Wednesday 18 April 2012

சமந்தா என் டார்லிங்!-கௌதம் மேனன்


ப்போது சந்தித்தாலும் கௌதமிடம் கேட்க மட்டும் ஏராளமான கேள்விகள் இருக்கும். எதிர்பார்க்காத ஆங்கிளில் பேட்டிக்குத் தலைப்பும் சிக்கும்! இதோ இப்போதும்...

‘‘ ‘நீதானே என் பொன்வசந்தம்’ மீண்டும் கௌதம் காதல் ஸ்பெஷலா?’’‘‘சிம்பிள் காதல் கதை. இந்தக் காதலுக்குக் காதலர்களே எதிரி. அவங்க ஒண்ணு சேருவாங்களா இல்லையா? அதான் படம். ரொம்ப சந்தோஷமான படம். ‘இப்படியான படம்தான் நாங்க நிறையப் பார்த்திருக்கோமே’னு நீங்க சொன்னா, இந்தப் படத்தையும் மிஸ் பண்ணாமப் பாருங்கனு சொல்வேன். காரணம், ராஜா சார் மியூஸிக். படத்தில் அதுதான் ஹைலைட்!’’

‘‘இசையமைப்பாளர் யார் என்பதையே சஸ்பென்ஸா வெச்சிருக்கும் அளவுக்கு இளையராஜா கௌதம் கூட்டணியில் அப்படி என்ன ஸ்பெஷல்?’’
‘‘ஒவ்வொரு படம் தொடங்கும்போதும் ‘இதுக்கு ராஜா சார்தான் மியூஸிக்’னு யோசிப்பேன். ஆனா, அமையாது. இந்தப் படத்துக்கு கண்டிப்பா அவர்கிட்ட கேட்கலாம்னு தைரியம் வந்துச்சு. அவரைச் சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கும்போதுகூட என்ன விஷயம் பேசப்போறேன்னு சொல்லவே இல்லை. ‘நான் ஒரு படம் பண்றேன். ஏற்கெனவே 50 சதவிகிதம் ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. இதுதான் கதை. இந்த மாதிரி மியூஸிக் வேணும்’னு சொல்லி, ஷூட் பண்ணின போர்ஷனைப் போட்டுக் காட்டினேன். எல்லாத்தையும் உள்வாங்கிட்டு பிரமாதமான டியூன்கள் தந்தார். ஒரே நாள்தான்... எனக்குத் திக்குமுக்காடிடுச்சு! ‘சார்... என்னால இவ்வளவு விஷயங்களையும் மனசுல ஏத்திக்க முடியலை. மீதியை நாளைக்கு வெச்சுக்கலாம்’னு சொன்னேன். ‘ஒரு விஷயம் நல்லா நடக்கும்போது பிரேக் பண்ணாதீங்க’ன்னார். ‘சார்... நீங்க கொட்றீங்க. என்னால  முடியலை’னு சொல்லிச் சமாளிச்சேன். ‘இளையராஜா ஒரு பாடலை உருவாக்கும்போது, நாம கூட இருக்கிறதே பெரிய கொடுப்பினை’னு என்கிட்ட ஒரு ஸ்டார் நடிகர் சொன்னார். அது நூத்துக்கு நூறு உண்மை!

 ‘உங்க மெலடி எனக்கு வேணும். புது சவுண்ட், புது ட்ரீட்மென்ட்ல தரணும்’னு போய் நின்னேன். எல்லா பாட்டுக்கும் ஹார்மோனியத்தில் டியூன் போட்டு அதுக்கு நா.முத்துக்குமாரை வரிகள் எழுத வைச்சு, எந்த இசைக்கருவிகளின் ஒலிக்கோர்ப்பும் இல்லாம பாடவெச்சு பதிவு பண்ணோம். அந்தக் குரலை மட்டும் லண்டன் எடுத்துட்டுப் போய் ஹங்கேரியில் இருந்து வரவைச்ச சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா மூலம் பதிவு பண்ணோம். படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். ஒரு பாட்டுக்கு இரண்டு நாள்னு கிட்டத்தட்ட 16 நாள்ல மொத்த ஒலிப்பதிவும் முடிஞ்சிருச்சு. மூணு வாரத்துல எல்லா பாடல்களும் ஷூட்டிங்கிற்கு ரெடி. இதுவும் ஒரு புது அனுபவம்தான்!’’

‘‘தாமரைதான் உங்க ஆஸ்தான கவிஞர். இதில் நா.முத்துகுமார். ஏன் இந்த மாற்றம்?’’‘‘முத்துக்குமார் கூட சேர்ந்து வேலை பார்க்கணும்னு ரொம்ப நாளாவே பேசிட்டு இருந்தோம்.  அது இப்போதான் சாத்தியமாகி இருக்கு. இதை தாமரைகிட்ட பேசிட்டுதான் முடிவு பண்னேன். ஆனா, என் அடுத்தடுத்த படங்களில் தாமரை கண்டிப்பா இருப்பாங்க!’’

‘‘தமிழ்ல ஜீவா, தெலுங்குல நானி, இந்தியில ஆதித்யா... இந்தப் படத்தோட மூணு ஹீரோக்கள்ல யார் பெஸ்ட்?’’
‘‘அப்படிலாம் பிரிச்சு சொல்ல முடியாத அளவுக்கு மூணு பேரும் வித்தியாசம் காட்டி அசத்தி இருக்காங்க. ஒரே லொகேஷன்தான். மூணு பேரையும் ஷூட் பண்ண பிறகுதான் கேமரா அடுத்த லொகேஷனுக்குப் போகும். ஜீவா, நானி, ஆதித்யா மூணு பேர்கிட்டயும் ஒரே மாதிரிதான் காட்சியை விளக்குவேன். எந்த ஈகோவும் இல்லாம பிரமாதப்படுத்தி இருக்காங்க. ஆனா, இவங்க மூணு பேரையும் சமாளிச்ச சமந்தா... சான்ஸே இல்லை. சமந்தாவின் முதல் ரசிகன் நான்தாங்க!’’

‘‘ஆஹா... சமீரா போய் இப்ப சமந்தாவா?’’‘‘நான் சும்மா விளையாட்டுக்குச் சொல்லலை. தமிழ், தெலுங்கு, இந்தினு மூணு மொழிகள்லேயும் ஒரே நேரத்தில் வேற வேற ஹீரோக்களுடன் ரொமான்ஸ் பண்ணி நடிக்கணும். அந்தப் பொறுப்பை ரொம்ப அழகா தூக்கிச் சுமந்தாங்க சமந்தா. ரொம்ப ப்ரில்லியன்ட். என் ஒப்பீனியன்ல இப்போ ஃபீல்டுல இருக்குற ஹீரோயின்களில் சமந்தாதான் டாப். இப்படி அவங்களைப் பத்தி நான் புகழ்ந்து பேசுவதால், ‘சமந்தாவுக்கும் கௌதமுக்கும் சம்திங் சம்திங்’னு கிசுகிசு கிளம்பும். ஆனா, அதுக்குப் பயந்துக்கிட்டு நான் சமந்தா திறமையைப் பத்தி வெளியே சொல்லாம இருந்தா, அது நான் அவங்களுக்குச் செய்ற துரோகமாயிடும். கிசுகிசு வந்தாலும் வரலைன்னாலும் சமந்தா என் டார்லிங்தான்! இப்ப நான் என் வீட்ல உட்கார்ந்துதான் உங்க கூட ரிலாக்ஸா பேசிட்டு இருக்கேன். அப்படி எங்களுக்குள்ள ஏதாவது இருந்தா வீட்ல இப்படி உட்கார முடியுமா? என்னைப் பத்தி என் வீட்ல உள்ளவங்களுக்குத் தெரியும். ஏதாவது வம்பா செய்தி வந்தா படிச்சிட்டு சிரிச்சுப்பேன். அவ்வளவுதான்.  சுருக்கமா சொன்னா, சமீரா, சமந்தா ரெண்டு பேரும் எனக்கு வேண்டியவங்க. என் ஃபேமிலிக்கும் அவங்களைத் தெரியும்!’’

‘‘ ‘மின்னலே’ இந்தி ரீமேக், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ இந்தி ரீமேக்... எதுவும் எதிர்பார்த்த அளவுக்குப் போகலை. ஆனாலும், ஏன் இந்தியில் விடாமப் போராடிக்கிட்டு இருக்கீங்க?’’
‘‘என் படங்கள் ஓடலை. அவ்வளவுதான்! ‘மின்னலே’ ரீமேக்ல ‘வெயிட்டைக் குறைங்க’னு மாதவன்கிட்ட சொன்னேன். அவர் கேட்கலை. அவரைப் பார்க்கவும் யாரும் தியேட்டருக்கு வரலை. ‘ஏக் தீவானா தா’வுக்கு ஓப்பனிங்கே கிடைக்கலை. ஹீரோ ப்ரதீக் படத்துக்குப் பெரிய மைனஸ். ஏற்கெனவே அந்தப் பையனுக்கு நாலு படம் ஃப்ளாப் ஆகியிருக்கு. நெகட்டிவ் இமேஜ். நானும் அங்க பெரிய டைரக்டர் கிடையாது. ரஹ்மான் மியூஸிக்குக்காக மட்டும் 10, 15 பேர் தியேட்டருக்கு வந்திருந்தாங்க. எந்தப் பத்திரிகையும் நல்ல ரெவ்யூ தரலை. ‘அப்பா, அம்மா பேச்சைக் கேட்கிற பொண்ணு மும்பையில் எங்கே இருக்காங்க’னு எல்லாம் சில்லியா ரெவ்யூ எழுதினாங்க. அதே படத்தை ரன்பீர் கபூர் பண்ணியிருந்தா, சாலிடா ரெண்டு வாரம் ஓடியிருக்கும். என்னதான் சரக்கு வெச்சிருந்தாலும், அதை விளம்பரப்படுத்த ஒரு ஹீரோ தேவை!’’

‘‘ஓ.கே. விஜய்யை வைத்து நீங்க இயக்க உள்ளதா விளம்பரப்படுத்தின ‘யோஹன் அத்யாயம் 1’ என்னாச்சு?’’ 
‘‘நீங்க சொல்ற தொனி, ஏதோ போன நூற்றாண்டுல விளம்பரப்படுத்தின மாதிரி இருக்கு. ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு. முருகதாஸ் கூட விஜய் ‘துப்பாக்கி’ முடிச்சிட்டா, ‘யோஹன்’ ஆரம்பிச்சிடலாம். இந்தப் படத்துல விஜய் மட்டும்தான் தமிழ் முகம். ஹீரோயின் ஒரு இந்தியனா இருப்பாங்க. மத்த நடிகர், நடிகை எல்லாருமே வெளிநாட்டினர்தான். தமிழ் படம்தான். ஆனா, இங்கிலீஷ் சப்-டைட்டிலோட உலகம் முழுக்க எங்கேயும் வெளியிடும் தரம் இருக்கும். ரஹ்மான் இசை. ‘யோஹன்’ங்கிற இந்த கேரக்டரை எஸ்டாபிளிஷ் பண்ணிட்டா ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி அத்யாயம் 1, 2னு அடுத்தடுத்து பண்ணலாம்!’’

‘‘டி.வி சீரியல் இயக்கப்போறீங்கன்னு சொன்னீங்க. அந்த அத்யாயம் என்னாச்சு?’’‘‘ஒரு மாசத்துல ஆரம்பிக்கிறோம். சன் டிவியில் மெயின் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகப்போகுது. ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக். பார்த்திபன் ஹீரோ. இது டி.வியில் புது முயற்சி. ஆக்ஷன், எமோஷன்னு எல்லாம் இருக்கும்!’’

‘‘ரஜினிக்காக ஆளாளுக்கு ஸ்கிரிப்ட் பண்றாங்க. உங்க பங்குக்கு?’’‘‘பிளான் இருக்கு. கோச்சடையான், ராணானு அவர் பிஸியா இருக்கார். கே.வி.ஆனந்த்கிட்டயும் கதை கேட்ருக்கார். ரஜினி, கமல் எப்பக் கூப்பிட்டாலும் படம் பண்ண ஸ்கிரிப்ட் தயாரா இருக்கு. எனக்கு அஜீத்கூடவும் வொர்க் பண்ண ஆசை. அஜீத்தைப் பத்தி நான் ஏதோ தப்பா சொன்னதா சோசியல் மீடியாக்களில் வதந்தி. ‘டேய் நீயா சொன்னே?’னு அவர் ரசிகர்கள் ஸ்டேட்டஸ் போட்டு மிரட்டுறாங்க. ஆனா, சமீபத்தில் அஜீத்தைச் சந்திச்சப்ப, நான் என்ன பேசினேன்னு விவரமா சொன்னேன். ‘விடுங்க கௌதம்... அதைப் பத்திலாம் நான் கண்டுக்கலை’ன்னார். அவர்கூட கண்டிப்பா ஒரு படம் பண்ணனும்!’’

No comments:

Post a Comment