Monday 23 April 2012

ஊ.....ல... லா விமர்சனம்


நடிகர்கள் :     ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா, சேகர் பிரசாத், தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு 
இயக்குனர் :  ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா
இசை :          சேகர் சந்திரா
ஓளிப்பதிவு :  ஆர்.ஜி.சேகர்

எந்நேரமும் பெண்கள், பெண்களை ஒட்டியே தன் உலகம் என்று நினைக்கிற ப்ளேபாய் கதைதான் ஊர்வசி லதா லலிதா லாவண்யா. 

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் பெண்களோடு கழிக்க நினைத்து, பெண்கள் பின்னாலேயே சுற்றுகிறார் நாயகன் சூர்யா. நவக்கிரகத்தை சுத்துறதைவிட கர்ப்ப கிரகத்தை சுத்துவதே மேல் என்பதுபோல, எந்த பெண்ணுமே அவரை பார்க்காத நேரத்தில் நாயகி ப்ரித்தியை தேர்ந்தெடுத்து தனது வலையை விரிக்கிறார்.

வலையில் விழும் ப்ரித்தி சூர்யாவை உண்மையாக நேசிக்க, சூர்யாவோ விளையாட்டுத் தனமாய் இருக்கிறார். ஒரு கட்டத்தில் ப்ரித்தியை சூர்யா கழட்டிவிடுகிறார்.

முன்னர் இருவரும் நெருக்கமாக இருந்த நேரத்தில் சூர்யா தற்பெருமைக்காக படம் பிடித்து வைத்திருந்த வீடியோ அவருக்கே தெரியாமல் வெளியாகிறது. இச்சம்பவம் ப்ரித்தியின் வாழ்க்கையும் அவர் குடும்பத்தையும் புரட்டிப் போடுகிறது. அதன் பின்னர் ப்ரித்தி என்ன ஆனார்? சூர்யா, ப்ரித்தி சேர்ந்தார்களா என்பதுதான் முடிவு.

ஹீரோ சூர்யாவாக இயக்குனர் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா. அவரே படத்தை இயக்கியும் இருக்கிறார். யதார்த்தமான ஒரு மிடில் கிளாஸ் பையனாக நடிக்க நினைத்ததுக்காகவே வாழ்த்துக்கள்.

நண்பனோடு ஊர் சுற்றும் காட்சிகளிலும், அப்பாவை வெறுப்பேற்றும் காட்சியிலும் மட்டும் ரசிக்க வைக்கிறார். காதல் காட்சிகளில் இன்னும் ஈர்த்திருக்க வேண்டும்.

நாயகி ப்ரித்தியாக திவ்யா பண்டாரி. நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம். நடிக்கவும் செய்திருக்கிறார். அதுவும் தன்னைப் பற்றிய வீடியோ இன்டர்நெட்டில் பரவிய பிறகு, அப்பாவிடம் சிடுசிடுவென்று நிற்பதும், சாப்பாட்டுக்கு உப்பு இல்லமா என்று அப்பா சொன்னதும், உப்பு இல்லன்னா சாப்பிட மாட்டியானு சாப்பாட்ட தூக்கி போட்டுவிட்டு அழுவதும் நல்ல நடிப்பு.

ஏற்கெனவே நிறைய படங்களில் காமெடியன்கள் செய்த அதே வேலையைத்தான் இதிலும் கஞ்சா கருப்பு செய்திருக்கிறார். ஹீரோயினை ஒரு தலையாக விரும்பும் காமெடியன், பிச்சைக்காரர்களோடு குப்பைத் தொட்டியில் ஒளிந்திருக்கும் காட்சி மட்டும் சிரிக்க வைக்கிறது.

படத்தில் தேர்ச்சியான நடிப்பு என்றால் ஹீரோவின் அப்பாவாக வரும் தலைவாசல் விஜய்தான். வேலைக்கு செல்லாமல் வீட்டில் சும்மா இருக்கும் மகனிடம் சுண்ணாம்பு வாங்கி குடுத்து வெள்ளையடி என்று சண்டை போடுவதும், பொண்டாட்டி இல்லாத வீட்டில் சமைக்க கஷ்டப்படுவதும் என ஆங்காங்கே அனுபவ நடிப்பை தந்திருக்கிறார்.

ஹீரோவுடைய தம்பியாக வரும் கே.எஸ்.மோனிஸ், நண்பனாக வரும் சேகர் பிரசாத், ஹீரோயினுடைய அப்பா ‘பட்டிமன்றம்’ ராஜா, அவர்களது பக்கத்து வீட்டில் இருக்கும் சிட்டி பாபு மற்றும் அவருடைய மகள் என படத்தில் வரும் சிறு சிறு பாத்திரங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன.

அதிலும் சிட்டிபாபு பாய் ப்ரெண்டில் இருக்கும் நன்மையை பட்டியல் போடும்போது கலக்கல். கஞ்சா கருப்பின் எடுபிடியாக வரும் பக்கோடா பாண்டி அப்பப்ப அடிக்குற பஞ்ச் வசனம், விஷுவல் ரீதியான காமெடி என்று ஆங்காங்கே மட்டும் சொல்லும்படி இருக்கிறது.

சேகர் சந்திராவின் இசையின் பின்னணியில் ஓட்டம் இல்லை. பாடல்களிலும் பெரிதாக ஈர்க்கும்படி இல்லை. ஏதோ... ஏதோ.. பாடல் மட்டும் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் இனிமை.

ஆர்.ஜி.சேகரின் ஒளிப்பதிவு அரங்கத்திற்குள்ளாக வரும் இரு பாடல்களில் மட்டும் ரசனையாக இருக்கிறது. மற்றபடி சாதாரணமாகவே இருக்கிறது.

படத்தில் ஆழமாக வரவேண்டிய கிளைமாக்ஸ் காட்சியிலுமா காமெடி வைக்க வேண்டும் என நம்மை நெளிய வைக்கிறார் இயக்குனர். உணர்வுப்பூர்வமாக முடிய வேண்டிய படத்தை கடைசியில் காமெடியாக்கியதால் நம் மனதில் ஒட்டாமல் போகிறது. நிறைய இடங்களில் காமெடி என்ற பெயரில் ஈவ் டீசிங் செய்திருக்கிறார்கள்.

ஹீரோ எந்நேரமும் பைக்கில் நண்பனோடு பெண்கள் பின்னாடியே சுற்றிக்கொண்டே இருப்பது சலிப்பாக இருக்கிறது. ஹீரோயினுடைய அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும் காட்சியை இவ்வளவு காமெடியாகவா எடுக்க வேண்டும் என தோன்றுகிறது.

ஹீரோயின் ஹீரோவிடம் பாய் ப்ரெண்டாக இருக்க நிறைய ரூல்ஸ் போடுவதும், பின் அவரே அதை மீறுவதும், ஹீரோவுக்கு கிப்ட் கொடுக்க சின்ன சின்ன வேலைகள் செய்து பணம் சேர்ப்பது என்று ரசிக்க வைக்கின்ற கவிதையான இடங்கள் படம் முழுக்க இல்லை என்பது படத்திற்கு ஒரு குறையே.

No comments:

Post a Comment