான் கஸ்டடியில் வைத்திருந் ததாக சொல்கிறார்களே'' என்று கேட்டதற்கு, ''கஸ்ட​டின்னு சொன் னாங்களா... அடைச்சி ​வெச்​சிருந்தேன்னு சொன்​னாங்களா? என்னோட காம்ப்ளக்ஸ் வாசல்ல நான் இருக்கும்போது கட்சிக்​காரங்க என்னைப் பார்க்க வர்றாங்க. உங்களைப் போலநண்பர்​​களும் வர்றாங்க. அவங்கள உட்கார​வெச்சுப் பேசிக்கிட்டு இருந்தா, அடைச்சி​வெச்சிருக்கேன்னு சொல்றதாக்கும்'' என்று சிரித்தார் மிசா பாண்டியன்.
அழகிரி படம் இல்லாமல் போஸ்டர் அடித்தது குறித்து இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராம் தரப்பிடம் பேசினோம். 'உங்க படத்தை போஸ்டர்ல போடலாமா?’ என்று அழகிரியிடம் ஜெயராம் கேட்டதாகவும்,  'எம் பேரைப் போட்டா கண்டிச்சு அறிக்கை விடுவேன்’ என்று அழகிரி சொல்லி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
ஷோ-காஸ் நோட்டீஸ் விவகாரத்தைக் கேள்விப்பட்ட அழகிரி, 'உங்களுக்கு எதுக்கு அனுப்புறாங்க? தைரியம் இருந்தா எனக்கு அனுப்பட்டும்’ என்று சீறியதாகச் சொல்கிறார்கள். ''நோட்டீஸுக்கு பதில் கொடுக்க வேண்டாம். எல்லாரும் ராஜினாமா பண்ணிருங் கன்னுதான் அண்ணன் சொல்லப்போறார்'' என்று சொல்லும் அழகிரி விசுவாசிகள், அழகிரியின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
இதனிடையே, கடந்த 16-ம் தேதி மதுரையில் ஸ்டாலினை சந்தித்த தென்மாவட்டச் செயலாளர்கள் சிலர், 'இனிமே நீங்க அடிக்கடி மதுரைப் பக்கம் வரணும். எங்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தால், உங்கள் பின்னால் நிற்கத் தயார்’ என்று தெம்பு கொடுத்தார்களாம். 'எனக்கென்ன தயக்கம்? நீங்கள் அழைத்தால் கட்டாயம் வருவேன்’ என்று சொன்ன ஸ்டாலின், 'மே தினப் பொதுக் கூட்டத்தைக்கூட மதுரையில் நடத்தலாம்னு யோசிக்கிறேன்’ என்று சொன்னாராம்.
மதுரை மண்ணில் இன்னும் என்னென்ன களேபரங்கள் அரங்கேறப் போகின்றனவோ..?
டெயில் பீஸ்: 19-ம் தேதி இரவு ஷோ-காஸ் நோட்டீஸ் பெற்ற 17 பேரும் மதுரையில் ஹோட்டல் ஒன்றில் ரகசியமாகக் கூடிப் பேசினார்களாம். 'போஸ்டர்களில் அண்ணன் அழகிரியின் பெயர் போடாதது குறித்து மாநகரச் செயலாளர் தளபதியிடம் விளக்கம் கேட்டோம். அவர் சரியான பதிலை சொல்லாததால், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை’ என ஒரே மாதிரியானப் பதிலை அழகிரியிடம் காட்டிவிட்டு அனுப்ப அனைவரும் முடிவு செய்திருக் கிறார்களாம்.

No comments:

Post a Comment