Tuesday 24 April 2012

கோமாவில் தி.மு.க?-vikatan


கோமா நிலையில் தி.மு.க. இருக்கிறது என்று சொன்னால், கருணாநிதி கோபிப்பார். ஆனால், யதார்த்தம் அதுதான். அதை அவர் புரிந்துகொள்ளாதது மாதிரி நடிப்பது அதைவிட ஆபத்தானது.
அந்தக் கட்சியின் இன்றைய உண்மை நிலைமையை அறிய கோபாலபுரம் தொடங்கி... சாலையோரத் தொண்டனின் மனப்புரம் வரை வலம் வருவோம்!
தலைமையின் சுணக்கம்!
ஆக்டிவ் ஆன மனிதர்களுக்கு உதாரணமாக ஒரு காலத்தில் சொல்லப்பட்டவர் கருணாநிதி. அவரே இன்று சுணக்கம் அடைந்த தலைமைக்கு உதாரணமாகவும் ஆகிவிட்டார். அறிக்கைகள் விடுவதன் மூலமாகவும் பதில்கள் சொல்வதன் மூலமாகவும் மட்டுமே கட்சியை வளர்த்துவிடலாம் என்று கருணாநிதி இப்போது நினைக்கிறார். ஊர் ஊராகச் சென்று பொதுமக்களைச் சந்திப்பதும் தலைமைக் கழகத்தில் உட்கார்ந்து தொண்டர்கள் மனநிலையை அறிந்துகொள்வதும்தான் கருணாநிதி கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவின. அவை காலப்போக்கில் குறைந்தன. இப்போது அவைமுற்றிலுமாக நின்றுபோய்விட்டன. கருணாநிதியைச் சந்தித்து தங்களுடைய எண்ணங்களைச் சொல்வதற்கான வாய்ப்பு இல்லை என்று பலரும் வருத்தப் படும் அளவுக்கு அவரும் தனித்துப் போய் விட்டார். வயதும் உடல்நிலையும்தான் காரணம் என்றும் அதிகப்படியான சந்திப்புகள் கிருமித் தொற்றினை உருவாக்கலாம் என்பதால்தான் இந்த நிலைமை என்றும் கூறுகிறார்கள். உடல் ஆரோக்கியம் முக்கியம்தான். ஆனால், கட்சியின் ஆரோக்கியத்தை யார் பார்ப்பது?
  இரண்டு சண்டைக் கோழிகள்!
முற்றுப் பெறாத மெகா யுத்தமாகத் தொடர்கிறது அழகிரி - ஸ்டாலின் மோதல். இந்தக் கட்டுரை எழுதும்போது மதுரையில் இருக்கிறார் ஸ்டாலின். அவர் அங்கே வருவது தெரிந்து ஊரைக் காலி செய்துவிட்டார் அழகிரி. தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் ஸ்டாலினைச் சென்று சந்திக்கக் கூடாது என்கிற அளவுக்கு மறைமுக உத்தரவுகள். ''நாட்டில் எத்தனையோ ஊர் கள் இருக்க, மதுரையில் வந்து ஸ்டாலின் ஏன் பேச வேண்டும்?'' என்று அழகிரி ஆட்கள் கேட்கிறார்கள். ''மதுரை என்ன அவருக்குப்பட்டா போட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறது?'' என்று ஸ்டாலின் ஆட்கள் கொதிக்கிறார்கள். எப்போது முடியுமோ என்று தெரியாமல் சிந்துபாத் கதை மாதிரி போய்க்கொண்டே இருக்கிறது இந்த உள்குத்து அரசியல்.
மௌனித்த இருவர்!  
தயாநிதி மாறனும் கனிமொழியும் 'ஆயுதங்களை மௌனிக்கச் செய்துவிட்டார்கள்’!
தயாநிதிக்கு இப்போது ஒரே தலைவலி 2ஜி! சி.பி.ஐ., உச்ச நீதிமன்றம், பிரசாந்த் பூஷன், சுப்பிரமணியன் சுவாமி, சிவசங்கரன் ஆகிய ஐந்து முகங்களும் எப்போதும் அவருக்குள் வளைய வருகின்றன. 'புலி வருது... புலி வருது’ கதையாக இருக்கும் இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து நீதிபதிகளின் கண்டனத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற கவலையில் கோர்ட் லிஸ்ட்டைக் கவனிப்பதிலேயே தயாநிதியின் ஆர்வம் இருக்கிறது.
கனிமொழியைப் பொறுத்தவரை தற்காலிகமாகத் தன்னுடைய அரசியல் ஆர்வங்களைத் தள்ளிவைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். தீர்ப்பு வரும் வரை அமைதியாகக் காத்திருப்பது அவரது திட்டம். 'கட்சியில் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பதவி கனிமொழிக்கு வேண்டும்’ என்று அவரது அம்மா கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு கருணாநிதியும் சம்மதித்து நின்ற நிலையில்,  ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டதாகவும் தகவல். இப்படி குழப்பத்திலேயே தத்தளிக்கிறது கனிமொழி யின் அரசியல் வாழ்க்கை!
சாந்தமானது குடும்பம்!  
கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஊர்வல மேடையை ஆக்கிரமித்து உட்கார்ந்து இருந்த கருணாநிதி குடும்பத்தினர் யாரும் இப்போது ஆக்டிவ் அரசியலில் இல்லை. அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். ஆளும் கட்சியாக இருந்தால் மட்டும், அதிகார ருசி பார்க்க வருவதும், ஆட்சியை இழந்ததும் தமிழ்நாட்டையே 'மறந்துவிட்டு’ சொந்த வேலைக்குச் சென்றுவிடுவதும் நல்லாவா இருக்கிறது?! 'நான் மட்டும் அல்ல; என்னுடைய குடும்பமே இந்த இயக்கத்துக்காக உழைத்தது. உழைக்கிறது, உழைக்கும்!’ என்று பொதுக்கூட்ட மேடைகளில் சொல்வார் கருணாநிதி. அப்படிப்பட்ட வர்கள் இப்போது எங்கே போனார்கள்? என்ன ஆனார் கள்? அவர்களுக்கும் தெரிகிறது... ஆட்சியில் இருந்தால் தான் அறிவாலயம் ஆயிரம் பொன்!
இரண்டாம் நிலை இருட்டடிப்பு!
நொந்தும் வெந்தும் போய் இருக்கிறார்கள் தி.மு.க-வின் இரண்டாம் நிலைத் தலைவர்கள். பேராசிரியர் அன்பழகன் கருணாநிதிக்கு எப்போதுமே ஊறுகாய்தான். அவ்வப்போது தொட்டுக்கொள்ள மட்டும். மரியாதை இல்லாவிட்டாலும், இந்தப் பதவியைப் பறிக்காமல் இருந்தால் போதும் என்பதுதான் அன்பழகனின் பிரார்த்தனை. சில ஆண்டுகளுக்கு முன் அதற்கும் சிக்கல் வந்தபோது, எந்த ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று பேசிவந்தாரோ, அவர்தான் தன்னுடைய தலைவலி என்று நினைக்க ஆரம்பித்தார். 'ஸ்டாலினுக்கு இன்னும் காலம் இருக்கிறது. அவர் தனது தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று பொதுக்குழுவில் சொல்ல ஆரம்பித்தார். இந்த அவமானம் வேண்டாம் என்றுதான் ஆற்காடு வீராசாமி ஒதுங்கினார். 30 ஆண்டுகளாக கருணாநிதியை நோக்கி வந்த விமர்சனக் கணைகள் அத்தனையையும் தனது நெஞ்சில் தாங்கிக்கொண்டு பதிலடி கொடுத் தவர் ஆற்காட்டார். இதற்கு மேலும் குத்துப்பட அவருடைய நெஞ்சில் இடம் இல்லை. 'சேலத்துச் சிங்கம்’ என்று வர்ணிக் கப்பட்டாலும் வீரபாண்டி ஆறுமுகம் தினமும் ஸ்டாலின் ஆட்களால் சீண்டிவிடப்படுகிறார். அண்ணா காலத்து ஆட்கள், தலைவரின் இளமைக் காலத்து நண்பர்கள், 70-ல் ஜெயித்தவர், 80-ல் நம்மோடு நின்றவர், 93-ல் போகாதவர் என்று 'வரலாறு’ சொல்லும் ஆட்கள் யாருமே தேவையில்லை என்ற நிலை இப்போது வந்துவிட்டது. 'உங்களது முகத்தைப் பார்த் தால் கருணாநிதிக்குத் தெரியாதா... அதுவே முக்கியமான தகுதி’ என்று  சொல்லப்படும் காலம் கட்சிக்குள் வந்துவிட்டது என்பதை இரண்டாம் நிலைத் தலைவர்களில் பலரும் அனுபவபூர்வமாக உணர ஆரம்பித்து விட்டார்கள்!
மாஜி மந்திரிகள்!  
'மாஜி கடவுளர்கள்’ என்று அண்ணா ஒரு புத்தகம் எழுதினார். கால ஓட்டத்தில் காணாமல் போன தெய்வங்களைப் பட்டியல் போடும் அந்தப் புத்தகம். தி.மு.க. ஆட்சியில் பளபளப்பாகச் சுற்றிச் சுழன்று வந்த பல்வேறு அமைச்சர் பெருமக்கள் இப்போது காணாமல் போய்விட்டார்கள். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், முன்னாள் அமைச்சர்களில் சிலர் நில அபகரிப்பு வழக்குகளில் கைதானார்கள்; பலரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்தினார்கள்; வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. இந்த வழக்கு களை விசாரிப்பதற்காகத் தனி நீதிமன்றம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. மாஜி மந்திரிகள் அனைவரும் இப்போது உள்காய்ச்சலில் இருக்கிறார்கள். எனவே, கூட்டம் போடுவதில் அக்கறை இல்லாமல், ஆர்ப்பாட்டம் நடத்துவதில் ஆர்வம் இல்லாமல், தலைவரோ தளபதியோ நம்முடைய ஊருக்கு வராமல் இருந்தாலே நல்லது என்று நினைத்து நித்திரையில் இருப்பதுபோல நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் பலரும்!
சட்டமன்ற சைலன்ட்!  
பிரதான எதிர்க் கட்சி அந்தஸ்துகூட இல்லாமல் அதற்கும் அடுத்த இடத்துக்கு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தள்ளப்பட்டது தி.மு.க. அங்கும் அவர்களது செயல்பாடுகள் மந்த கதியாகவே இருக்கின்றன. கருணாநிதி ஆதாரங்களுடன் சபைக்குள் வந்தால் எந்த மந்திரியும் பதில் சொல்ல முடியாது என்ற நிலைதான் பல காலம் இருந்தது. ஆனால், இப்போது, பதுங்கியபடி உள்ளே வருகிறார் கள். தயங்கியபடி பேசுகிறார்கள். சபைக் குள் வந்து நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வேண்டிய கருணாநிதி, ''வீல்சேர் வருவதற்கு வழி இல்லை, என்னால் எப்படி உள்ளே வர முடியும்?'' என்ற கேள்வியை மட்டும் சபைக்கு வெளியில் கேட்டுவிட்டு, கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டுக் கிளம்பினார். 'தி.மு.க. உறுப்பினர்களுக்கு ஒரே இடத்தில் இடம் ஒதுக்கவில்லை. பாதுகாப்பு தேவை!’ என்று சொல்லி ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய ஸ்டாலின் தலைமையிலான உறுப்பினர்கள், இப்போது 'எங்களைப் பேச விட மாட்டேன் என்கிறார்கள்’ என்று சொல்லி ஒட்டுமொத்தமாக ஒரு வார காலத்துக்குச் சபையைப் புறக்கணிக்கிறார்கள். 'வராமல் இருந்தால் நல்லதாப் போச்சு’ என்று ஆளும்கட்சி சந்தோஷப்பட மட்டுமே இந்த முடிவுகள் பயன்படுகின்றன.
கொள்கைக் குழப்பங்கள்!  
தேர்தல் தோல்விக்குப் பிறகு கருணாநிதியால் நிதானமாகப் பல முடிவுகளை எடுக்க முடியவில்லை. அதில் முக்கியமானது கூடங்குளம். மக்கள் சுமார் நான்கு மாத காலமாக மாற்றுச் சிந்தனை இல்லாமல் போராடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது எல்லாம் எந்தக் கருத்தும் சொல்லா மல் மௌன குருவாக இருந்த கருணாநிதி, கூடங்குளம் அணு உலையை ஆதரித்து அறிக்கைவிட்டு அதனைத் திறக்கும் முடிவுக்கு ஜெயலலிதா வந்த பிறகு, 'கூடங்குளம் அணு உலையை ஏன் திறக்காமல் இருக்கிறீர்கள்’ என்று திடீரெனக் கேட்க ஆரம்பித்தார். கூடங்குளம் திறக்கப்பட வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் நிலைப்பாடு என்றால், அதை நான்கு மாதங்களாக அவர் ஏன் சொல்லவில்லை?
அதேபோலத்தான் இலங்கைப் பிரச்னையிலும். இலங்கை செல்லும் இந்திய எம்.பி-க்கள் குழுவில் தி.மு.க. செல்லும் என்று சொல்லப்பட்டது. பிறகு செல்லாது என்று கருணாநிதி சொன்னார். செல்லும் என்று முடிவு எடுப்பதும் செல்லாது என்று மாற்றிக்கொள்வதும் தவறு அல்ல. ஆனால், 'செல்லும் என்று நான் சொல்லவே இல்லை’ என்பதுதான் தவறானது. தி.மு.க. சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் செல்கிறார் என்ற தகவலை 8.4.2012 தேதியிட்ட 'முரசொலி’ மகிழ்ச்சியுடன் அறிவித்தது. இது எல்லாம் யாருக்குத் தெரியும் என்ற தைரியத்தில், 'நாங்கள்தான் திட்டமிடவே இல்லையே’ என்று மழுப்புகிறார் கருணா நிதி. முடிவுகள் எடுப்பதில் குழப்பங்கள் தொடர்கின்றன!
கலக்கத்தில் கழகத் தொண்டர்கள்!
இதில் பாவம் தொண்டன்தான். வென்றாலும் தோற்றாலும் எப்போதும் கம்பீரம் குறையாதவன் தி.மு.க. தொண்டன். ஆளும் கட்சியாக இருக்கும்போதுகூட உண்மையான தொண்டனுக்கு கொஞ்சம் சோர்வு தட்டுப்படும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் கூட்டம் நடத்துவதும் கும்பல் சேர்ப்பதுமான கொண்டாட்டமாக இருக்கும். ஆனால், இம்முறை அந்தத் துடிப்பும் துள்ளலும் மிஸ்ஸிங். ஏனென்றால், இப்போது கரை வேட்டித் தொண்டர்கள் காணாமல்போய், வெள்ளை பேன்ட், கறுப்பு பேன்ட் ஆட்கள் வந்துவிட்டார்கள். இவர்கள் வைத்திருக்கும் கார்கள் அனைத்தும் மிதக்கும் அபார்ட்மென்ட்கள் மாதிரி இருக்கின்றன. கட்சிக் கொடி கட்டி அரசு அலுவகங்களை முற்றுகை இட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக வலம் வந்தார்கள். இப்போது எதிர்க் கட்சி ஆனது 'கௌரவக் குறைச்ச’லாக இருக்கிறது. பாலியஸ்டர் மற்றும் காட்டன் வேஷ்டிகளில் வரும் அப்பாவித் தொண்டர் கள், தலைவர் பேச்சைக் கேட்பதும் 'முரசொலி’ படிப்பதும் மட்டுமே போதுமானது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். மற்றவர்கள், தங்களது எதிர்காலத்தை நினைத்து கலக்கத்தில் இருக்கிறார்கள். 'நாங்களும் எங்கள் பிழைப்பைப் பார்க்க வேண்டாமா?’ என்று இவர்கள் சொல் கிறார்கள்.
இப்படிச் சகலரும் தங்கள் பிழைப்பைப் பார்க்கப் போய்விட்டால், கட்சியை யார் தான் பார்ப்பது?

No comments:

Post a Comment